உலக கோப்பை டி 20 ஒரே நாளில் 6 போட்டிகள்; சுருக்கமான ரிசல்ட்

துபாய்: டி-20 உலகக்கோப்பை தொடர் போட்டிகள் அக்டோபர் 17-ம் தேதி தொடங்கியது. சூப்பர் 12 சுற்றுக்கு முன்பு, 8 அணிகளுக்கு இடையேயான தகுதிச்சுற்று போட்டிகள், சூப்பர் 12 சுற்றுக்கு தேர்ச்சி பெற்ற அணிகளுக்கு இடையான பயிற்சி ஆட்டங்கள் ஆகியவை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 6 போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தென்னாப்ரிக்கா என முக்கிய அணிகளின் போட்டிகளும், தகுதிச்சுற்று போட்டிகளும் நடைபெற்றன. அந்த 6 போட்டிகளின் முடிவுகள் பற்றி சுருக்கமான தகவல்கள்...

துபாய் ஐசிசி அகாடமியில் பயிற்சி ஆட்டங்களின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியை பாகிஸ்தான் எதிர்கொண்டது.  டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்தது. வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் சோபிக்காத நிலையில், அந்த அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் கேப்டன் பாபர் அசாம் அரை சதம் கடந்தார். அவரோடு, கூட்டணி சேர்ந்த பகர் ஜமான் 46 ரன்கள் எடுத்து  15.3 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

அபுதாபி டாலரென்ஸ் ஓவல் மைதானத்தில் நடந்த 2வது பயிற்சி ஆட்டத்தில் தென்னாப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா  பேட்டிங் செய்தது.  மார்க் ரம் 48 ரன்கள் சேர்க்க, அந்த அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தானின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்ததால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. மூன்றாவது பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 158 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர் வார்னர் முதல் பந்திலேயே கோல்டன் டக்-அவுட்டானார். அவரை அடுத்து களமிறங்கியவர்கள் சுதாரித்து ஆட, கடைசி ஓவர் வரை போட்டி பரபரப்பாக சென்றது. 1 பந்து மீதமிருக்கையில் ஆஸ்திரேலிய அணி இலக்கை எட்டி, 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

நேற்றைய தினத்தின் கடைசி பயிற்சி ஆட்டம் துபாய் ஐசிசி அகாடமியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கேப்டன் கோலி, ஃபீல்டிங் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த் இங்கிலாந்து வீரர்களில் டாப் ஆர்டர் சரிய, மிடில் ஆர்டர் பேட்டர்கள் பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டன், மொயின் மொலி மட்டும் நிதானமாக ரன் சேர்க்க, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து. இலக்கை சேஸ் செய்த இந்தியாவுக்கு, கே.எல் ராகுல், இஷான் கிஷன் தந்த அதிரடி ஓப்பனிங்கால் சிறப்பான தொடக்கம் இருந்தது. இதனால் 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்து இந்த டி-20 உலக்ககோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

அபுதாபி சையத் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய தகுதிச்சுற்று போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக டாஸ் வென்ற நெதர்லாந்து பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. எளிதான இலக்கை துரத்திய அயர்லாந்து 15.1 ஓவர்களிலேயே நெதர்லாந்தை எளிதில் வென்றது. இதுபோல் இரண்டாவது மற்றும் கடைசி தகுதிச்சுற்று போட்டியில், இலங்கை, நமிபியா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நமிபியா அணி, தட்டுத்தடுமாறி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து களமிறங்கிய இலங்கை அணி அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் களமிறங்கிய அவிஷ்கா ஃபெர்னாண்டோ, பனுகா ஆகியோர் நிதானமாக ஆடி வெற்றியை உறுதிப்படுத்தினர்.

Related Stories: