இல்லத்தரசிகள் இணையத்தில் மாதம் ரூ.40 ஆயரம் சம்பாதிக்கலாம்!

நன்றி குங்குமம் தோழி

சிறு தொழில்

தொழில்நுட்ப வளர்ச்சியில் எல்லாமே இணையம் என்றாகிவிட்டது. சாப்பாடு ஆர்டர் செய்வது முதல் நாம் ஒரு இடத்திற்கு பயணம் ெசல்லக் கூட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறோம். அதே இணையம் இல்லத்தரசிகளுக்கும் பலவிதமான வருமான வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறது. யுடியூப் (YouTube) மூலம் எவ்வாறு வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம் மற்றும் அதற்கான வாய்ப்புகளை பற்றியும் எடுத்துரைக்கிறார் மாதேஸ்வரி கலையரசு.

‘‘இன்றைய சூழ்நிலையில் பெண்களும் வேலைக்கு செல்வது என்பது கட்டாயமாகிவிட்டது. ஆனால் அதில் ஒரு குறிப்பிட்ட சதவிகித பெண்கள் சில காரணங்களால் திருமணம், குழந்தைக்கு பிறகு வேலைக்கு செல்வதை நிறுத்தி விடுகிறார்கள். குழந்தைகள் வளர்ந்த பிறகு தங்களின் லட்சியத்தை வீட்டில் இருந்தே முடங்கி விட்டோம் என்று வருத்தப்படுகிறார்கள்.

இனி பெண்களின் தேடல் மற்றும் லட்சியங்களுக்கான தீர்வுகள், இந்த நவீன உலகில் ஏராளமாக கொட்டி கிடக்கின்றன’’ என்கிறார் மாதம் 40 ஆயிரம் ரூபாய் இணையத்தில் வருமானம் பார்க்கும் மாதேஸ்வரி கலையரசு.‘‘அரசு பணியில் வேலைக்கு சேரவேண்டும் என்பது தான் என்னுடைய வாழ்நாள் லட்சியமாக இருந்தது’’ என்று பேசத் துவங்கினார் சேலத்தை சேர்ந்த மாதேஸ்வரி. கல்லூரியில் B.Sc.Home Science முடிச்சிட்டு அரசு வேலையில் சேர வேண்டும் என்று இருந்தேன்.

ஆனால் குடும்ப சூழல் காரணமாக ஐ.டி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். இதற்கிடையில் எனக்கு திருமணம் நிச்சயமாச்சு. சென்றுகொண்டிருந்த  இருந்த வேலையும் ராஜினாமா செய்தேன். என் கணவர் ஊடகத்துறை சார்ந்த தொழில் செய்து வந்தார்.

அவருடன் இணைந்து நானும் என் வேலையை வீட்டில் இருந்தபடி செய்ய முடிவெடுத்து திருமணத்திற்கு முன்பே மூன்று மாதம் வீடியோ எடிட்டிங் செய்வது குறித்து பயிற்சி எடுத்திருந்தேன். திருமணம் முடிந்து நாங்க நாமக்கல்லில் செட்டிலானோம். ஊடகத் துறையில் உள்ளூர் வணிகத்தை சந்தைப்படுத்தும் பணியில் மேற்கொண்டு இருந்த எங்கள் நிறுவனத்திற்கு தமிழகம் முழுவதும் சந்தைப்படுத்தும் வேலை வாய்ப்பு தேடி வந்தது.

என் கணவர் சந்தைப்படுத்தும் வேலையில் ஈடுபட, நானோ அந்த பணிகளை மேற்பார்வையிடுவது, நிதிநிலையை கையாள்வது போன்ற வேலையை பார்த்துக் கொண்ேடன். இருவரும் இணைந்து வேலை செய்ததால், எங்களின் தொழிலும் விரிவடைந்தது. அதன் பின் எனக்கான ஒரு நிறுவனத்தை என் கணவர் எனக்கு அமைத்துக் கொடுத்தார்’’ என்றவர் மார்க்கெட்டிங் தொழிலை தொடர்ந்து விளம்பரத் துறையிலும் கால் பதிக்க ஆரம்பித்துள்ளார்.

‘‘தொழில் வளர்ச்சி அடையும் போது, அதனை விரிவாக்கம் செய்வது தான் புத்திசாலித்தனம்.

அதனால் தான் ‘ஆர்ட்கிங் மீடியா’ என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை துவங்கினோம். இதில் ஆடியோ, வீடியோ எடிட்டிங், விளம்பரம் தயாரிப்பது என்று எங்களின் இரண்டாவது நிறுவனமும் செயல்பட துவங்கியது. வீடு, குடும்பம், குழந்தைகள் என்று இருந்தாலும்... எனக்கான பணி செய்யும் நேரத்தை நான் ஒதுக்கிக் கொண்டேன்.

இதற்கு முக்கிய காரணம் என் கணவரின் ஒத்துழைப்பு. மேலும் நான் ஐ.டி துறையில் வேலைப் பார்த்து வந்ததால் வீட்டில் இருந்தபடியே இணையம் சார்ந்த வேலையில் ஈடுபடுவது சுலபமாக இருந்தது. மேலும் என் கணவர் இந்த தொழிலில் உள்ள நெளிவு சுளிவுகளையும் எனக்கு சொல்லிக் கொடுத்தார்.

இதன் மூலம் நான் தொழிலின் அடுத்தக்கட்டத்திற்கு பயணமானேன். என்னதான் சொந்தமாக தொழில் செய்தாலும் அரசு வேலையில் சேர வேண்டும் என்ற என் கனவு என் மனதில் எரிந்து கொண்டு இருந்தது. அதனால் அரசு போட்டித் தேர்வுகளையும் எழுதி வந்தேன். ஆனால் என்னால் அதில் தேர்ச்சி பெறமுடியவில்லை. இதனிடையே வீட்டில் இருந்தபடியே எம்.பி.ஏ படிச்சேன்.

அந்த சமயத்தில் தொழில் சார்ந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்குகளுக்காக வெளியூருக்கு பயணம் செய்ய நேரிட்டது. அதில் ஏற்பட்ட அனுபவங்களை நானும் என் கணவரும் அவ்வப்போது விவாதித்து வந்தோம். எங்களின் விவாதத்தை ஏன் மகளிருக்கான ஒரு யுடியூப் சேனலாக தொகுத்து வழங்கக்கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. அதற்கு முழு காரணம் என் கணவர் தான்.

அவரின் தூண்டுதலால் தான் King 24x7ல் பெண்களுக்கான யுடியூப் சேனலை துவங்கினேன். இதில் பொழுதுபோக்கு, ஆன்மிகம், ஜோதிடம், ஆரோக்கியம், மருத்துவம், தன்னம்பிக்கை, அரசியல் என பத்துக்கும் மேற்பட்ட துறைகளில் முழுக்க முழுக்க பெண்களுக்கான சேனலாக செயல்பட ஆரம்பித்தது’’ என்றவர் இல்லத்தரசிகளுக்காக யுடியூப்பில் குழு ஒன்றை துவங்கியுள்ளார்.  

‘‘எங்களின் யுடியூப் சேனலுக்கு 15 கோடி பார்வையாளர்கள் உள்ளனர். நன்கு படித்திருந்தும், திறமை இருந்தும் எண்ணற்ற பெண்கள் குடும்பம் குழந்தைகள் வீட்டு வேலைகள் என முடங்கிவிடுகின்றனர். அப்படிப்பட்ட பெண்கள்  குடும்பத்தை கவனித்து கொண்டே என்ன தொழிலை செய்யலாம் என்று ஆய்வு செய்தோம். அதில் சமையல், அழகுக்குறிப்பு, வீட்டு வைத்தியம், குழந்தை வளர்ப்பு என்று எண்ணற்ற தொழில் பற்றி ஆய்வு செய்தோம்.

இது குறித்து பெண்களுக்கு தெரியப்படுத்துவதற்கு, யுடியூப்பில் Media Queen TV Cluster என்ற குழுவினை துவங்கினோம். இதன் மூலம் உலகளவில் பெண்கள் தங்களுக்கான வருமானத்தை ஈட்டுவதற்கு ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தி தர திட்டமிட்டோம்’’ என்றவர் ஒரு தொழிலில் முழுமையாக வெற்றி பெற்ற பிறகு தான் அதை மற்றவர்களுக்கு கொண்டு ெசல்ல வேண்டுமாம்.

‘‘Media Queen TV Cluster பெண்களுக்கான யுடியூப் குழு. இதில் பலதரப்பட்ட துறையை சார்ந்த பெண்கள் உள்ளனர். அதாவது ஒரு சமையல் கலையில் நிபுணராக இருக்கலாம். அவருக்கு எவ்வாறு சம்பாதிக்கலாம் என்று தெரியாது. அப்படி இருக்கும் போது, அவர்கள் தங்களை இந்த குழுவில் இணைத்துக் கொள்ளலாம்.

எங்கள் நிறுவனம் சார்ந்தவர்கள் அவர்களின் சமையல் கலையை வீடியோ எடுத்து, அதனை இந்த குழு யுடியூப்பில் பதிவு செய்வோம். இதன் மூலம் அவர்களின் திறமை உலகளவில் தெரிய வரும். சமையல் மட்டும் இல்லை, குழந்தை வளர்ப்பு, அழகு கலை, கிராப்ட் சம்மந்தப்பட்ட கலை, உடற்பயிற்சி முறைகள்... எதுவாக இருந்தாலும் Media Queen TV Clusterல் பதிவேற்றம் செய்யலாம். இதன் மூலம் இல்லத்தரசிகள் அவர்களின் ஆயுள் காலம் முழுதும், இணைய வழியில் வருமானம் ஈட்ட முடியும்.

மேலும் ஒரு கம்ப்யூட்டர் மற்றும் கேமரா இருந்தால் போதும், எங்களது பயிற்சியின் மூலம் தங்களின் திறமைகளை யுடியூப்பில் பதிவு செய்யலாம். ஓய்வு நேரத்தில் இதனை செய்வதால், அவர்களின் குடும்ப வேலைகள் மற்றும் குழந்தை பராமரிப்பில் பாதிப்பு ஏற்படாது. இதன் மூலம் ஒவ்வொருவரின் அனுபவங்கள், திறமைகள் அனைத்தையும் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறோம்.

இல்லத்தரசிகளை இணைய இளவரசிகளாக உலகிற்கு அறிமுகப்படுத்தி, மூலை முடுக்கிலுள்ள வீடுகளில் முடங்கி கிடக்கும் பெண்களின் சாதனை சரித்திரங்களை வெளிக்கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்கிறார் தமிழகத்தின் முதல் பெண்களுக்கான யுடியூப் குழுவின் நிறுவனரான மாதேஸ்வரி கலையரசு.

தோ.திருத்துவராஜ்

Related Stories: