கொரோனா பிரச்னைகளை வலுவாக எதிர்கொள்ள தமிழகத்தில் பரிசோதனை, அடிப்படை மருத்துவ கட்டமைப்பை அதிகரிக்க முடிவு

சென்னை:  கொரோனா பிரச்னைகளை வலுவாக எதிர்கொள்ள தமிழகத்தில் பரிசோதனை, அடிப்படை மருத்துவ கட்டமைப்பை மருத்து நிபுணர்களின் ஆலோசனைப்படி  அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா 2வது அலையின் தாக்கம் நாட்டையை புரட்டிப்போட்டுள்ளது. தமிழகத்திலும் தினமும் 200க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகி வருகிறார்கள். இங்குள்ள டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் ஓய்வில்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர்களின் பணியின் முக்கியத்துவம் கருதி டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகையை அறிவித்துள்ளார். இந்த நிலையில், தமிழகம் எப்படி கொரோனாவிலிருந்து மீள முடியும். தமிழகம் சந்திக்கும் பிரச்னைகள்,  அவற்றை எப்படி எதிகொள்வது என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன. அதற்கு ஒரே தீர்வு கொரோனா பரிசோதனையின் எண்ணிக்கையை கட்டாயம் அதிகரிக்க வேண்டும்.

கடந்த மார்ச் இறுதியில் ஒரு நாளைக்கு 2,900 கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் தற்போது 26 ஆயிரமாக இந்த பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 23.6 சதவீதம் பேருக்கு தொற்று உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன. சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருநெல்வேலி, தேனி மாவட்டங்களில் இந்த சதவீதம் 21 லிருந்து 22 ஆக உள்ளது. தமிழகத்தின் சராசரி பாதிப்பு 16 சதவீதமாக உள்ளது. கடந்த 2020 மார்ச் மாதத்திலிருந்து 14 மாதங்களில் தமிழகத்தின் கொரோனா பாதிப்பு 14.3 லட்சமாகும். இதே பாதிப்பு நிலை நீடிக்குமானால் அடுத்த ஒரு மாதத்திற்குள் இந்த எண்ணிக்கை இருமடங்காகிவிடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ேம 7ம் தேதியிலிருந்து மே 11ம் தேதிக்குள் அதாவது 4 நாட்களில் 1.62 லட்சம்பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கொரோனா கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படும் ஆக்சிஜனுக்காக 3லிருந்து 30 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அவசர சிகிச்சை பிரிவுகளை வயதான நோயாளிகளுடன் நல்ல ஆரோக்கியமான உடல் நிலையில் உள்ள கொரோனா நோயாளிகளும் பங்கிடும் அவலம் ஏற்பட்டுள்ளது.  

இந்த சிக்கல்களில் இருந்து விடுபட முதலில், கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் சங்கிலிபோல் பரவும் தொற்றை தடுக்க முடியும். கொரோனா அதிகம் பாதிப்புள்ள இடங்களிலும், மாவட்டங்களிலும் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். பொதுமக்களுக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளதா என்பதை கண்டறிய நியமிக்கப்பட்டுள்ள முன்களப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுப்புவதற்கு முன்புள்ள இடைப்பட்ட காலத்தில் உரிய மருத்துவ வசதிகளை செய்து தந்தால் நோயாளிகளை தீவிர பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும்.கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி போக்குவரத்து வசதியை செய்து தந்தால் தொற்று பரவலை தடுக்கலாம்.

கொரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டறிந்தவுடன் அவர்களுக்கு வீடுகளிலேயே தொலைபேசி வாயிலாக மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் திட்டத்தை அரசே கொண்டு வரவேண்டும். வீடுகளில் தனிமைப்படுத்தியிருக்கும் கொரோனா பாதிப்புள்ளவர்களுக்கு அவர்களின் வீடு தேடி மருந்துகளையும், அன்றன்றைக்கு தேவையான உணவுப் பொருட்களையும் தன்னார்வலர்கள் மூலம் வழங்கினால் நோய் தொற்று பரவல் தடுக்கப்படும். இதுபோன்ற அடிப்படை நடைமுறைகள் மற்றும் மருத்துவ கட்டமைப்புகளை செய்ய வேண்டும் என மருத்துவ நிபுணர்களும், அறிவியல் வல்லுநர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில், பரிசோதனை, அடிப்படை மருத்துவ கட்டமைப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறைவான கொரோனா சோதனை

தமிழகத்தில் ஒவ்வொரு 10 லட்சம்  பேருக்கும் 2.75 லட்சம் பேர் மட்டுமே கொரோனா சோதனை செய்துள்ளனர். இந்திய  அளவில் இந்த எண்ணிக்கை 2.2. லட்சம்தான். அந்த வகையில் தமிழகத்தில் கூடுதல்  பரிசோதனை என்றாலும் கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் மாவட்டங்களில் இதுவரை 1.5  லட்சம் பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில்,  தென்காசி. திருப்பத்தூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை  செய்ய ஒரே ஒரு பரிசோதனை மையம்தான் உள்ளது என்பது வேதனையான விஷயம். எனவே,  இந்த பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை

பத்து லட்சம் பேரில்

தமிழ்நாடு        2,75,120

இந்தியா        2,20,108

அதிக சோதனை

செங்கல்பட்டு    5,91,750

நீலகிரி        5,87,047

காஞ்சிபுரம்    5,84,665

சென்னை        5,35,295

குறைந்த சோதனை

தென்காசி        1,64,706

திருவண்ணாமலை    1,47,464

கிருஷ்ணகிரி    1,37,993

நாகப்பட்டினம்    1,33,854

தொற்று

சதவீதம்    ஏப்ரல்

2ம் வாரம்    மே

2ம் வாரம்

தூத்துக்குடி    12.6    23.6

செங்கல்பட்டு    9.3    22.2

சென்னை        15.6    21.9

கோவை        8.6    21.1

நெல்லை        11.5    21

தேனி        6.1    21

தமிழ்நாடு        8.3    15.9

மாவட்ட வாரியாக பலி சதவீதம்

தமிழகத்தின் 12 மாவட்டங்களில்தான் அதிக பலி ஏற்பட்டுள்ளது. கடந்த  வாரத்தில் திருப்பத்தூரில் பலி எண்ணிக்கை குறைவாக பதிவாகியுள்ளது. மதுரை, தென்காசி, ராமநாதபுரம், காஞ்சிபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பலி எண்ணிக்கை 1.5 சதவீதமாகும், சென்னையில் 1.3, திருச்சி 0.9, கோவை 0.8, தூத்துக்குடி 0.6, நீலகிரி 0.5 என்று கணக்கிடப்பட்டுள்ளது.

Related Stories: