பட்சணம் செய்யப் போறீங்களா?

நன்றி குங்குமம் தோழி

*மைசூர்பாகை வெறும் நெய் மட்டும் சேர்த்துச் செய்யாமல் சிறிதளவு ரீஃபைண்ட் ஆயில் சேர்த்துச் செய்தால் மைசூர்பாகு மிருதுவாக இருக்கும். கடலை மாவுடன் முந்திரியை வறுத்துப் பொடித்து கலந்தால் சுவையாக இருக்கும். மைசூர்பாகை தாம்பாளத்தில் கொட்டியவுடன் அதன்மேல் சீனியைத் தூவி பிறகு துண்டு போடலாம்.

*ஜாங்கிரி தயாரிக்கும்போது உளுந்தம் மாவு மூன்று கப் அளவுக்கு, ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு கலந்து பிழிந்தால் உடையாமல் வரும்.

*அதிரசம் நைசாக வர ஒரு கிலோ அரிசிக்கு ஒரு கரண்டி உளுந்தம் பருப்பை வறுத்துச் சேர்த்து அரைத்தால் பஞ்சுபோல மிருதுவாக இருக்கும்.

*போளிக்கு மைதா மாவுடன் பால் பவுடரும் சேர்த்துப் பிசைந்தால் போளி மிருதுவாக இருக்கும்.

*லட்டுக்கான கடலை மாவு கரைசல், தோசை மாவு பதத்தில் இருந்தால், பூந்தி முத்து முத்தாக இருக்கும். லட்டு பிடிக்கும்போது ஏதாவது பழ எசன்ஸ் சேர்த்தால், சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

*அல்வா செய்யும்போது வெண்ணெயை அரைப் பதமாக உருக்கி, கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கிளறினால் ஸ்வீட் கமகமக்கும்.

*தேங்காய் பர்பிக்கு ஏலக்காயுடன் ஒரு கிராம்பும் சேர்த்துப் பொடித்துப் போட்டால் வாசனை தூக்கலாக இருக்கும்.

*சுசியன் செய்யும்போது கடலைப்பருப்பை வேக வைத்து, பின் அரைத்து நன்றாக வதக்கி விட வேண்டும். உடன் தேங்காய்ப்பூவையும் வதக்கினால், கெடவே கெடாது.

*ரவை கேசரி செய்து இறக்கும்போது இரண்டு ஸ்பூன் கடலை மாவை நெய்யில் வறுத்துப் போட்டுக் கலந்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

*பாதுஷா செய்யும்போது மாவில் ஒரு சிட்டிகை ஆப்ப சோடாவுடன் சிறிதளவு டால்டாவையும் சூடு செய்து சேர்த்துப் பிசைந்தால் பாதுஷா மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.

*சிப்ஸ், காராப்பூந்தி தயார் செய்யும்போது காரத்துக்கு மிளகாய்த்தூள் போடுவதற்குப் பதிலாக மிளகுத்தூள் சேர்த்தால், காரம் குறைவாக இருக்கும், உடலுக்கும் நல்லது.

*சீடை, தட்டை, முறுக்கு செய்யும்போது சிறிது தேங்காய்ப்பால் விட்டுச் செய்தால் சுவையாக இருக்கும்.

*தீபாவளிக்கு செய்த பட்சணங்கள் மிகுதியாக இருந்தால், அது கெடாமல் இருக்க ஒரு கைப்பிடி உப்பை சிறு மூட்டையாகத் துணியில் கட்டி, பட்சணம் உள்ள பாத்திரத்தில் போட்டு வைத்தால் புதிதாகச் செய்ததுபோல மணம் மாறாமல் இருக்கும்.

- ச.லெட்சுமி, செங்கோட்டை.

ஜீரணத்தை தூண்டும் இஞ்சி!

*தேங்காய் பர்ஃபி செய்யும்பொழுது பர்ஃபி முக்கால் பதம் வந்ததும் அரை கப் கெட்டியான தேங்காய்ப்பாலையும் சேர்த்துக் கிளறினால் பர்ஃபி மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும்.

*திருநெல்வேலி அல்வா மாதிரி செய்ய வேண்டும் என்றால் கோதுமை மாவை இறுத்து அதன்மேலாக நிற்கும் தண்ணீரில் சர்க்கரைப்பாகு வைத்துவிட்டுப் பிறகு அதில் கோதுமைப்பாலை ஊற்றிக் கிளறுங்கள்.

*ரவா லாடு, பயத்தம் மாவு லாடு செய்யும்போது சிறிதளவு பால் பவுடரும் சேர்த்துக் கலந்து செய்தால் சுவையும், அளவும் கூடும். முதலில் ஒரு தாம்பாளத்தில் அரைத்த சர்க்கரை, நெய், பால் பவுடரைப் போட்டு நன்றாகக் கலந்த பிறகு அத்துடன் அரைத்த ரவை அல்லது பயத்தம் மாவைப் போட்டு ஒரு கரண்டி ஆறின பாலைத் தெளித்து உருண்டை பிடித்தால் சுலபமாகப் பிடிக்கலாம்.

*வெல்லப்பாகு மீந்துவிட்டால் இஞ்சியைத் துண்டுகளாக நறுக்கி நெய்யில் வதக்கி பாகில் ஊற விட்டு சாப்பிட்டால் தீபாவளி பட்சணங்கள் சுலபமாக ஜீரணமாகும்.

- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

உருளைக்கிழங்கு குலாப்ஜாமூன்

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - 1 கப், மைதா - 3 தேக்கரண்டி, பேக்கிங் சோடா - 1 சிட்டிகை, எண்ணெய், நெய் பொரிக்க - தேவையான அளவு, சர்க்கரை - 2 கப், தண்ணீர் - 1 கப், பன்னீர் - சில துளிகள், குங்குமப்பூ - 1 சிட்டிகை (தேவைப்பட்டால்).

செய்முறை

உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து, மைதா மாவு, பேக்கிங் சோடா சேர்த்து பிசைந்துகொள்ளவும். பிறகு  சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். கடாயில் சர்க்கரைமற்றும் தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும்.

சர்க்கரை கரைந்ததும், அதில் பன்னீர், குங்குமப்பூ சேர்த்து தனியே வைக்கவும். பின்பு மிதமான தீயில் ஜாமூன்களை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். அதனை சர்க்கரை பாகில் போட்டு ஊறியதும் பரிமாறவும்.

கைக்குத்தல் அவல் லட்டு

தேவையான பொருட்கள்

கைக்குத்தல் அவல் - 200 கிராம், பொடியாக நறுக்கிய தேங்காய் - 1 கைப்பிடி அளவு, பேரீச்சைத் துண்டுகள் - 1 கைப்பிடி அளவு, ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன், வெண்ணெய் - 1 டீஸ்பூன், நெய் - 50 கிராம்.

செய்முறை

நறுக்கிய தேங்காயை ஒரு டீஸ்பூன் நெய்யில் வதக்கவும். அகன்ற பாத்திரத்தில் நெய் சேர்த்து சூடானதும் அவலை வறுக்கவும். இதனுடன் வறுத்த தேங்காய், ஏலக்காய்த்தூள், பேரீச்சைத் துண்டுகள், வெண்ணெய் சேர்த்து நன்கு கிளறவும். மற்றொரு பாத்திரத்தில் வெல்லம், தண்ணீர் சேர்த்து தேன் பதத்துக்குக் காய்ச்சி வடிகட்டி அதில் அவல் கலவையைச் சேர்த்துக் கிளறவும். மிதமான சூட்டில் உருண்டைகளாகப் பிடிக்கவும்.

- கவிதா சரவணன், திருச்சி.

லேகியம் இல்லாமல் தீபாவளியா?

மிளகு, சீரகம், தனியா, ஓமம் தலா - 4 டேபிள் ஸ்பூன், தேன் - 1 டீஸ்பூன், தூள் வெல்லம் - அரை கப், நல்லெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன், நெய்-சிறிது.மிளகு, சீரகம், தனியா, ஓமம் இவற்றை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். வெல்லத்தை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு நீர் ஊற்றி கொதிக்கவிடவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டவும். அரைத்த பொடியை வெல்லப்பாகுடன் கலந்து நன்கு சேர்ந்து வந்ததும் நல்லெண்ணெய், நெய் சேர்த்து கலந்து இறக்கி தேன் சேர்க்கவும். சுண்டைக்காய் அளவு உருண்டையாக உருட்டி, பலகாரம் சாப்பிடுவதற்கு முன்பு சாப்பிடவும். சாப்பிட்ட பின்பும் சாப்பிடலாம்.

- எஸ்.மேரி ரஞ்சிதம், நாட்டரசன்கோட்டை.

Related Stories: