ஹாக்கியில் நியூசிலாந்து மிரட்டிய ‘அந்த ஒரு நிமிடம்’: இந்தியா ‘த்ரில்’ வெற்றி

டோக்கியோ: கடைசி நிமிடம் வரை  பரபரப்பாக நீண்ட  நியூசிலாந்துக்கு எதிரான  முதல் போட்டியில் இந்திய ஹாக்கி அணி ‘த்ரில்’ வெற்றிப் பெற்றது. ஒலிம்பிக்கில் ‘இந்தமுறை பதக்கம் நிச்சயம்’ என்ற எதிர்பார்ப்பில்  இந்திய ஆடவர் அணி தனது முதல் ஆட்டத்தில் நேற்று நியூசிலாந்துடன் மோதியது. ஆரம்பத்திலேயே ஆதிக்கம் செலுத்திய நியூசி,  முதல் கால் பகுதியின் 6வது நிமிடத்திலேயே முதல் கோல அடித்தது. பெனால்டி கார்னர் வாய்ப்பை  பயன்படுத்தி நியூசி வீரர்  கேன் ரஸ்ஸல் அழகாக கோலடித்தார். அதனால் ஏற்பட்ட உற்சாகத்தை அடுத்த 4நிமிடங்களில் நாசமாக்கியது இந்தியா.  பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பை 10வது நிமிடத்தில் ருபிந்தர் பால் சிங் கோலாக்கியதின் மூலம் 1-1என்ற கணக்கில் ஆட்டம் சம நிலைக்கு வந்தது.

தொடர்ந்து 2வது கால் பாதியின் கடைசி நிமிடத்தில்  ஹர்மன்பிரீத் சிங், பெனால்டி கார்னர் மூலம் கோலடித்தார். அதனால் 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது. கூடவே 3வது கால் பகுதியில் கிடைத்த பெனால்டி வாய்ப்பையும்  ஹர்மன்பிரீத் மீண்டும் கோலக்கினார். அடுத்த சில  நிமிடங்களில் நியூசி வீரர் ஸ்டீபன் ஜென்னெஸ் தட்டி வந்த பந்தை கோலாக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.ஆனாலும்  4வது கால் பகுதியில் நியூசி 2-3 என்ற பின்தங்கிய நிலையில் ஆட்டத்தில் அனல் பறந்தது. அதிலும் கடைசி நிமிடத்தில்  நியூசிக்கு  அடுத்தடுத்து 3 பெனால்டி வாய்ப்புகள் கிடைத்தன. அதனால் இந்தியாவின் வெற்றி ஒவ்வொரு விநாடியும் கேள்விக்குறியானது. முதல் வாய்ப்பு  கோலான உற்சாகத்தில் நியூசி வீரர்கள் துள்ளி குதித்தனர்.

அதை இந்திய கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ்  மறுக்க, 3வது நடுவரிடம் முறையிடப்பட்டது. அதில் ‘கோல்’ இல்லை என்று,  மீண்டும் பெனால்டி வாய்ப்பு அளிக்கப்பட்டது. மீண்டும் திக்..திக் விநாடிகள்தான். ஆனால் 2வது வாய்ப்பை நிக் உட்ஸ், அடுத்து கிடைத்த 3வது வாய்ப்பை  ஸ்டீவ் எட்வர்ட்ஸ்  ஆகியோரை கோலடிக்க விடாமல் அற்புதமாக தடுத்தார் ஜேஷ். அதனால் கடைசி விநாடி வரை பரபரப்பு நீடித்த ஆட்டத்தில் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் நியூசியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்தியா இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியுடன் மோதுகிறது.

Related Stories: