மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி எல்லைகளில் சாலை அமைக்கும்போது மேற்பரப்பை சுரண்டி எடுத்துவிட்டு புதிய சாலை அமைக்க வேண்டும்: அரசு உத்தரவு

சென்னை: தமிழக தலைமை செயலாளர் இறையன்பு நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலை துறையை சார்ந்த சாலைகளில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளும்போது ஏற்கனவே உள்ள சாலை மட்டத்தினை உயர்த்துவதால் சாலையின் தன்மை (நடைபாதை, வடிகால் முதலியவை) பாதிக்கப்படுகிறது. மேலும், மாநகராட்சி எல்லைக்குள் இருக்கும் சாலைகள் ஏற்கனவே இரண்டு அல்லது மூன்று அடுக்குகள் அடர் தார்தளம் போடப்பட்டு இருக்கும். ஆதலால், மாநகராட்சி எல்லைக்குள் இருக்கும் சாலைகளில் மேலும் ஓர் அடுக்கு அடர் தார்களம் போட்டு சாலை மட்டத்தை உயர்த்த வேண்டியது இல்லை.எனவே நெடுஞ்சாலைத்துறை மூலமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி எல்லைக்குள் உள்ள சாலைகளில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளும்போது சாலைகளின் மேற்பரப்பை சுரண்டி எடுத்துவிட்டு அதே அளவுக்கு மேற்தளம் அமைக்கும் வகையில் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும்.

* சாலைகளின் மேற்தளம் ஏற்கனவே போதுமான கனத்துடன் கட்டமைப்பட்டுள்ளதால் பி.பி.டி. சோதனை மேற்கொள்ள வேண்டியதில்லை.

* எந்த சூழ்நிலையிலும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி எல்லைக்குள் உள்ள சாலைகளில் மட்டம் அதிகரிக்கப்பட கூடாது.

*  சாலைகளின் மேற்தள கட்டுமானத்தை மட்டும் தேவைப்படும் கனத்திற்கு சுரண்டி எடுத்துவிட்டு அதே அளவுக்கு மேற்தளம் இடவேண்டும். இது வீடுகளுக்குள் நீர் புகுவதை தடுக்கும்.

* மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி எல்லைக்குள் சாலைகளில் தார் மேற்தளத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

* சாலை தார் மேற்தள கனமானது இந்திய சாலை காங்கிரஸ் விதியின்படி சாலையின் போக்குவரத்து செறிவுக்கேற்ப மாறுபடும்.

Related Stories: