வாழ்வென்பது பெருங்கனவு!

நன்றி குங்குமம் தோழி

கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்...

காஞ்சனா செந்தில்குமார்

‘‘உலகில் நாம் பார்ப்பவை, கேட்பவை கொண்டுதான் நமக்கான ஓர் உயர்ந்த வாழ்க்கையை அமைத்துக்கொள்வது குறித்து கனவு காண்கிறோம். கனவுகளை நனவாக்க முயற்சிகள் எடுத்தாலும், நம்முடைய சூழல் பொறுத்து அவை நிறைவேறுகிறது அல்லது கனவாகவே இருந்துவிடுகிறது. அகல்விளக்காய் இருந்தாலும் அதனைத் தீண்டிவிட ஒரு தூண்டுகோல் வேண்டும். அதுபோல் நம்மை ஊக்குவிப்பதற்கும் ஒரு சக்தி வேண்டும். அந்த சக்தியாக எனது கணவர் இருந்தார்.

இன்றைக்கு செந்கா குரூப் ஆஃப் குழுமங்களில் செந்கா இன்ஃபோடெக் நிறுவனத்தின் உரிமையாளராகவும், செந்கா நிதி லிமிடெட் இயக்குநராகவும் என்னால் பொறுப்பு வகிக்க முடிகிறது’’ என்கிறார் காஞ்சனா செந்தில்குமார். ‘‘ஆண்கள் மட்டுமே பொருளீட்டி வந்த காலத்தில் கூட ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வார்கள். இன்றைக்கு அனைத்துத் துறைகளிலும் பெண்கள் வெற்றி பெற்று வருகிறார்கள். அந்தப் பெண்களின் வெற்றிக்குப் பின்னால் நிச்சயம் ஓர் ஆண் இருப்பார்.

இரண்டு கைகள் இணைந்து தட்டினால் மட்டுமே ஓசை எழும். நமக்கான ஒரு பரஸ்பர துணை இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் நாம் நினைத்ததைச் சாதிக்க முடியும். சென்னை மாதவரத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் இரண்டாவது மகளாகப் பிறந்தேன். அண்ணன், தங்கையுடன் அன்பான குடும்பச் சூழலில் வளர்ந்த எனக்கு பள்ளிப் படிப்பை முடிச்சவுடன் பொறியியல் துறையை எடுத்து படிக்க வேண்டும் என்பது சிறுவயது கனவாக இருந்தது. அதற்கான வாய்ப்பு அமையவில்லை.

கல்லூரியில் சேர்ந்து பட்டப் படிப்பை முடித்தேன். எஞ்சினியராக முடியாவிட்டால் என்ன, ஒரு தொழிலதிபராக வேண்டும், சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என கனவுகள் மனதில் வந்து ரீங்காரமிடும்’’ என்றவருக்கு படிப்பு முடிச்ச கையோடு திருமணம் நடைபெற்றது. ‘‘என்னால்தான் எஞ்சினியராக முடியவில்லை. அதனால் எஞ்சினியர் மாப்பிள்ளையை கல்யாணம் செய்யணும்னு நினைச்சேன். நான் நினைத்தது போலவே நடந்தது.

என் கணவர் செந்தில்குமார் அதிக தன்னம்பிக்கை கொண்டவர். எடுத்த காரியத்தை முடிக்காமல் விடமாட்டார்.

அவரின் இந்த குணங்கள் என்னுடைய லட்சியங்கள் நிறைவேற ஒரு ஊந்துதலாக இருக்கும் என்ற நம்பிக்கை வந்தது. எங்களின் அன்பான குடும்ப வாழ்க்கைக்கு அடையாளமாய் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரு குழந்தைகள் பிறந்தனர். என் கணவரைப் பொறுத்தவரை மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்று நினைப்பவர். அவரின் வெற்றிக்குப் பின்னால் நான் ரொம்ப சாதாரணம். அவர் மாற்றுத்திறனாளி என்பதால், படிக்கெட்டில் ஏற முடியாது.

அவர் படித்த பள்ளியில் ஆறாம் வகுப்பிற்கு படி ஏறி தான் செல்லணும். அவரால் செல்ல முடியாது என்ற ஒரே காரணத்தால், அந்த பள்ளி அவரை நீக்கியது. ஆனால் அவரின் பிரச்னையை வேறு ஒரு பள்ளி நிர்வாகம் புரிந்து கொண்டது. அவருக்காகவே ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை கீழ்த்தளத்திலேயே நடத்தியுள்ளனர். பள்ளிப்படிப்பை முடித்தவர் குடும்பச்சூழல் காரணமாக ஆட்டோ ஓட்டியுள்ளார். ஆனால் உடற்தகுதியில்லை என்ற காரணத்தால் லைசென்ஸ் கொடுக்க மறுத்துவிட்டனர். அதனால் தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பணியில் சேர்ந்தார். வெளியே செல்ல முடியாது, என்றாலும் இருந்த இடத்திலேயே அவரின் திறமையை வெளிப்படுத்தினார்.

ஆனால் அங்கும் அவரின் குறையை காரணமாக சொல்லி பதவி உயர்வு மறுக்கப்பட்டது. அதனால் பணியிலிருந்து விலகிவிட்டார். இந்தச் சூழ்நிலையில்தான் எங்களுக்கு திருமணமானது’’ என்றவர் அவரின் ஒவ்வொரு வளர்ச்சிக்கும் பக்க துணையாக நின்றுள்ளார்.  ‘‘திருமணமானதும், பல பெண்கள் வீடு, குடும்பம்னு தங்கள் கனவுகளை புதைத்துவிடுகின்றனர். நான்கு சுவருக்குள் அடையாமல், சாதிக்க வேண்டும் என்ற என் எண்ணத்தை கணவரிடம் சொன்னேன். வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று நினைத்து, நிறைவேறாமல் தோற்றுப் போன பெண்களுக்கு வழிகாட்டியாகவும், பாலமாகவும், உந்துசக்தியாகவும் இருக்க வேண்டும்.

அவர்களுக்கு நம்மால் முடிந்த ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் காரணம். என் நோக்கத்தை புரிந்து கொண்டவர், வாழ்க்கையில் மட்டுமல்ல, எனது தொழிலிலும் உற்றத்துணையாக இருக்கும் உனக்கு என்ன செய்யத் தோன்றுகிறதோ அதைச் செய் நான் துணையாய் இருக்கிறேன் என்றார். அதில் உருவானதுதான் செந்கா இன்ஃபோடெக் மற்றும் செந்கா நிதி லிமிடெட். மத்திய அரசு வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் ஸ்மால் பேங்க் நிறுவனம். செந்கா இன்ஃபோடெக் நிறுவனத்தில் தற்போது அறுபது பெண்கள் பணியாற்றுகின்றனர்.

இந்நிறுவனத்தின் உரிமையாளராக மட்டும் இல்லாமல், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் ஸ்மால் பேங்கிங் (Small Banking) நிறுவனமான செந்கா நிதி லிமிடெட் நிறுவனத்திலும் ஓர் இயக்குனராகவும் பணியாற்றி வருகிறேன். நான் காணும் இந்த உலகங்களை நீயும் காண வேண்டும் என்ற பாடல் வரிகளுக்குஏற்ப என் நிறுவனங்களில் பணியாற்றும் சக பெண் ஊழியர்களையும் நான் வெளிநாட்டுக்கு செல்லும் போது, அவர்களுக்கும் அந்த வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய தற்போதைய கனவாக இருந்து வருகிறது.

இந்த வெளிநாட்டுசுற்றுப்பயணம் வாயிலாக வாழ்க்கை பரந்து விரிந்தது, வெளியில் மிகப்பெரிய வாய்ப்புகள் நமக்காக காத்திருக்கின்றன. எவ்வளவோ விஷயங்கள் உலகில் இருக்கின்றன. அதை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்  என்பதை சக ஊழியர்களுக்கு உணர்த்த விரும்புகிறேன்’’ என புன்னகையுடன் முடித்தார் காஞ்சனா செந்தில்குமார்.

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்

Related Stories: