ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பதிலடி: பெண்களுக்கு 50% சீட் ஏற்கனவே கொடுத்திருக்கோம்

போபால்: உபி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசில் 40 சதவீதம் சீட் பெண்களுக்கு தரப்படும் என பிரியங்கா காந்தி கூறியது குறித்து பதிலளித்த மபி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ‘இடைத்தேர்தலில் நாங்க ஏற்கனவே பெண்களுக்கு 50 சதவீதம் சீட் கொடுத்திருக்குமே’ என பதிலளித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலத்தில் 3 சட்டப்பேரவை மற்றும் ஒரு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 30ம் தேதி நடக்க உள்ளது. இதற்காக அலிராஜ்புர் மாவட்டத்தில் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பாஜ வேட்பாளரை ஆதரித்து நேற்று பிரசாரம் செய்தார்.

அப்போது, உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசில் 40 சதவீதம் சீட் பெண்களுக்கு வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அறிவித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு சிவராஜ் சிங் சவுகான், ‘‘பிரியங்கா என்ன சொன்னார் என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால், மபி இடைத்தேர்தலில் நாங்கள் ஏற்கனவே 50 சதவீத சீட் பெண்களுக்கு தந்துள்ளோம். இங்கு தேர்தல் நடக்க உள்ள 4 தொகுதியில் 2 பெண் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளோம்’’ என்றார்.

அதே சமயம், பிரியங்காவின் அறிவிப்பு மபியில் மட்டுமல்ல மேற்கு வங்கத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அம்மாநிலத்தில் ஆளும்கட்சியான திரிணாமுல் காங்கிரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பதிவில், ‘‘எங்கள் கட்சிதான் முதலில் மக்களவை தேர்தலில் பெண்களுக்கு 40 சதவீத சீட் கொடுத்தது. எங்கள் பாணியைதான் காங்கிரஸ் காப்பி அடித்துள்ளது. ’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: