போதைப்பொருள் வழக்கில் கைதான ஆர்யன் கானுக்கு மீண்டும் ஜாமின் மறுப்பு: மும்பை சிறப்பு நீதிமன்றம்

மும்பை: போதைப்பொருள் வழக்கில் கைதான ஆர்யன் கானுக்கு மீண்டும் ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் உள்பட பலர் போதை மருந்து பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பையில் சொகுசு கப்பல் ஒன்றில் போதை மருந்து கேளிக்கை விருந்தில் பங்கேற்றதாக ஆர்யன் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்யன் கான் உள்ளிட்ட 3 பேருக்கு ஜாமின் வழங்க மும்பை போதைப்பொருள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மும்பை சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் அக்டோபர் 3ஆம் தேதி, தேசிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசால் கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், சொகுசு கப்பல் பார்ட்டியில் நடந்த போதைப்பொருள் பயன்பாடு வழக்கில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட ஆர்யன் கான் ஜாமீன் கேட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது ஜாமீன் மனுவை விசாரித்த கோர்ட்டு ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது.

மேலும் அவரை 14 நாட்கள் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அவர் தற்போது சிறையில் உள்ளார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஆர்யன் கான் உள்ளிட்டோர் இரண்டாவது முறையாக மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ஆர்யன் கான் உள்ளிட்ட 3 பேருக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.

Related Stories: