குரும்பூர் கூட்டுறவு வங்கி நகை மோசடி; டெபாசிட் பணத்தை சினிமா எடுக்க வட்டிக்கு கொடுத்த நிர்வாகிகள்: பினாமி பெயர்களில் சொத்து வாங்கி குவிப்பு

உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் நடந்த பண மோசடி தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. நாளுக்கு நாள் மோசடி செய்த தொகை கூடிக்கொண்டே இருக்கும் நிலையில் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். மோசடி குறித்து தெரியவந்ததும் வங்கி தலைவர் முருகேசப்பாண்டியன், செயலாளர் தேவராஜ், துணைச் செயலாளர் ஜான்ஸி சந்திரகாந்தா ஞானபாய் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டனர். ஆழ்வை. வட்டார கூட்டுறவு வங்கி கள அலுவலர் ஆழ்வார் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து திருச்செந்தூர் கிளையில் பணியாற்றும் ஆய்வாளர்கள் இருவர் இந்த மோசடிக்கு துணையாக இருந்ததாக விசாரணையில் தெரியவரவே இருவரையும் விசாரணை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். வங்கியில் முகாமிட்டு தொடர் ஆய்வு, விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மோசடியில் ஈடுபட்ட பணத்திற்கு ஈடாக நிர்வாகிகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யும் வகையில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வணிக குற்றவியல் புலனாய்வுப்பிரிவு பொறுப்பு டிஎஸ்பி பாண்டிச்செல்வம் தலைமையிலான போலீசார் பணியாளர் மோசடி, நம்பிக்கை மோசடி, குற்றச்சதித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கூட்டுறவு வங்கி தலைவர் முருகேசப்பாண்டியனை கடந்த அக்.13ம் ேததி கைது செய்தனர். அத்துடன் செயலாளர், துணைச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளைத் தேடி வரும் நிலையில் நகை மோசடி குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

வாடிக்கையாளர்களிடம் பெற்ற டெபாசிட் பணத்தில் ரூ.50 கோடியை திருச்செந்தூர் தொழிலதிபர் ஒருவர் மூலம் சினிமா எடுக்க 2 பேருக்கு முக்கிய நிர்வாகிகள் கடன் கொடுத்துள்ளனர். சினிமா உலகை பொறுத்தவரை படம் எடுக்க ரூ.20 கோடி கொடுக்கும் நபருக்கு 6 மாதம் கழித்து ரூ.25 கோடியாக வழங்குவார்கள் என்று கேள்விப்பட்டு ரூ.50 கோடியை குரும்பூர் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் சினிமா பிரமுகர்களுக்கு வட்டிக்கு கொடுத்துள்ளனர். ஆனால் கொரோனா காலத்தில் சினிமாதுறை முடங்கியதால் படப்பிடிப்புகள் நடக்கவில்லை. இதனால் இவர்கள் கொடுத்த பணம் திருப்பி வரவில்லை.

மேலும் இவர்கள் வாடிக்கையாளர்களின் டெபாசிட் பணத்தை வைத்து பல இடங்களில் பினாமி பெயர்களில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதும், விசாரணையில் தெரியவந்துள்ளது. தலைமறைவாகியுள்ள செயலாளரும், துணைச் செயலாளரும் கைதானால் இந்த விவகாரத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

Related Stories: