அதிமுக ஆட்சியில் முறைகேடாக அளிக்கப்பட்ட 660 சாலை ஒப்பந்தங்கள் ரத்து ரூ.43 கோடி இழப்பு தடுப்பு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: அதிமுக ஆட்சியில் முறைகேடாக அளிக்கப்பட்ட  660 ஒப்பந்தங்களை ரத்து செய்து, ரூ.43 கோடி இழப்ைப சென்னை மாநகராட்சி தடுத்துள்ளது.  சென்னையை சீரமைக்கும் வகையில் சாலை மேம்பாடு,  பூங்காக்கள் மற்றும் மழைநீர் வடிகால் புனரமைப்பு போன்ற பல்வேறு பணிகளை  ஒப்பந்ததாரர்களிடம் சென்னை மாநகராட்சி வழங்கி இருக்கிறது. இந்நிலையில் டெண்டர்  நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை என தொடர் புகார்கள் எழுந்த  நிலையில் ஒப்பந்த பணிகளை மாநகராட்சி தரப்பு அதிரடியாக ஆய்வு செய்தது. அதன்படி அடையாறு, அண்ணாநகர், கோடம்பாக்கம், ராயபுரம் உள்ளிட்ட 43 பகுதிகளில்  மழைநீர் வடிகால்வாய்களை சீரமைத்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகளுக்காக கடந்த  பிப்ரவரி மாதம் அதிமுக ஆட்சியில் ரூ.120 கோடி மதிப்பில் ஒப்பந்தம் விடப்பட்டது.

இதில்  முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த ஒப்பந்தத்தை ரத்து  செய்யப்பட்டது. அதேப்போல், 15 மண்டலங்களில் ரூ.120  கோடி மதிப்பில் 1,500 ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்க விடப்பட்ட  ஒப்பந்தமும் முறைகேடு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை  மாநகராட்சியின் சமூக வலைதள பக்கங்களை பராமரிக்க ரூ.2 கோடி மதிப்பீட்டில்  விடப்பட்ட ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது. அதன்படி சென்னை மாநகராட்சியில் பல்வேறு ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி ரூ.250 கோடி மதிப்பிலான ஒப்பந்தப் பணிகளை சென்னை மாநகராட்சி ரத்து செய்து வருகிறது. இந்நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக சென்னையில் மாநகராட்சி கடந்த பிப்ரவரி மாதத்தில் வளசரவாக்கம், அண்ணாநகர், பெருங்குடி மண்டலத்தில் உள்ள 3,200  சாலைகள்  புனரமைப்பு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளது.

நல்ல நிலையில் இருக்கும் சாலைகளுக்கும் சேர்த்து ஒப்பந்தங்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் முறைகேடு நடந்திருப்பதாக புகார்கள் வந்தது. இதையடுத்து மாநகராட்சி ஆணையர் அனைத்து துணை ஆணையர்கள், பொறியாளர்கள் ஒப்பந்தங்கள் அளிக்கப்பட சாலைகளை ஆய்வு செய்து   அறிக்கை அளிக்க வேண்டும் உத்தரவிட்டிருந்தார். அதன்படி தெற்கு, வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் இரண்டு வாரங்கள் அதிகாரிகள் ஆய்வு  செய்ததில் 660  சாலைகள் தரமாக இருப்பதும், புனரமைக்க தேவையில்லை என்றும் அறிக்கை அளித்துள்ளனர்.இதனையடுத்து தரமான சாலைகளை செப்பனிட முறைகேடாக ஒப்பந்தம்  வழங்கப்பட்ட 660  சாலைகளின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டது.இதில்  பெரும்பாலான சாலைகள்  பேருந்துகள்  செல்லாத உட்புற சாலைகள் ஆகும். இதையடுத்து சென்னை மாநகராட்சிக்கு ஏற்பட இருந்த ரூ.43 கோடி இழப்பு  தடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: