ஆம்பூர் பிரியாணிக்கு நான் அடிமை

நன்றி குங்குமம் தோழி

நடிகை சாந்தினி

‘‘எந்த ஒரு குழந்தைக்கும் அம்மாவின் கைப்பக்குவத்தில் தயாராகும் சாப்பாடு தான் முதல் சாப்பாடாக இருக்கும். எனக்கும் அப்படித்தான்’’ என்று தன் உணவு அனுபவங்களை பேசத் துவங்கினார் நடிகை சாந்தினி தமிழரசன். ‘‘சின்ன வயசில் இருந்தே எங்க வீட்டில் ஓட்டலுக்கோ அல்லது வெளியே சென்று சாப்பிட்டது கிடையாது.

பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே அம்மாவின் சாப்பாடு தான். அம்மா அதில் ரொம்பவே ஸ்ட்ரிக்டா இருந்தாங்க. நான் பன்னிரெண்டாவது படிக்கும் வரை என்ன ஆனாலும் அம்மா மதியம் சாப்பாடு டிபன் பாக்சில் கட்டிக் கொடுத்திடுவாங்க. அம்மா ரொம்ப நல்லா சமைப்பாங்க. அதுவும் வெரைட்டியா சமைப்பாங்க. குறிப்பா அசைவம்னா ரொம்ப நல்லா செய்வாங்க’’ என்ற சாந்தினி அசைவ உணவுப் பிரியராம்.

‘‘எனக்கு சைவ சாப்பாட்டை விட அசைவ சாப்பாடு தான் ரொம்ப பிடிக்கும். ரசம் சாதமாக இருந்தாலும் அதற்கு ஒரு முட்டை ேராஸ்ட் அல்லது சிக்கன் இருக்கணும். அம்மாவும் எனக்காக பார்த்து பார்த்து சமைச்சு தருவாங்க. இருந்தாலும் எப்போதும் அசைவம் மட்டுமே சாப்பிட முடியாதுல்ல. கொஞ்சமாவது காய்கறி சத்து ேசரணும்ன்னு அம்மா, காய்கறி வேகவச்ச தண்ணீரை ரசம், சாம்பார் அல்லது குழம்பில் சேர்த்திடுவாங்க.

அப்படியாவது காய்கறி சத்து சேரட்டும்ன்னு அம்மா ெராம்பவே மெனக்கெடுவாங்க.அவங்களுக்கு சமையல் மேல் ஆர்வம் அதிகம். சமையலின் சுவையில் அப்படி ஒரு அன்பு தெரியும். நிறைய புத்தகம் மற்றும் டி.வியில் வரும் சமையல் குறிப்பைப் பார்த்து எங்களுக்கு புதுசு புதுசா சமைச்சு தருவாங்க. சைனீஸ் நூடுல்ஸ் முதல் ஃபிரைட் ரைஸ் மற்றும் பீட்சா கூட அம்மா வீட்டில் தான் செய்வாங்க. அதனாலேயே நாங்க வெளியே ேபாய் சாப்பிட்டதே இல்லை. வெரைட்டினாலும் அம்மாவின் கைப்பக்குவம் தான்.

நான் முதன் முதலில் கல்லூரியில் சேர்ந்த பிறகு தான் வெளியே சாப்பிட பழகினேன்னு சொல்லணும். எத்திராஜ் கல்லூரியில் மாலை நேர வகுப்பில் தான் படிச்சேன். அப்பவும் மதிய உணவு வீட்டில் இருந்தே சாப்பிட்டு வந்திடுவேன். ஆனால் மாலையில் கல்லூரியில் பிரேக் விடுவாங்க. அந்த சமயம் கேன்டீனில் போய் சாப்பிட ஆரம்பிச்சேன். அங்கு சாட் உணவுகள் ரொம்ப நல்லா இருக்கும்.

அப்புறம் கல்லூரிக்கு எதிரே மில்கிவேன்னு ஒரு சாண்ட்விச் கடை. பிரேக் நேரத்தில் பெரும்பாலும் சாண்ட்விச், ஐஸ்கிரீம்ன்னு அங்கு சாப்பிட போயிடுவோம். இப்படித்தான் ஃபிரண்ட்ஸ்சோட ெவளியே சாப்பிட பழகினேன்.

அதன் பிறகு ஷூட்டிங் சாப்பாடு தான் நான் வெளியே சாப்பிட்ட உணவு. என்னதான் ஷூட்டிங் சாப்பாடு வெளியே சாப்பிட்டாலும் எப்போதுமே அம்மாவின் உணவு தான் எனக்கு ஃபேவரெட். காரணம் அவங்க வீட்டிலேயே சின்னதா தோட்டம் வச்சு இருந்தாங்க. அதில் விளையும் காய்கறிகள் மற்றும் கீரையை கொண்டு தான் சமைப்பாங்க. அதே போல் சமையலுக்கு தேவையான எல்லா மசாலா பொடிகளையும் வீட்டிலேயே அரைச்சிடுவாங்க. எனக்கு தெரிஞ்சு இது வரை அவங்க கடையில் பேக்கெட் மசாலாக்களை வாங்கியது இல்லை.

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டா எனக்கு கொண்டாட்டமாயிடும். வீட்டில் கண்டிப்பா ஐந்து வகையான அசைவ உணவு இருக்கும். அதுவும் எனக்கு பிடிச்ச இறால் மசால் இருந்தா ஒரு பிடி பிடிச்சிடுவேன். அம்மா ரசமே பல வகையில் செய்வாங்க. எல்லா ரசத்திலும் காய்கறி வேகவச்ச தண்ணீரை சேர்ப்பாங்க.

அதே போல் சாம்பாரிலும் சேர்க்கும் போது அதன் சுவை வித்தியாசமா இருக்கும். அம்மா செய்ற வெண்டைக்காய் பொறியல் ரொம்பவே பிடிக்கும்’’ என்ற சாந்தினி தென்னிந்திய உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுவாராம். ‘‘வீட்டில் தென்னிந்திய உணவு தான் எப்போதும் இருக்கும். அதுவும் குறிப்பா அரிசி சாதம் தான் நிறைய சாப்பிட்டு பழகி இருக்கேன். அப்பெல்லாம் கலோரி பத்தி எல்லாம் நான் கவலைப்பட்டதே கிடையாது. அம்மாவின் சமையலில் நல்லா சாப்பிட்டு தான் வளர்ந்தேன்.

 சினிமாவுக்கு வந்த பிறகு தான் டயட் இருக்க ஆரம்பிச்சேன். மேலும் வீட்டு சாப்பாடு சின்ன வயசில் இருந்தே சாப்பிட்டு பழகியதால், வெளியே சாப்பிடுவதற்கு பெரிய தாபம் ஏற்பட்டது இல்லை. அப்படியே சாப்பிட்டாலும் எனக்கு பிடிச்சு இருந்தாதான் சாப்பிடுவேன். இல்லைன்னா அந்த பக்கமே போகமாட்டேன். எக்சாடிக் உணவுகளை எல்லாம் சாப்பிட விரும்பியது இல்லை’’ என்றவர் ஷூட்டிங்கிற்காக தாய்லாந்து போன போது அங்கும் ரொம்பவே பார்த்து பார்த்து சாப்பிட்டுள்ளார்.

‘‘ஷூட்டிங்கிற்காக ஒரு முறை தாய்லாந்துக்கு போன ேபாது அங்கு பனானா ஸ்டிக்கி ரைஸ் சாப்பிட்டேன். அது கொஞ்சம் வித்தியாசமா இருந்தது. இனிப்பு கலந்து இருந்தது. மத்தபடி அங்கு பல வகையான உணவுகள் தெருவில் இருக்கும். அதெல்லாம் பார்க்கும் போதே எனக்கு வயிற்றுக்குள் ஏதோ பிசையும். அதனாலேயே அங்க நான் சிக்கன், மட்டன், இறால்ன்னு மட்டுமே சாப்பிட்டேன்.

ஒரு முறை சென்னை மகாபலிபுரத்தில் மூன்ரேக்கர்ஸ்ன்னு ஓட்டலில் ஸ்கிவிட் மசாலா மற்றும் பட்டர் பிரான்சும் சாப்பிட்டேன். ரொம்ப நல்லா இருந்துச்சு. அதை சாப்பிட பழக்கியது என் கணவர். நானும் அவரும் முதல் முறையா அங்க போன போது அவர் சொல்லித்தான் சாப்பிட்டேன். நல்லா இருந்தது. அதன் பிறகு எப்போது அங்கு போனாலும் ஸ்கிவிட் மசாலா, பட்டர் பிரான்சும் சாப்பிடாமல் வந்ததில்லை. அந்த ஓட்டலில் இது

இரண்டுமே என்னுடைய ஃபேவரெட்.

எனக்கு மெக்டொனால்ட்ஸ் பர்கர் மற்றும் சாண்ட்விச் ரொம்ப பிடிக்கும். அமெரிக்காவில் கனடா போன போது, எனக்கு சாப்பாட்டுக்கு பிரச்னையே இருந்தது இல்லை. ஒரு பர்கர் கொடுத்திட்டா போதும். நான் சைலன்டாயிடுவேன். அதுவும் அங்குள்ள மெக்டொனால்சை தேடி போய் சாப்பிட்டேன். அதே போல் அங்கு டோனட் கபாப் ரொம்ப ஃபேமஸ். டோனட்டை கபாப் முறையில் செய்து தருவாங்க. நான் கனடாவிற்கு இங்க இருந்து போகும் போதே டோனட் கபாபை பற்றி கேள்விப்பட்டு கண்டிப்பாக சாப்பிடணும்ன்னு ேபாய் சாப்பிட்டேன்.

பர்கர் ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் இத்தாலியன் உணவுகளையும் விரும்பி சாப்பிடுவேன். பாஸ்தா, பீட்சா எப்படி கொடுத்தாலும் பிடிக்கும். பொதுவாகவே நான் ஒரு ஊருக்கு ஹாலிடேவிற்காக போனால், அந்த ஊரை பத்தி முழுமையா தெரிந்துகொள்வேன். அந்த ஊரின் உணவு பழக்கம் முதல் அந்த ஊரில் உள்ள இடங்கள் மற்றும் மக்கள், ஷாப்பிங் செய்யும் இடங்கள் எல்லாவற்றையும் தெரிந்துகொள்வேன். சில சமயம் சின்னதா குறிப்பும் எடுத்துக் கொள்வேன். அதன் படி தேடிப் போய் சாப்பிடுவேன்.

ஒரு முறை பாரிஸ் போன போது, அங்கு ஐபில் டவர் அருகில் ஒரு உணவகத்தில் கேண்டில் லைட் டின்னர் நன்றாக இருக்கும்ன்னு கேள்விப்பட்டேன். நானும் என் கணவரும் ஹனிமூனுக்கு அங்குதான் போனோம். பாரிசில் இறங்கிய மறுநிமிடமே அந்த ஓட்டலில் முதலில் எங்களுக்கான சீட்டை பிளாக் செய்த பிறகு தான் நான் மறுவேளையே பார்த்தேன். என் கணவர் கொஞ்சம் வித்தியாசமா உணவுகளை டிரை செய்வார். நான் அப்படி இல்லை. அவர் ேகால்ட் கட் மீட் கூட சாப்பிட்டு இருக்கார்.

நான் அந்த விஷப்பரீட்ைச எல்லாம் எடுக்க மாட்டேன். எனக்கு என்ன பிடிக்குமோ அதை மட்டுமே சாப்பிடுவேன். காரணம் அவர் பல காலம் ஓட்டல் சாப்பாடு தான் சாப்பிட்டுள்ளார். எங்களுக்கு கல்யாணமான பிறகு எப்போதுமே வீட்டு சாப்பாடுன்னு மாறிட்டார். அதுவும் என் அம்மா சமையல்ன்னா ‘நோ’ன்னு சொல்ல மாட்டார். அதனாலேயே எனக்கு ஷூட்டிங் இல்லாத போது வீட்டுல சமைப்பதை வழக்கமா கொண்டு இருக்கேன்.

அசைவ உணவு அம்மா அளவுக்கு இல்லைன்னாலும் நல்லா செய்வேன். மட்டன் பிரியாணி அப்புறம் எனக்கு பிடிச்ச இறால் மசாலா இரண்டுமே சூப்பரா செய்வேன்’’ என்றவருக்கு என்னதான் பல ஊர்களுக்கு சென்று சாப்பாடு சாப்பிட்டாலும், வீட்டுக்கு வரும் போது அம்மாவின் ரசம் சாப்பிட

வேண்டுமாம்.

‘‘பத்து நாள் ஷூட்டிங் இருக்கும். அங்க நல்ல சாப்பாடு தான் தருவாங்க. சில சமயம் வெளியூர் போனா அங்க ஓட்டலில் ஏதாவது சாப்பிடவோம். ஷூட்டிங் இருக்கும் வரை ஒன்னும் தெரியாது. பேக்கப்ன்னு சொன்னதும் அம்மாவின் சாப்பாடு நியாபகம் வந்திடும். உடனே அம்மாக்கு போன் போட்டு, ரசம் சிக்கன் கிரேவின்னு மெனு சொல்லிடுவேன்.

சூடான சாதத்தில் கொஞ்சம் நெய் சேர்த்து பருப்பு ரசம் அப்புறம் பெப்பர் சிக்கன் கிரேவி சாப்பிடும் போது அமிர்தமா இருக்கும். இப்ப நினைச்சாலும் சாப்பிட தோணும். சினிமாவிற்கு வந்த பிறகு டயட் மேல் கவனம் செலுத்த ஆரம்பிச்சுட்டேன். நான் அதிகம் உடற்பயிற்சி செய்ய மாட்டேன்.

மாறாக 80% டயட் என்னுடைய உணவுப்பழக்கத்தில்தான் மெயின்டெயின் செய்ேறன். எனக்கு அதிகமான புரதம் சார்ந்த உணவு செட்டாகாது. சின்ன வயசில் இருந்தே சாப்பாடு சாப்பிட்டு பழகிட்டேன். அதனால் இப்ப சிகப்பரிசி தான் சாப்பிடறேன். காலையில் முட்டையின் வெள்ளை கரு, பிரவுன் பிரட், அப்புறம் இடையே பழங்கள், ஜூஸ் மற்றும் சூப்புன்னு சாப்பிடுவேன்.

மதியம் ஒரு கப் சாதம், காய்கறி, பருப்பு மற்றும் ஏதாவது ஒரு அசைவ உணவு. இரவு ஏழு மணிக்கெல்லாம் என்னுடைய இரவு நேர சாப்பாடு முடிஞ்சிடும். இது தான் என்னுடைய ரெகுலர் மெனு. ஆனால் 365 நாளும் இப்படி சாப்பிட முடியாது. வாரத்தில் ஒரு நாள் சீட்டிங் டே வச்சுப்பேன். அன்னிக்கு எனக்கு பிடிச்ச உணவுகளை சாப்பிடுவேன்’’ என்றவர் வெளியூரில் அவருக்கு பிடிச்ச உணவுகள் பற்றி பகிர்ந்து கொண்டார்.

‘‘மதுரை எனக்கு பிடிச்ச ஊர். அங்கு சாப்பாடும் ரொம்ப நல்லா இருக்கும். அங்க கறி தோசை ரொம்ப விரும்பி சாப்பிடுவேன். எப்ப மதுரை போனாலும் கறி தோசை சாப்பிடாம வந்தது இல்லை. குற்றாலம் போனா பார்டர் கடை பரோட்டாவ பிச்சுப் போட்டு சால்னா சேர்த்து சாப்பிட்டா ரொம்ப நல்லா இருக்கும். இந்த கடையில் சாப்பிடணும்ன்னு தேடிப் போய் சாப்பிட்டேன். ஒரு முறை ஈரோட்டில் ஷூட்டிங் இருந்த போது இணை இயக்குனர் வீட்டில் இருந்து சாப்பாடு வந்தது. மரத்தடியில் தான் அமர்ந்து சாப்பிட்டோம்.

கூட்டாஞ்சோறு சாப்பிட்ட போது மனசுக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்தது. ஐதராபாத் போன போது அங்கு பானை பிரியாணி ரொம்ப விரும்பி சாப்பிட்டேன். என்னுடைய ஆல்டைம் ஃபேவரேட் உணவுன்னா பிரியாணி தான். அங்க லேயர் லேயரா இருக்கும். மசாலா தனியா சாதம் தனியா மிக்ஸ் செய்து சாப்பிடணும். மண் பானையில் வச்சு தருவாங்க. சூட்டோட மண் வாசனையில் சாப்பிடும் போது சுவை வித்தியாசமா இருக்கும். அப்புறம் ஆம்பூர் பிரியாணிக்கு நான் அடிமை’’ என்று பட்டியலிட்டவர் அதிக அளவு சாப்பிடமாட்டாராம்.

‘‘சாப்பாடுன்னா என்னை பொறுத்தவரை நமக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு சாப்பிடணும். எல்லாம் இருக்குன்னு பார்ப்பதை எல்லாம் சாப்பிடக்கூடாது. பிடிச்ச உணவாக இருந்தாலும் நான் அளவோடு தான் சாப்பிடுவேன். சாப்பிட்ட திருப்பதி இருந்தா போதும்’’ என்றார்

அழகாக நடிகை சாந்தினி.

ஸ்பைசி பிரான் கிரேவி

தேவையானவை  

எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி

வெங்காய் - 1 பெரியது நறுக்கியது

இஞ்சி பூண்டு  - தலா 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

தக்காளி - 1

முந்திரி - 10

மஞ்சள் தூள் - 1/8 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்

தனியா தூள் - 1/2 டீஸ்பூன்

கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

சீரகம் - 1/4 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 1

கறிவேப்பிலை - 1 கைப்பிடி

இறால் - 500 கிராம் (கழுவி மஞ்சள் தூள், தயிர், மிளகாய் தூள், உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்).

செய்முறை  

கடாயில் எண்ணை சேர்த்து வெங்காயத்தை நன்கு வதக்கவும். இதனுடன் இஞ்சி பூண்டு சேர்த்து வதங்கியதும் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும். பிறகு மிளகாய் தூள், கரம் மசாலா. தனியா தூள், முந்திரி சேர்த்து நன்கு வதக்கவும். முந்திரி சேர்க்க விரும்பாதவர்கள் ஒரு கைப்பிடி தேங்காய் துருவலைச் சேர்த்துக் கொள்ளலாம். இவை ஆறியதும் விழுதாக அரைத்து தனியே வைத்துக் கொள்ளவும்.

மற்றொரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் சீரகம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு பொன்னிறமாக வதங்கியதும் அதில் கறிவேப்பிலை சேர்த்து மசாலா தடவிய இறாலை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி தனியாக வைக்கவும். இப்போது ஏற்கனவே அரைத்து வைத்துள்ள விழுதினை சிறிதளவு தண்ணீருடன் கடாயில் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பச்சை வாசனை போன பிறகு கிரேவி திக்கானதும், வதக்கிய இறாலை அதில் சேர்த்து மூடி போட்டு வேக விடவும். இறால் நன்கு சுருண்டு வதங்கியதும் கொத்தமல்லி தழையை சேர்த்து பரிமாறவும். சாதம், சப்பாத்தி, பிரியாணிக்கு சுவையா இருக்கும்.

ப்ரியா

Related Stories: