பெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்

நன்றி குங்குமம் தோழி

‘‘சுகப்பிரசவத்திற்கான வழிமுறைகள் ஏராளமாக இருக்கின்றன. கருத்தரித்த பெண்களுக்கு அவற்றை விளக்கிச் சொன்னாலே இந்தியாவில் சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும். பிரசவிக்க எதிர்பார்த்திருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் குழந்தைப்பிறப்பு ஓர் மறக்க முடியாத அனுபவமாகும். இதை ஒரு பாதுகாப்பான, சௌகரியமான அனுபவமாக ஆக்குவதே எங்களது நோக்கமாகும்.

ஆனால், உடல் உழைப்பற்ற சோம்பலான வாழ்க்கைமுறை, தவறான உணவுமுறை பழக்கங்கள் மற்றும் பிரசவ வேதனை குறித்த அச்சம் போன்ற காரணிகள், இந்தியாவில் சிசேரியன் பிரசவங்கள் அதிகரிக்க காரணமாக உள்ளன’’ என்கிறார் கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியின் தாய் மற்றும் குழந்தை பராமரிப்புத் துறையின் தலைவர் டாக்டர் பத்மப்பிரியா.

 ‘‘கருத்தரித்த பெண்கள் ஒவ்வொருவரும் இயல்பாக சிந்திக்க வேண்டும். அதற்கு அவர்களுக்கு பிரசவத்தின்போது ஏற்படும் வலியினை நிர்வகிக்கவும், சமாளிக்கவும் இவர்களுக்கு கற்பிப்பது மிகவும் அவசியமாகும். தாய்க்கும், குழந்தைக்கும் இயற்கையான முறையில் ஏற்படும் சுகப்பிரசவம் ஒரு நேர்மறையான அனுபவமாக இருக்கும் என்பது குறித்து அவர்களுக்கு விளக்கவேண்டும்.

‘வலியற்ற’ பிரசவத்துக்கு  ஏதுவாக இருக்கக்கூடிய பல்வேறு வழிமுறைகள் குறித்து எடுத்துக் கூற வேண்டும். ஒவ்வொரு குழந்தைப்பிறப்பும் தனித்துவமானது. தாயாகப்போகும் ஒவ்வொரு பெண்ணும், ஒரு அழகான, இயல்பான சுகப்பிரசவத்தின் மூலம் குழந்தைப்பிறப்பை கண்முன் கொண்டு வந்து சிந்தித்துப் பார்க்கவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இந்த நோக்கத்திற்காகத்தான் பிரசவத்திற்காக காத்திருக்கும் ஒவ்வொரு பெண் மற்றும் அவளது குடும்பத்தினருக்கு ‘இயல்பாக சிந்தியுங்கள்’ என்பதை நாங்கள் வலியுறுத்திக் கூறுகிறோம்’’ என்ற டாக்டர் பத்மப்பிரியா பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சுகப்பிரசவங்களை மேற்கொண்டுள்ளார்.

‘‘இந்தியாவில் சிசேரியன் வழியாக பிறக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியிருக்கிறது.  2005-06 கால  அளவில் சிசேரியன் முறையில் பிறந்த குழந்தைகளின் விகிதாச்சாரம் இந்நாட்டில் 9% ஆக பதிவாகியிருந்தது. உலக சுகாதார நிறுவனம் சிசேரியனுக்குப் பரிந்துரைக்கும் அளவானது, 10 முதல் 15% என்பதாக மட்டுமே இருக்கின்ற நிலையில், 2015-2016 காலகட்டத்தில் 18% ஆக உயர்ந்திருக்கிறது.  இயல்புக்கு மாறான நிலையில் குழந்தை இருப்பது, நஞ்சுக்கொடி படுக்கையிலிருந்து ரத்தம் கசிவது, கட்டுப்படுத்த முடியாத உயர்ரத்த அழுத்தம் போன்ற சூழ்நிலைகளில் உயிர்காக்கும் கருவியாக சிசேரியனை பயன்படுத்தலாம்.

ஆனால், இப்போது பிரசவ வலி இயல்பாக தோன்றுவது இல்லை. பிரசவவலி அச்சமும் ஒரு காரணமாக உள்ளது. எல்லாவற்றையும் விட குழந்தை பிறக்கும் ராசி , நேரங்களை பெற்றோர்களே நிர்ணயிப்பதால் சிசேரியன் மூலம் பிரசவம் வழிமுறைப்படுத்தப்படுகிறது’’ என்ற டாக்டர் பத்மப்பிரியா சுகப்பிரசவம் ஏற்படக்கூடிய வழிமுறைகளை பற்றி விவரிக்கிறார்.

‘‘தாய் மற்றும் குழந்தை இருவரும் சுகப்பிரசவத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்போக்கை கொண்டுவர வேண்டும். உடல் உழைப்பற்ற வாழ்க்கைமுறை மற்றும் தவறான உணவு பழக்கவழக்கங்களினால் சுகப்பிரசவம் இயல்பான முறையில் உருவாகாத நிலை ஏற்பட்டுள்ளது. வாழ்க்கை முறையில் மாற்றங்களையும், திருத்தங்களையும் செய்வதன் மூலம் இதற்கான தீர்வு காணலாம். இந்த திருத்த நடவடிக்கைகள், கருத்தரிப்பதற்கு முந்தைய காலத்திலேயே தொடங்க வேண்டும்.

கர்ப்ப காலத்தின்போது ஒரு இயல்பான பிரசவத்தை மேற்கொள்வதற்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் கருத்தரித்த பெண் தயாராக இருக்க வேண்டும். கருத்தரித்த காலத்தின் போது உரிய உடல் எடை அதிகரிப்பு மற்றும் பிரசவத்திற்கு முந்தைய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் போது அது சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும். இதனை பின்பற்றினால் கர்ப்பகாலத்தில் ஏற்படும் நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம் மற்றும் பிரசவ நாட்கள் தள்ளிப்போதல் போன்ற மருத்துவ பிரச்னைகள் ஏற்படாமல் சுகப்பிரசவம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

மூன்றாவது பிரச்னை, பிரசவ வேதனை குறித்த அச்சம். இது சிசேரியன் ஏற்பட மிகப்பொதுவான காரணங்களுள் ஒன்றாக மாறியிருக்கிறது. இந்த அச்சத்தை பெண்கள் மனதில் இருந்து நீக்கினாலே அவர்கள் தாமாகவே சுகப்பிரசவத்திற்கு முன்மொழிவார்கள்’’ என்றவர் அதனால் ஏற்படும் நன்மைகளை பட்டியலிட்டார். ‘‘சிசேரியன் பிரசவ முறைகளோடு தொடர்புடைய இடர்களை தவிர்க்கலாம். பிரசவத்திற்கு பிறகு சீக்கிரமே இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம். சிசேரியன் முறையால் ஏற்படும் பிற்கால பிரச்னைகளில் இருந்து காத்துக் கொள்ளலாம்.

முதல் பிரசவம் சிசேரியனாக இருந்தால் இரண்டாவது குழந்தை சுகப்பிரசவமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் சில விஷயங்களை கவனிக்க வேண்டும். சிசேரியன் செங்குத்தான முறையில் செய்யப்பட்டு இருந்தால், சுகப்பிரசவம் முயற்சிக்க இயலாது. இதனால் அங்கு தையல் போடப்பட்ட இடத்தில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. உங்களுக்கும், குழந்தைக்கும் தீங்கு விளையக்கூடும். அத்தகைய நேர்வில் சிசேரியன் முறையைத்தான் நீங்கள் மீண்டும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதனால் முடிந்தவரை முதல் பிரசவத்தை சுகப்பிரசவமாக மாற்றுவது பெண்கள் கையில் தான் உள்ளது’’ என்றார்.

- சுயம்புலிங்கம்.

Related Stories: