ஸ்மார்ட் ஒர்க்கரா இருக்கவே விரும்புறேன்!

நன்றி குங்குமம் தோழி

சின்னத்திரை தொகுப்பாளர், நடிகை ஆர்த்தி சுபாஷ்

போட்டிகள் நிறைந்த இந்த உலகில் தன்னை தகவமைத்துக் கொள்வதற்காகவே சிலர் போராடி வாழ்ந்து வருகின்றனர். அப்படியெல்லாம் இல்லாமல் தன் துறையில் போட்டிகள் நிறைந்திருந்தாலும் அதை பெரும் பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல், தனி முத்திரை பதித்து பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தனக்கென்று ஓர் ரசிகர் பட்டாளமே வைத்திருக்கிறார் ஆர்த்தி சுபாஷ். ஆதித்யா டி.வியில் ‘டார்லிங் டம்பக்கு’, சன் லைப்பில் ‘சம்சாரம் அது மின்சாரம்’, சன் டி.வியில் ‘பாண்டவர் இல்லம்’, ‘வணக்கம் தமிழா’ என சன் குழுமத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், நடிகையாகவும் பிசியாக இயங்கி வருகிறார்.

“அப்பா திரைத்துறையை சார்ந்தவர். பல படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளராக இருக்கிறார். சிறுவயதிலிருந்தே அப்பாவைப் பார்த்து வளர்ந்ததால் எங்களை அறியாமலேயே நானும், அண்ணனும் திரைத்துறை மீது ஆர்வமானோம். பள்ளியில் படிக்கும் போது கூட பெரியவளானதும் வீஜே, நடிகையாகப் போகிறேன் என்று தான் சொல்லிக் கொண்டிருப்பேன்.

எத்திராஜ் கல்லூரியில் பி.ஏ. டூரிசம் & டிராவல் மேனஜ்மெண்ட் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது மக்கள் தொலைக்காட்சியில் வி.ஜே-க்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தான்  எனக்கும் பேச வரும் என்பதைத்  தெரிந்து கொண்டேன்.

இதையடுத்து புதிய தலைமுறை, பொதிகை தொலைக்காட்சிகளில் கல்லூரியில் படித்துக் கொண்டே பகுதி நேரமாக பணியாற்றினேன். கலப்படமற்ற தமிழ் பேச வேண்டும் என்ற கட்டாயத்தால் என்னைச் சுற்றி எல்லாமே தமிழாக மாறியது” என்று கூறும் ஆர்த்தி சன் குழுமத்தில் இணைந்தது பற்றிக் கூறினார். “வி.ஜேவாக இருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் அடுத்த கட்ட வளர்ச்சி என்றால், முதலில் பொரி தட்டுவது சன் டி.வி தான். எனக்கும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் முதலில் போன போது தேர்வாகவில்லை.

சில நாட்கள் கழித்து மறுபடியும் அழைப்பு வந்தது. ஆனால் அன்றோ எனக்கு கல்லூரியில் செமஸ்டர் தேர்வு இருந்தது. தேர்வா நடிப்பான்னு எனக்கு ஒரே குழப்பமா இருந்தது.  அப்பாகிட்ட கேட்டேன், ‘எது முக்கியம் என்று நீயே முடிவு செய்துக்கோ’ன்னு சொல்லிட்டார். என் நீண்ட நாள் கனவான சேனலின் ஆடிஷனுக்கு சென்றேன். ஆதித்யா டி.வியில் தொகுப்பாளராக வாய்ப்புக் கிடைத்தது. ஒன்றரை வருடம், ஆதித்யா டி.வி-யில் ‘டார்லிங் டம்பக்கு’ நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினேன். இது எனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்தது. மேலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானேன். குறிப்பாகக் குழந்தைகளிடம்.

ஒரு முறை காதலர் தினத்தன்று நானும், உத்ராவும் சினிமாக்கு போய் இருந்தோம். இடைவேளையில் ஒரு குழந்தை எங்களை அடையாளம் கண்டு, அம்மாவிடம் அறிமுகம் செய்து வைத்தாள். நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிய காலங்களில் கிடைக்காத அங்கீகாரம், சன் லைப்பில் ஒளிபரப்பான ‘சம்சாரம் அது மின்சாரம்’ நிகழ்ச்சி மூலம் கிடைத்தது’’ என்று கூறும் ஆர்த்தி, “யூடியூப் சேனலில் சும்மா ஜாலியாக ‘சென்னை மீம்ஸ்’ என்ற நிகழ்ச்சியை நண்பர்களுடன் சேர்ந்து செய்தேன். முதல் எபிசோடே நல்ல ஹிட். அதனால் தொடர்ந்து செய்து வந்தோம். இதே கான்செப்ட்டை தொலைக்காட்சியில் செய்தால் இன்னும் நல்ல ரீச் இருக்கும்ன்னு தோணுச்சு.

சன் லைப்பில் கேட்ட போது, அதையே அவங்களுக்கு சிறப்பு நிகழ்ச்சியா செய்ய சொன்னாங்க. நிகழ்ச்சி சூப்பர் ஹிட்டானது. மேலும் இளைஞர்களிடமும் என்னைக் கொண்டு சென்றது. இதைத் தொடர்ந்து சன் டி.வி-யில் ஒளிபரப்பாகும் ‘பாண்டவர் இல்லம்’ தொடரில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. முதலில் அந்த தொடரில் நாயகியின் தங்கை கதாபாத்திரத்திற்கு தான் தேர்வு செய்தாங்க. என் நடிப்பைப் பார்த்து இரண்டாவது நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கொடுத்தாங்க.

மூத்த நடிகர்களுடன் சேர்ந்து நடிப்பதால் இந்த துறையில் இப்போது தான் A,B,C,Dயினை கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொண்டு வருகிறேன்’’ என்றவர் தனக்கும், தன் தந்தைக்கும் இருக்கும் கலை உறவு பற்றிப் பேசினார். ”நடிப்பு துறைக்கு நான் வருவதை அப்பா விரும்பவில்லை. ‘வி.ஜே தானே உன்னோட ஆசை அதை மட்டும் பண்ணு’ என்று சொல்லும் போது எனக்கே கஷ்டமாக இருந்தது. நிறைய சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. வி.ஜே எனக்கு பிடித்த வேலை. அதை ஒதுக்கிவிட்டு நடிக்கணுமான்னு யோசித்து இருக்கேன். ஒரு கட்டத்தில் எனக்கு நடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

என் விருப்பத்தை அப்பாவிடம் தெரிவித்த போது, அவர் மறுக்கவில்லை. நடிப்பின் மீது எனக்கு இருக்கும் ஈர்ப்பை அவர் புரிந்து கொண்டு, ஏற்றுக் கொண்டார். நண்பர்களுடன் வெளியே செல்வது, வேலையில் தப்பான முடிவு எடுத்து பிறகு வருத்தப்படுவது போன்ற தவறான முடிவுகளை நான் எடுத்து இருக்கேன். அது தெரிந்தும் அப்பா என்னை திட்டியது கிடையாது. அதே போல் தனிப்பட்ட முறையில் நிறையப் பிரச்சினைகளை சந்தித்த போதும் அவர் தலையிட்டதில்லை. ஆனால் நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையை மட்டும் அவர் எனக்கு கொடுத்துக் கொண்டே இருந்தார்” என்றவர் நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கான பொறுப்புகள் பற்றி விவரித்தார்.

“லைவ் ஷோக்கள் பண்ணும் போது மிகவும் கவனமாக இருக்கணும். குறிப்பா வார்த்தைகளை திறமையாக கையாள வேண்டும். எதிர் முனையில் இருக்கும் நபர் எப்படிப் பேசினாலும் அதைப் பக்குவமாக அணுகணும். மேக்கப்பிலோ, உடையிலோ சின்ன குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்ளணும். பார்வையாளர்களுக்கு உண்மையாக இருக்கணும். சமூக செய்திகளோடு, நிகழ்ச்சியை சுவாரசியமாகக் கொடுக்க முயற்சிக்கணும். இது போன்று பல விஷயங்களை ஒவ்வொரு வி.ஜேக்களும் பின்பற்ற வேண்டும்” என்று கூறும் ஆர்த்தி நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி-யின் தீவிர ரசிகை. வாழ்வில் ஒரு முறையாவது அவரை சந்தித்துவிட வேண்டுமென்பது இவரது ஆசை.

‘‘எதிர்கால திட்டங்கள் என்று ஏதுமில்லை. அதை நினைத்து மன உளைச்சலாகி நிகழ்காலத்தைச் சரியாக வாழாமல் இருக்க நான் விரும்பவில்லை. தற்போது நடிப்பு, வி.ஜே தவிர சிலம்பம் மற்றும் விசிலடிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஸ்கேட்டிங்கும் சீக்கிரம் கத்துக்கனும். சின்னச் சின்ன விஷயங்களில்தானே அட்ராக்‌ஷன் இருக்கு. என்னை பொறுத்தவரை ஹார்டு ஒர்க்கரா இருப்பதை விட ஸ்மார்ட் ஒர்க்கரா இருக்க விரும்புறேன்’’ என்று சொல்லும் ஆர்த்திக்கு தன் பெயரில் ஒரு நிகழ்ச்சியினை தொகுத்து வழங்க வேண்டும் என்பதுதான் கனவாம்.

தொகுப்பு: அன்னம் அரசு

Related Stories: