முகநூல் மூலம் பழகி மோசடி; கம்பெனி ஊழியரை கடத்தி செல்போன், பணம் பறிப்பு: அம்பத்தூர் மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை

ஆவடி: ஆவடி அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் பாலாஜி (21). இவர், பி.காம் படித்து முடித்துவிட்டு அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இதற்கிடையில், பாலாஜிக்கும், அம்பத்தூரை சேர்ந்த மனோஜ் என்ற வாலிபருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மனோஜ் மொபட்டில் அயப்பாக்கத்திற்கு வந்து பாலாஜியை சந்தித்துள்ளார். பின்னர்,  பாலாஜியிடம் எனது பெற்றோர்களை உனக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன், எனது வீட்டுக்கு வா என கூறி மொபட்டில் அழைத்து சென்றுள்ளார்.

ஆனால்,  அவர் பாலாஜியை வீட்டுக்கு அழைத்து செல்லாமல், அம்பத்தூர் ஏரிக்கரை ஓரமாக அழைத்து சென்று  அவரது  நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து  மிரட்டி அவரது வங்கிக் கணக்கில் இருந்து “கூகுள் பே” மூலமாக ரூ.5 ஆயிரம் பணத்தை பெற்று உள்ளனர். மேலும், பாலாஜியிடம் இருந்து செல்போனை பறித்து உள்ளனர். இதனை யாரிடமாவது கூறினால், முகநூலில் உனது புகைப்படத்தை பதிவு செய்து அவமானப்படுத்தி விடுவோம் என கூறி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாலாஜி திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியிடம் செல்போன், பணம் ஆகியவற்றை பறித்த மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

Related Stories: