இந்தியர்கள் முன்னேற்றம்

டோக்கியோ: ஒலிம்பிக் போட்டியில்  பேட்மின்டன், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் முதல் சுற்றில் வெற்றிப் பெற்று பதக்க வாய்ப்புகளை அதிகரித்துள்ளனர். ஒலிம்பிக் போட்டியின் 2வது நாளான நேற்று பளு  தூக்குதல் ஆட்டத்தின்  49 கிலோ எடை பிரிவில் மீராபாய் சானு  வெள்ளிப் பதக்கம் வென்றார். தொடர்ந்து  ஆடவர் இரட்டையர் பிரிவு பேட்மின்டன் போட்டியில்  இந்தியா இணை சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி  ஆகியோர் 2-1 என்ற செட்களில் சீன தைபேவின் யாங் லீ, சி லின் வாங் இணையை வீழ்த்தியது. தொடர்ந்து நாளை நடைபெறும் 2வது சுற்றில் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி இணை, இந்தோனேஷியாவின்   மார்கஸ் பெர்நால்டி, கெவின் சஞ்ஜெயா இணையுடன் மோதுகிறது.

அதேபோல் டேபிள் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில்  இந்திய வீராங்கனை மனிகா பத்ராவுடன்,  இங்கிலாந்து வீராங்கனை டின் டின் ஹோ மோதினார். தொடக்கம் முதலே அசத்தலாக விளையாடிய மனிகா ஆட்டம்  முழுவதும் ஆதிக்கம் செலுத்தி,  11-7, 11-6, 12-10,  11-9 என 4 செட்களையும் கைப்பற்றினார். எனவே 30நிமிடங்களில் முடிவுக்கு வந்த ஆட்டத்தை 4-0 என நேர் செட்களில் வென்றார். மனிகா இன்று  நடைபெறும் 2வது சுற்றில் உக்ரைன் வீராங்கனை மார்கரிடா பெசோட்ஸ்காவுடன் மோத உள்ளார்.மற்றொரு மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை  சுதிர்தா முகர்ஜி  5-3என்ற செட் கணக்கில் சுவீடனின் லிண்டா பெர்க்ஸ்டோர்மை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.  சுதிர்தா நாளை நடைபெறும் 2வது சுற்றில்  போர்ச்சுகல் வீராங்கனை ஃபூ யூ உடன் மோதுகிறார்.

டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவு ஒன்றில்  நேற்று இந்தியாவின் சுமித் நாகல்  2-1 என்ற செட்களில் உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்டோமின்னை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.  இதன்மூலம் ஒலிம்பிக்கில்  25 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய வீரர் ஒருவர் ஒற்றையர்  பிரிவில் வென்ற சாதனையை சுமித் படைத்துள்ளார்.

ஏமாற்றம் தந்த முடிவுகள்

பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள போட்டிகள் என்று எதிர்க்கப்பட்ட பல விளையாட்டுகளில் நேற்று, இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

* வில்வித்தை போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் நேற்று இந்தியாவின் தீபிகா குமாரி, பிரவீன் ஜாதவ்  ஆகியோருடன் சீன தைபேவின் சியான் லின், சீ சூன் டங் ஆகியோர் களம் கண்டனர்.  அதில்  தீபிகா, பிரவீன்  இணை5-3 என்ற புள்ளி கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.  அதனால் பதக்க நம்பிக்கை அதிகரித்தது. ஆனால் காலிறுதியில் தீபிகா இணை  2-6 என்ற புள்ளி கணக்கில் கொரிய குடியரசின்  சான் ஆன், டியோக் ஜே கிம்  இணையிடம் தோற்றது.

* துப்பாக்கி சுடுதல்  ஆடவர் 10மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு தகுதிச்சுற்றில் முதல் இடம் பிடித்து  இந்தியாவின் சவுரப் சவுத்ரி நம்பிக்கையை ஏற்படுத்தினார். ஆனால் இறுதிச்சுற்றில்  7வது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார்

* குத்துச்சண்டை போட்டியின்  69கிலோ எடை பிரிவு  முதல் சுற்றில்  இந்திய வீரர்  விகாஸ் கிரிஷன் நேற்று, ஜப்பான் வீரர் சேவான்ரெட்ஸ் கியூன்சியிடம் தோல்வி அடைந்தார்.

* டேபிள் டென்னிஸ் போட்டியின்  கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய இணை சரத் கமல், மனிகா பத்ரா நேற்று  சீன தைபேவின்  யுன் ஜு லின், ஐ சிங் செங் இணையிடம் 0-4 என நேர் செட்களில் தோற்று வாய்ப்பை இழந்தனர்.

* துப்பாக்கி சுடுதல் போட்டியின்  மகளிர் 10மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில்  இந்திய வீராங்கனைகள்  இளவேனில் வாலறிவன் 16வது இடமும், அபூர்வி சந்தேலோ 36வது இடமும் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர்.

* இப்படி தோற்ற பலரும் இனி வரும் நாட்களில் ஒற்றையர், இரட்டையர் என வேறு பிரிவுகளில் களம் காண உள்ளதால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை உயரும் வாய்ப்பு தொடர்கிறது.

Related Stories: