இட்லி சந்தை!

நன்றி குங்குமம் தோழி

அதிகாலை 2 மணி கிரைண்டரில் சட்னி ஆட்டும் சத்தமும், மறுபக்கம் சாம்பார் சட்டியில் கொதிக்கும் வாசனையும் நம் நாசியை வருடியது. பெரிய அண்டாவில் இட்லி வெந்து கொண்டு இருந்தது. இட்லி வேக வேக அதனை சட்னி சாம்பாருடன் சேர்த்து பார்சல் செய்து கொண்டு இருந்தனர். தினமும் அதிகாலை இங்கிருந்து தான் கல்யாணம், சடங்கு, சீமந்தம், கிரகப்பிரவேசம் ஏன் சாவு வீட்டுக்கும் கூட இட்லி பார்சலாக பறந்து கொண்டு இருக்கிறது. தினமும் 20 ஆயிரம் இட்லி விற்பனை நடைபெறுகிறது.

இட்லியினை சந்தையில் காய்கறி, ஆடு, மாடு, பூ, மீன் வாங்குவதை போல் மக்கள் வந்து வாங்கி செல்கிறார்கள். இட்லிக்கு சந்தையா? ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தில்தான் இந்த இட்லி சந்தை உள்ளது. இட்டு அவி என பொருள் படும் இட்லி தான் தற்போது தமிழகத்தின் பெரும்பாலானோரின் காலை உணவு என்று சொன்னால் மிகையாகாது. சட்னி, சாம்பார், பொடி வகைகளுடன் பரிமாறினால் கணக்கு வழக்கு இல்லாமல் சாப்பிட்டு விட்டு வயிற்றுக்கு வஞ்சகம் செய்யக்கூடாது என பெருமை பேசுபவர்கள் இங்கே ஒரு விசிட் அடிக்கலாம்.

தினமும் அதிகாலை தொடங்கி நள்ளிரவு 11 வரை எப்ப போனாலும் இட்லி கிடைக்கும். தினமும் 20 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை  இங்கு இட்லி விற்பனை நடக்கிறது. மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டுக்கே இங்கிருந்துதான் இட்லிகள் ஏற்றுமதி செய்யப்பட்டது என்பது யாருக்கும் தெரியாத  உண்மை. சாதா இட்லியில் துவங்கி... மினி இட்லி, ரவா இட்லி, நெய் இட்லி, காஞ்சிபுரம் இட்லி, பெங்களூரு இட்லி, தட்டு இட்லி, வெஜிடபிள் இட்லி என பல்வேறு ரக இட்லிகள் இங்கு கிடைக்கிறது.

இட்லியில் எவ்வளவு வகையோ அதே போல் பல வகையான சட்னியும் இதனுடன் கிடைக்கிறது. அனைத்தும் தரமானதாகவும் சுத்தமான முறையில் தயாரிக்கப்படுகிறது. இதனால் உலக அளவில் இந்த இட்லிக்கு தனி மரியாதை கிடைத்துள்ளது. பல ஆண்டுகளாக நடைபெறும் இந்த இட்லி சந்தை மலேசியாவில் 1966ல் நடைபெற்ற உலக தமிழ் மாநாட்டுக்கு பிறகு தான் பிரபலமாகியுள்ளது. இட்லி ஒன்று 50 காசுக்கு விற்பனை ஆன நிலையில் தற்போது பல்வேறு ரக சட்னிகளுடன் ஒரு இட்லி ரூ. 6க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து அப்பகுதியில் இட்லி வியாபாரம் செய்து வரும் மாரிமுத்து பேசுகையில், ‘‘நாங்கள் இப்பகுதியில் 3 தலைமுறைகளுக்கும் மேலாக இட்லி வியாபாரம் செய்து வருகிறோம். முழுக்க முழுக்க சாதாரண விறகு அடுப்பில், தலா 100 இட்லி என 10 பானைகளில் ஆயிரம் இட்லிகளை அவிப்போம். அரசியல் கட்சியினர், கோயில் திருவிழாக்கள், திருமண விழாக்கள் என எங்களிடம் மொத்தமாக ஆர்டர் செய்து பெற்றுச் செல்வார்கள். கூடவே தக்காளி, தேங்காய் சட்னி. சாம்பார், இட்லிப் பொடி என அனைத்துப் பொருள்களையும் பாரம்பரிய முறைப்படி தயாரித்து கொடுப்போம். எப்போது தோன்றியது என கணக்கிட முடியாதபடி இங்கு இட்லி கடைகள் காலங்காலமாக வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றன’’ என்றார்.

தொகுப்பு: கோமதி

Related Stories: