திருமலையின் முக்கிய வளைவுகளில் கண்கவர் மலர்செடிகள் வைக்கப்படும் : திருப்பதி தேவஸ்தான அதிகாரி தகவல்

திருமலை: திருமலையில் உள்ள பல்வேறு இடங்களில் தேவஸ்தான செயல் அதிகாரி ஜவகர் அனைத்து அதிகாரிகளுடன் சென்று நேற்றுமுன்தினம் ஆய்வு செய்தார். இதையடுத்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருமலையில் பக்தர்கள் பாதயாத்திரையாக வரக்கூடிய பகுதிகளில், பக்தர்கள் தங்கும் ஓய்வறை அருகே, காலியாக உள்ள பகுதிகளில், மலையின் முக்கிய வளைவுகளில் பசுமையை விரிவுப்படுத்தி கண்கவர் மலர் செடிகள் வைக்கப்பட உள்ளது. வாரி மெட்டு மலைப்பாதையில் காலியாக உள்ள பகுதிகளில் மலர் செடிகள் வைக்கப்பட உள்ளது. மேலும், ஏஎன்சி பகுதியில் வரக்கூடிய மழை நீரை, மலர் செடிகள் வைக்கப்படும் பகுதிக்கு மாற்றி அனுப்பும் விதமாக ஏற்பாடு செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்டு வரும் பரக்கா மணி கட்டிட பணிகள் விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பூந்தி தயாரிக்கும் புதிய கட்டிட பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்த கட்டிட திறப்பு விழா முதல்வர் தலைமையில் நடைபெற உள்ளது.

சுவாமிக்கு தேவையான மலர் அனைத்தும் திருமலையிலேயே விளைவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நன்கொடையாளர்கள் முன் வரும்படி கேட்டுக் கொண்டோம். அவ்வாறு சில நன்கொடையாளர்கள் முன்வந்து மலர் செடிகளை வளர்த்து  தேவையான மலர்களை சுவாமிக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளனர். சுவாமிக்கு பயன்படுத்தப்பட்ட மலர்கள் கொண்டு அகர்பத்திகள் தயார் செய்வதற்கு பெங்களூரை சேர்ந்த 70 ஆண்டுகள் அனுபவம் உள்ள தனியார் நிறுவனம் முன்வந்துள்ளது. அவர்கள் தயார் செய்வதற்கான மூலப்பொருட்கள் செலவுக்கு மட்டும் பணம் பெற்றுக்கொண்டு தேவஸ்தானத்திற்கு  வழங்க உள்ளனர். அவ்வாறு வழங்கப்பட்ட அகர்பத்திகள் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் லட்டு கவுண்டரில் பக்தர்களுக்கு  விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் லாபம் பசு பாதுகாப்பு திட்டத்திற்கு பயன்படுத்தப்படும்.

தற்போது கொரோனா 2வது அலை குறையாத நிலையில், 3வது அலை வர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர். எனவே, தற்போதுள்ள சூழ்நிலையில் ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் எண்ணம் இல்லை.

 இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வின்போது கூடுதல் செயல் அதிகாரி ஏ.வி.தர்மா, சி.வி.எஸ்.ஓ  கோபிநாத் ஜெட்டி, தலைமை பொறியாளர்  நாகேஷ்வர் ராவ், கோசாலை இயக்குனர்  ஹரிநாத், தோட்டத்துறை துணை இயக்குநர்  சீனிவாசூலு, டி.எப்.ஒ சந்திரசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: