இறந்தவர் குடும்பத்தினரை சந்திக்க ஆக்ரா செல்ல முயன்ற பிரியங்கா தடுத்து நிறுத்தம்

லக்னோ: போலீஸ் காவலில் இறந்தவர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தி ஆக்ராவில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். உத்தர பிரதேசத்தில் ரூ.25 லட்சம் திருட்டு வழக்கில் கைதான துப்பரவு தொழிலாளி அருண் வால்மிகி போலீஸ் காவலில் விசாரணையின் போது உயிரிழந்தார். அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று ஆக்ரா சென்றார். அப்போது லக்னோ - ஆக்ரா எக்ஸ்பிரஸ்வேயில் உள்ள சுங்கச்சாவடியில் போலீசார் பிரியங்காவை தடுத்து நிறுத்தினர்.

அங்கு 2 மணி நேரம் வரை காத்திருக்க வைக்கப்பட்டார். பிரியங்காவை அவரது அலுவலகத்துக்கு அல்லது வீட்டிற்கு செல்லும்படி போலீசார் கேட்டுக் கொண்டனர். இதற்கு அவர் மறுத்த பிறகு, போலீசார் அவரை அழைத்து சென்றனர். அவர் மீது வழக்கு பதியவும் இல்லை. அவரை கைது செய்யவும் இல்லை. உ.பி. காவல் துறையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து பிரியங்கா காந்தி அவரது டிவிட்டரில், ‘அருண் வால்மிகி குடும்பத்தினர் நீதிக்காக போராடுகின்றனர். அவர்களுக்கு ஆறுதல் கூற விரும்புகிறேன். உ.பி., அரசு பயப்படுவது ஏன்? என்னை தடுத்து நிறுத்தியது ஏன்?’என கூறியுள்ளார்.

முதல்வர் யோகி கூறுகையில், `சட்டம், ஒழுங்கு அனைத்துக்கும் மேலானது. அதனுடன் விளையாட யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்,’ என்றார். இந்த இறப்பு தொடர்பாக எந்தவொரு அரசியல் தலைவரும் ஆக்ரா செல்ல அனுமதிக்க வேண்டாம் என்று நீதிமன்றம் கேட்டுக் கொண்டதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. அதன்பிறகு, ஆக்ரா செல்ல பிரியங்காவுடன் 5 பேருக்கு போலீசார் அனுமதி வழங்கினர்.

Related Stories: