பெண்ணாக பிறக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்!

நன்றி குங்குமம் தோழி

வில்லிசை கலைஞர் ஜமுனா ராணி

சி று தெய்வ வழிபாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த விழா கொடை விழா. பக்தர்கள், தங்களது வழிபாட்டு தெய்வத்திற்கு அளிக்கும் அன்பளிப்பான விழா என்பதால் கொடை விழா என்று பெயர். இந்த மாதிரியான கொடை விழாக்கள் தென் தமிழகமான மதுரை, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபெறுகிறது.

குறிப்பாக முத்தாரம்மன், சுடலைமாடன், இசக்கியம்மன் உள்ளிட்ட தெய்வங்கள் அருள்புரியும் கோயில்களில் நடைபெறுகிறது. கொடை விழாவின் போது கோயில் விக்கிரஹங்களுக்கு அபிஷேகங்கள் செய்து, புத்தாடைகள் அணிவித்து அனைத்து வகையான பழங்கள் மற்றும் சர்க்கரை பொங்கல், புழுங்கல் அரிசி உணவு, கூட்டு குழம்பு, அப்பளம் வகைகளுடன் உணவு படைத்தும் (சில தெய்வங்களுக்கு அசைவ உணவு படையல்) பல மலர்களால் அலங்கரித்தும் பூஜை நடைபெறும்.

ஒவ்வொரு முறை பூஜையின் போது அந்த தெய்வத்தின் அவதாரம் குறித்து வில்லிசையும் பாடப்படும். அப்போது சாமி அங்கிருக்கும் பக்தர் ஒருவர் மேல் வந்து இறங்கும். அந்த நபர் சாமியின் அருள் வந்து ஆடுவார். இறைவனை போற்றி பாடப்படும் வில்லிசை கலை பாரம்பரியமாக கிராமங்களில் இருந்து வருகிறது. இந்த கலையில் கடந்த எழுபது ஆண்டுகளாக பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். அத்தகைய வில்லிசை கலைஞரான ஜமுனா ராணி, திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து அருகேயுள்ள தென்கலம்புதூர் கிராமத்தில் வசித்து வருகிறார். அவரை நாம் சந்தித்தபோது....

‘‘பழமை வாய்ந்த கலைகளில் வில்லிசையும் ஒன்று. தெய்வங்களின் வரலாற்றினை கண்முன் நிறுத்தும் கதைப்பாடல்தான் இந்த வில்லிசை. இது தெய்வங்களுக்கு பிடித்த உயிரோட்டமான இசையாகும். இந்த வில்லிசையை பாட ஆர்வ மிகுதியின் காரணமாகத் தான் விரும்பி ஏற்றுக்கொண்டேன். இந்த வில்லிசை தான் எனக்கும், என் குடும்பத்திற்கும் சோறு போடுகிறது.

இந்த வில்லிசைக்காக என் வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவித்திருக்கிறேன். இதற்காக சிலவற்றை இழந்திருக்கிறேன். என் தந்தை காளியப்பன் ஒரு சிலம்பாட்டக்கலைஞர். எங்கள் வீட்டில் என்னுடன் சேர்த்து ஐந்து பேரு. நாங்க வசிச்சது எங்க அப்பா ஊர் சங்கரன்கோயில் அருகேயுள்ள அன்னபூர்ணபுரம் என்ற கிராமம்.

6ம் வகுப்பு வரை படித்த என்னால் அதற்கு பிறகு குடும்ப சூழ்நிலை காரணமாக மேற்கொண்டு படிக்க முடியவில்லை. எங்கள் ஊரிலிருந்து 12 கி.மீ தொலைவிலுள்ள கழுகுமலை பகுதியில் செயல்பட்ட தீப்பெட்டி கம்பெனிக்கு வாரம் ரூ.150 சம்பளத்திற்கு வேலைக்கு சென்று வந்தேன். இரண்டு வருடம் வேலைக்கு சென்றேன். அப்பாக்கும் சரியான வேலை அமையாததால், அம்மா ஊரான தென்கலம்புதூருக்கு குடும்பத்துடன் குடியேறினோம்.

இங்கு வயல் வேலையான நடவு செய்தல், களை பறித்தல், கதிரறுத்தல் வேலைகளை செய்து வந்தேன். அப்போதெல்லாம் கோயில் கொடைவிழாக்களுக்கு செல்லும் போது, வில்லிசை பார்த்தால் நாமும் வில்லிசை பாட வேண்டும் என்று எண்ணுவேன். வீட்டிற்கு வந்து பாடி பார்ப்பேன். இந்நிலையில் சண்முகத்தாய் வில்லிசை குழுவினர் எங்கள் ஊரில் உள்ள ஐகோர்ட் மகாராஜா கோயில் கொடைவிழாவிற்கு பாட வந்திருந்தனர். அவர்களிடம் நான் பாட வாய்ப்பு கேட்டேன். அவர்களும் வாய்ப்பு தருவதாக கூறினர்.

 அம்மாவிடம் பேசி என்னை அவர்களுடனே அழைத்து சென்றனர். என் 16 வயதில் வல்லநாடு சாஸ்தா கோயில் விழாவில் முதன் முதலில் பாடினேன். 3 நாள் கொடை விழாவிற்கு ரூ.300 கிடைத்தது. அன்று தொடங்கியது என் வில்லுப்பாட்டு பயணம்’’ என்றவர் கலைக்காக தன் வாழ்க்கையையே துச்சமாக நினைத்து விலகி வந்துள்ளார்.

‘‘19 வயதில் எனக்கு திருமணம் நடந்தது. குழந்தைகள் இரண்டு பிறந்த நிலையில் என் கலை உலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க என் கணவர் விரும்பினார். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. என் காதலும், என் வாழ்வும், என் உயிர் மூச்சு எல்லாமே வில்லிசை தான். அதில் நான் திடமாக இருந்தேன்.

இதனால் என் வாழ்க்கையில் விரிசல் உருவானது. அந்த நிலையிலும் என் கலைப்பயணம் தொடர்ந்தது. இன்று என் கணவர் என் கலையை புரிந்து கொண்டுள்ளார். என் குடும்பத்திற்கே வில்லிசை தான் சோறு போடுகிறது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை இன்று என் வில்லிசை ஒலித்துக் கொண்டிருக்கிறது.

பொதுவாகவே வில்லிசை பாடும் போது, யாராவது ஒருவரின் உடலில் சாமி வந்திறங்கும். அதை பார்க்கும் போது என்னுடைய உடல் எல்லாம் சிலிர்த்திடும். காரணம் அந்தளவு இறைவனோடு ஒன்றி போய் பாடுவோம். கலைக்கு என்றுமே தடை கிடையாது. பெண்கள் மாதவிலக்கின் போது, கோயிலுக்கு செல்ல அனுமதிக்க மாட்டார்கள்.

அதை நான் மறுக்கவில்லை. அந்த ஐதீகத்தை நான் உடைக்கவும் விரும்பவில்லை. ஆனால் அந்த நாட்களாக இருந்தாலும் எங்களின் இசைக்கு மட்டும் ஓய்வே கிடையாது. காரணம், இயற்கை நியதிகளை கூறி, இசைக்கு முட்டுக்கட்டை போடக்

கூடாது என்பது எனது எண்ணம்.

பெண்ணாக பிறக்க ஒவ்வொரு பெண்ணும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பதே எனது கருத்து. இந்த வில்லிசையின் மூலம் மாதம் குறைந்தது 45 ஆயிரம் வரை சம்பாதிக்கிறேன். எந்த துறையானால் என்ன, அதில் வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வோடு, துடிப்போடு செயல்பட வேண்டும். இதில் ஆண், பெண் என்ற பேதமை மட்டும் கூடவே, கூடாது’’ என்றார் வில்லிசை கலைஞரான ஜமுனா ராணி.

- சு.இளம் கலைமாறன்

ச.சுடலை ரத்தினம்

Related Stories: