பாரா ஜுடோ சாம்பியன்

நன்றி குங்குமம் தோழி

செப்டம்பர் 25 முதல் 29 வரை லண்டன் பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. அனைத்து நாடுகளும் பங்கேற்ற இப்போட்டிகளில் பாரா ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியா சார்பாக 20 பேர் கலந்து கொண்டதில் தமிழ்நாட்டில் இருந்து மூவர் தேர்வாகி லண்டன் சென்று வந்தனர். அதில் சேலத்தைச் சேர்ந்த சுபாஷினி, திருநெல்வேலியைச் சேர்ந்த மனோகரன் இருவரும் தங்கமும், பாண்டிச்சேரியைச் சேர்ந்த முத்துலெட்சுமி வெள்ளிப் பதக்கத்தையும் வென்று இந்தியா திரும்பினர்.

சென்னை ராணிமேரி கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துவரும் முத்துலெட்சுமியை சந்தித்தபோது… ‘‘6 சர்வதேசப் போட்டிகளில் விளையாடினால் ஒலிம்பிக்கில் பங்கேற்கலாம். நான் இதுவரை 2 தேசியப் போட்டிகள் மற்றும் 1 சர்வதேசப் போட்டியினைச் சந்தித்திருக்கிறேன்’’  என ேபச ஆரம்பித்தார்.      

‘‘பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில், 56 கிலோ எடைப் பிரிவில் தாய்லாந்து வீராங்கனையை எதிர்கொண்டு வெற்றி பெற்றேன்’’ என்றார். ‘‘பிறக்கும்போதே எனக்கு பார்வை இல்லை. மூன்று வயதில் மருத்துவர்கள் அறிவுறுத்தலில், வலது கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு லென்ஸ் வைக்கப்பட்டதில், ஒரு கண் மட்டும் நிழலாய் உருவங்கள் தெரிய இடது கண்ணில் சுத்தமாகப் பார்வையில்லை. அப்பா, அம்மா, அண்ணன், நான் என அளவான குடும்பம் என்னுடையது. அப்பா ஆட்டோ ஓட்டுநர். நான் எட்டாவது படிக்கும்போதே நெஞ்சுவலியில்திடீர் என அப்பா இறந்துவிட, குடும்பம் வறுமையில் சுழன்றது. அப்பாவின் பிரிவு என்னை ரொம்பவே பாதித்தது’’ என்கிறார் அவரின் நினைவில் மூழ்கியவராய்.

‘‘அம்மா ஹவுஸ்கீப்பிங் தொடர்பான ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை  செய்து கொண்டே என்னை பாண்டிச்சேரி அரசுப் பள்ளியில் படிக்க வைத்தார். தொடர்ந்து காலடிப்பேட்டை மற்றும் வேலூரில் இருந்த பார்வையற்றோர் பள்ளி விடுதிகளில் சேர்ந்து 7 முதல் 10ம் வகுப்பை முடித்தேன்.

ஸ்க்ரைப் உதவியோடு பத்தாம் வகுப்புத் தேர்வில் 357 மதிப்பெண்கள் எடுத்தேன். அதைத் தொடர்ந்து தேனாம்பேட்டையில் உள்ள லிட்டில் ஃப்ளவர் கான்வென்டில் பிரெயில் முறையில் படித்து பனிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளை எழுதியதில் 923 மதிப்பெண்கள் கிடைத்தது. வரலாறு பாடத்தில் எனக்கு 195 மதிப்பெண்கள் கிடைக்க, சென்னை ராணிமேரி கல்லூரியில் வரலாற்றுத் துறை சார்ந்த பிரிவை எடுத்து படிக்கத் தொடங்கினேன். அம்மா வேலை செய்யும் நிறுவனத்தில் இருப்பவர்களின் உதவியால் சென்னை மைலாப்பூரில் இருக்கும் லோட்டஸ் பார்வையற்றோர் இலவச தங்கும் விடுதியில் இருந்து கல்லூரிக்குச் சென்று வருகிறேன்’’ என தன்னைப் பற்றி சுருக்கமாக விவரித்தார்.

‘‘கல்லூரியில் படிக்கும்போதே ஜூடோ விளையாட்டில் ஆர்வம் ஏற்பட நானும் அதில் தேர்வானேன். உமாசங்கர் மாஸ்டர் மூலமாக முறையான பயிற்சிகளை மேற்கொண்டு விளையாடி வருகிறேன். இதில் ரொம்பவும் முக்கியமானது வலிக்காமல் எதிரியை தாக்குவது. அதற்கென சில டெக்னிக்ஸ் உண்டு. அதை பயன்படுத்தி எதிரியை தாக்கி கீழே தள்ள வேண்டும். காமன்வெல்த் விளையாட்டில் வெள்ளி வென்றதில் அம்மாவுக்கு ரொம்பவே பெருமை’’ என்கிறார். தான் படித்த பள்ளி, கல்லூரியிலும் சக மாணவர்களும், ஆசிரியர்களும் என்னை ரொம்பவே பாராட்டினார்கள் என்கிறார் மேலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவராய்.

‘‘துவக்க காலத்தில் பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டதன் விளைவாய், டெல்லியில் நடந்த தேசிய விளையாட்டில் 60 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வாங்கினேன். அதைத் தொடர்ந்து நடைபெற்ற சர்வதேசப் போட்டிக்கு நான் தேர்வாகியும் பாஸ்போர்ட் இன்மையால் ஏற்பட்ட கால விரயத்தால் என்னால் கலந்துகொள்ள முடியாமல் போனது’’ என்றவர், தொடர்ந்து உ.பி.யில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் இரண்டு முறை கலந்து கொண்டு விளையாடிய மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டார்.

தற்போது ஹைதராபாத்தில் நடந்து வரும் 8வது தேசிய அளவிலான பாரா ஜூடோ போட்டியிலும் பங்கேற்று மீண்டும் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருக்கும் முத்துலெட்சுமி காமன்வெல்த் விளையாட்டிற்காக தான் லண்டன் வரை ஃப்ளைட்டில் சென்று வந்தது நல்ல அனுபவமாக அமைந்தது என்கிறார். தொடர்ந்து விளையாடி, இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஆர்வமும் தனக்கு இருப்பதாகத் தெரிவித்து நம்மிடம் விடைகொடுத்தார் இந்த ஜூடோ சாம்பியன்.

மகேஸ்வரி

ஜி.சிவக்குமார்

Related Stories: