கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

உடல் உஷ்ணத்தை தணிக்கும் வெங்காயம்

வெங்காயத்தில் உள்ள கூட்டுப்பொருள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாக கரைக்கிறது. யூரிக் அமிலம் சிறுநீர்ப்பையில் அதிகமாக சேர்வதால் கற்கள் ஏற்படுகின்றன. வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கற்கள் தோன்றாது.வயிற்றில் குளிர்ச்சியை ஏற்படுத்தி வயிற்றுக்கோளாறுகளை சரி செய்யும் தன்மை வெங்காயத்திற்கு இருக்கிறது.

உடல் உஷ்ணத்தால் துன்பப்படுபவர்கள் காலை நேரத்தில் பழைய சாதத்தில் மோர் விட்டு பிசைந்து சின்ன வெங்காயத்தை சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.வெந்நீருடன் வெங்காய சாற்றை சேர்த்து வாய்க்கொப்பளித்தால் பல்வலி குறையும்.

- சு.கண்ணகி, மிட்டூர்.

* கிரேவி சிவப்பு நிறமாக வர வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கினாலே போதும், அந்நிறம் வந்துவிடும்.

* முருங்கை இலையை கொத்தாக எண்ணெயில் பொரித்து அத்துடன் வறுத்த மிளகு, சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடியாக்கி நெய் சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் ருசியாகவும், மணமாகவும் இருக்கும்.

-சுகந்தாராம், கிழக்கு தாம்பரம்.

* தேங்காய், உளுத்தம்பருப்பு, பெருங்காயம், தனியா, புளி, கறிவேப்பிலை, உப்பு, கடுகு ஆகியவற்றை நல்லெண்ணெயில் வதக்கி எடுக்கவும். வதக்கிய பொருள்களை நைசாக மிக்ஸியில் அரைக்கவும். இந்த துவையலை இட்லி, தோசை, தயிர்சாதம் ஆகியவற்றுக்கு தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் மிக மிகச் சுவையாக இருக்கும்.

* கேரட் சமைக்கும்போது அவற்றில் அரை அச்சு வெல்லம் சேர்த்து செய்தால் சுவையும் மணமும் அதிகம் இருக்கும்.

* ரவையை டால்டா விட்டு சிவக்க வறுத்து காய்ச்சிய பாலில் ஊற வைத்து பின்பு சர்க்கரைப்பாகு வைத்து கேசரி கிளறிப் பாருங்கள். சுவையோ சுவை.

- ஆர்.அஜிதா, கம்பம்.

* எலுமிச்சைச் சாறு சேர்க்கும் பதார்த்தங்களில் மிளகாய், மிளகாய்த்தூள் இவற்றிற்குப் பதில் பச்சை மிளகாய் சேர்த்தால் ருசி கூடும்.

* எலுமிச்சம் பழங்களை சாறு பிழிந்தவுடன் தோலை கரகரப்பாக அரைத்து, உப்பு, காரம் சேர்த்து தாளித்துக் கொட்டி, வதக்கினால் சுவையான எலுமிச்சைத் தொக்கு கிடைக்கும்.

- அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

* வெயில் காலத்தில் எங்கு பார்த்தாலும் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும். வீட்டைக் கழுவும்போது நீரில் சிறிது உப்பைச் சேர்த்துப் பின் கழுவுங்கள். காய்ந்தபின் ஈக்கள் அறையில் வராது.

* காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு வினிகர் கலந்த குளிர்ந்த நீரில் ஒரு சில நிமிடங்கள் போட்டு வைத்தால் கிருமிகள் இறந்துவிடும்.

* இரவில் படுப்பதற்கு முன் ப்ளீச்சிங் பவுடர் சிறிது எடுத்து, கழிப்பறையிலும், குளியலறையிலும் தூவி விட்டு, அப்படியே விட்டுவிட வேண்டும்.

கரப்பான் பூச்சித்தொல்லை இருக்காது.

- கே.ராஜேஸ்வரி,  மணப்பாறை.

* தேனில் நான்கு நெல்மணிகளைக் கழுவி போட்டு வைத்தால் தேன் அதிக நாட்கள் கெடாமலிருக்கும்.

- ஆர்.பூஜா, சென்னை.

* சாதம் கொதிக்கும்போது இரண்டு துளி எலுமிச்சை பழச்சாற்றைப் பிழிந்தால் சாதம் வெண்மையாக இருக்கும்.

* சாம்பாரை நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கியவுடன் அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயும், கறிவேப்பிலையும் போட்டு மூடி வைத்தால், சாம்பார் மணமாக இருக்கும்.

- ஆர்.கீதா, திருவான்மியூர்.

* தினமும் புளியைக் கரைத்தபின் சக்கையை வெயிலில் உலர்த்தி குறிப்பிட்ட அளவு சேர்ந்ததும் பொடி செய்து காப்பர்,

பித்தளைப் பாத்திரங்களை துலக்கினால் பாத்திரம் பளபளக்கும்.

* மண்பானையில் கால் பாகம் தண்ணீர் ஊற்றி தோசை மாவு, தயிர் போன்றவற்றை வைத்தால் ஃப்ரிட்ஜில் வைத்ததுபோல நீண்டநேரம் புளிப்பேறாமல் இருக்கும்.

மாங்காயைத் தோல் சீவி துருவி எந்த பொரித்த குழம்பானாலும் கடைசியில் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்க குழம்பு சூப்பராக இருக்கும்.

- கே.ஆர்.உதயகுமார், சென்னை.

* பப்பாளிக்காய்களை சாம்பாரில் போட்டு சமைத்து சாப்பிட்டால் சுவை அதிகரிப்பதுடன் ரத்தம் அதிகரிக்கும்.

- எஸ்.சடையப்பன், திண்டுக்கல்.

கேழ்வரகு சேமியா இட்லி

தேவையான பொருட்கள்

கேழ்வரகு சேமியா பாக்கெட் - 500 கிராம்,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை

சேமியா இட்லி செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு சேமியாவைப் போட்டு, இரண்டு முறை நீர் ஊற்றி அலசி விட்டு, அதில் சேமியா மூழ்கும் அளவு நீர் ஊற்றி, அதில் சிறிது உப்பு சேர்த்து நன்றாக ஊற வைக்கவும். சேமியா ஊறியதும் சாதம் வடிப்பதுபோல் நீரை வடிகட்டி விடவும். இட்லி பாத்திரத்தில் உள்ள இட்லி தட்டில் சேமியாவை கையால் கொஞ்சம் கொஞ்சமாக அள்ளி ஒவ்வொரு குழியிலும் வைத்து வேக வைத்து எடுக்கவும். சுவையான கேழ்வரகு சேமியா இட்லி தயார். இதில் ேதவைப்பட்டால் கேரட் அல்லது பீட்ரூட் துருவி சேர்க்கலாம். சுவையாக இருக்கும்.

- ஏ.எஸ்.கோவிந்தராஜன், கோடம்பாக்கம்.

Related Stories: