மருந்து கடையில் போதை மாத்திரை விற்பனை: கடைக்காரர் உள்பட 6 பேர் கைது

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டையில் மருந்து கடையில் போதை மாத்திரைகளை விற்ற கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். மேலும், அங்கு போதை மாத்திரைகளை வாங்கி சென்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடும் 5 பேரையும் கைது செய்தனர்.  சென்னை வண்ணாரப்பேட்டை, மண்ணப்ப முதலி தெருவை சேர்ந்தவர் முகமது அசாருதீன் (30). இதே பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார். இங்கு அதிகளவில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக நேற்று வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, அசாருதீனின் மருந்து கடையை நேற்று மாலை போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்தனர்.

 அக்கடைக்கு பல்வேறு குற்றப்பின்னணியில் இருக்கும் பலர் வந்து, போதை மாத்திரைகளை வாங்கி செல்வது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அந்த மருந்து கடைக்கு போலீசார் சென்று, முகமது அசாருதீனைப் பிடித்து விசாரித்ததில், தனது கடையில் போதை மாத்திரை விற்பனை செய்து வருவதை ஒப்புக்கொண்டார்.  இவரிடம் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் போதை மாத்திரைகளை வாங்கி, அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்திருப்பதும் தெரியவந்தது. மேலும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் போதை மாத்திரைகளை விழுங்கி, அந்த போதையில் வழிப்பறி, செயின் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

 அவர் கொடுத்த தகவலின்பேரில், போதை மாத்திரை வாங்கி சென்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கார்த்திக் (எ) லியோ கார்த்திக் (23), கரம் (எ) முசாமில் (21), ரங்கா (எ) ரங்கநாதன் (29), விக்னேஷ் (26), தினேஷ் (எ) தினேஷ்குமார் (24) மற்றும் கடைக்காரர் முகமது அசாருதீன் ஆகிய 6 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை நேற்றிரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மருந்து கடைக்காரரிடம் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories: