பெண் மைய சினிமா-சண்டேஸ் அண்ட் சைபிள்

நன்றி குங்குமம் தோழி

வாழ்க்கையில் இழந்தவற்றை திரும்ப பெறுவது கடினம். ஆனால், இழந்துவிட்ட குழந்தைப் பருவத்தைத் திரும்ப பெறுவதற்கும், இருக்கின்ற குழந்தைப் பருவத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் நமக்காக சில படங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது ‘சண்டேஸ் அண்ட் சைபிள்’. சைபிள் என்ற பன்னிரெண்டு வயதான சிறுமியைச் சுற்றி படத்தின் கதை நிகழ்கிறது. பியர் என்ற பிரெஞ்ச் போர் விமானிக்கு வயது 30. போரில் வியட்

நாமைச் சேர்ந்த ஒரு பெண் குழந்தையைக் கொன்றுவிட்டதாக எப்போதும் குற்றவுணர்வில் உழன்றுக் கொண்டிருக்கிறான். ஒருவருடமாக அவன் வீட்டை விட்டு வெளியே கூட வருவதில்லை. அந்தக் குழந்தையைக் கொன்ற நிகழ்வைத் தவிர்த்து அவனுடைய கடந்த காலம் மொத்தமும் அவனுக்கு மறந்து போகிறது.

அவனுக்குச் சிகிச்சை அளிக்க பேரழகியான ஒரு நர்ஸ் வருகிறாள். அவள் பியரைக் குழந்தையைப் போல கவனித்துக்கொள்கிறாள். இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது. காதல் வந்த காளையாக துள்ளிக்குதிக்க முடியாமல், தன்னுடைய குற்றவுணர்வினால் எப்போதும் சோர்விலேயே இருக்கிறான் பியர். அவனைத் தேற்ற முயற்சித்து தோல்வியடைகிறாள் அந்த நர்ஸ். மனநிலை ஓரளவுக்குச் சரியான பிறகு ஆசுவாசத்திற்காக வீட்டை விட்டு வெளியே வருகிறான் பியர். ரயில் நிலையத்திலிருக்கும் பெஞ்ச்சில் அமர்ந்து வருவோர் போவோரை வேடிக்கைப் பார்ப்பதில் அவனுடைய நாட்கள் கழிகிறது.

அப்படி ஒரு நாள் அவன் ரயில்நிலையத்தில் அமர்ந்திருக்கும் போது சைபிளைத் தந்தையுடன் சந்திக்கிறான். பாட்டியாலும், அம்மாவாலும் கைவிடப்பட்ட ஒரு குழந்தை அவள். போதிய வருமானம் இல்லாததால் தந்தையாலும் அவளை கவனித்துக்கொள்ள முடிவதில்லை.

அதனால் சைபிளை அனாதை விடுதியில் சேர்த்துவிடுவதற்காக இருவரும் அங்கே வந்திருக்கிறார்கள். சைபிளுக்கு விடுதியில் சேர விருப்பமில்லை. ஆனால், வலுக்கட்டாயமாக சேர்த்துவிடுகிறார் தந்தை. ‘வார வாரம் விடுதிக்கு வந்து உன்னைப் பார்க்கிறேன்...’ என்று சைபிளிடம் வாக்கு கொடுக்கிறார்.

இதையெல்லாம் பின் தொடர்ந்து வரும் பியர் கவனிக்கிறான். நாட்கள் ஓடுகிறது. வாக்கு கொடுத்த தந்தை திரும்பி வருவதே இல்லை. யாருமற்ற நிஜ அனாதையாகிறாள் சைபிள். போரில் தான் கொன்ற குழந்தையை பியருக்கு நினைவுபடுத்துகிறாள் சைபிள். தனியாக சோகத்தில் வாடும் சைபிளுக்கு ஆறுதலாக விடுதிக்குச் செல்கிறான் பியர். ‘உன் அப்பாவால் வரமுடியவில்லை. அதனால் என்னை அனுப்பினார்...’ என்று சைபிளிடம் பொய் சொல்கிறான். விடுதிக்காப்பாளரிடம் ‘நான் சைபிளின் தந்தை...’ என்று இன்னொரு பொய்யைச் சொல்லி அவளை வெளியே அழைத்துச் செல்கிறான்.

சைபிளும் அவனுடன் எந்த மறுப்புமின்றி செல்கிறாள். மனதளவில் அநாதரவான பியரும், உறவளவில் அநாதரவான சைபிளும் வயது பேதமின்றி நெருங்கிய நண்பர்களாகிவிடுகிறார்கள். ஒவ்வொரு ஞாயிறும் விடுதிக்குச் சென்று சைபிளை வெளியே அழைத்துச் செல்கிறான் பியர். சைபிளுடனான பொழுதுகள் பியரை உற்சாகப்படுத்துகின்றன. ஞாயிறு முழுவதும் சைபிளுடன் கதை பேசி, விளையாடி மகிழ்ச்சியில் திளைக்கும் அவனுக்குக் குற்றவுணர்வு விலகுகிறது. மனநிலை சரியாகிறது.

இந்நிலையில் இந்த விஷயம் பியரின் காதலிக்குத் தெரிய வருகிறது. அவள் பியரைச் சந்தேகிக்கிறாள்.டாக்டர் பெர்னார்ட் என்பவரிடம் இந்த விஷயத்தைச் சொல்கிறாள். அந்த டாக்டருக்கு பியரின் காதலியான நர்ஸின் மீது ஒரு கண் உண்டு. அவளை பியர் தட்டிச் சென்று விட்டானே என்ற ஆற்றாமையில் இருந்தவருக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. அதை பயன்படுத்திக்கொள்கிறார்.

‘சைபிள் என்ற குழந்தைக்கு மனநலம் பாதிக்கப்பட்ட பியர் என்பவனால் பாதிப்பு இருக்கிறது’ என்ற குற்றச்சாட்டை போலீஸிடம் கொடுக்கிறான் அந்த டாக்டர். விடிந்தால் கிறிஸ்துமஸ். சைபிளுக்கு வித்தியாசமான பரிசைத் தர விரும்புகிறான் பியர். தேவாலய கோபுர உச்சியில் இருக்கும் சேவல் பொம்மையை எடுத்து, அவளுக்குக் கொடுத்தால் மிகவும் மகிழ்வாள் என்று நினைக்கிறான். அந்த பொம்மையை எடுக்க ஏதுவாக ஒரு கத்தியை பயன்படுத்துகிறான். சைபிளை பார்ப்பதற்காக அந்த சேவல் பொம்மையோடு திரும்பும் வழியில், அவனிடம் கத்தி இருப்பதை கண்டு போலீஸ் சந்தேகிக்கிறது. எந்தக் கேள்வியையும் கேட்காமல் அவனைச் சுட்டுக் கொல்கிறது.

பியர் இறந்துவிட்ட தகவலைக் கேட்டு அவனின் காதலியும், சைபிளும் கதறுகிறார்கள். மனதை அறுக்கும் அந்த அழுகையுடன் திரையில் இருள் கவிழ்கிறது. முதன் முதலாக சைபிளும் பியரும் சந்தித்தபோது, பியரிடம் அந்த சேவல் பொம்மை வேண்டுமென்று கேட்பாள் சைபிள். அவனும் அதை எடுத்துத் தருகிறேன் என்று வாக்குக் கொடுப்பான். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் போதுதான் அவன் கொல்லப்படுகிறான். குழந்தையைப் போன்று மனமுடையவர்கள் இந்த உலகில் எப்படி புரிந்து கொள்ளப்படுகிறார்கள் என்பதற்கு இந்தச் சம்பவம் நல்ல உதாரணம். சைபிள் போன்ற அனாதையாக்கப்படும் சிறுமிகள் இங்கு ஏராளம். அவர்களின் உள்ளார்ந்த விருப்பத்தையும் ஏக்கத்தையும் இப்படம் அடிக்கோடிட்டுக் காட்டுவதால் நமக்கும் நெருக்கமாகிறது. பியராகவும், சைபிளாகவும் நடித்தவர்களின் நடிப்பும், பின்னணி இசையும், ஒளிப்பதிவும் அருமை. சிறந்த அயல்நாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் விருது உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றிருக்கும் இந்த பிரெஞ்ச் படத்தின் இயக்குனர் சர்ஜி போர்கினான்.

த.சக்திவேல்

Related Stories: