கொரோனா தொற்றால் பல்லாவரம் உதவி கமிஷனர் பலி: காவல்துறை அதிகாரிகள் அஞ்சலி

சென்னை: பல்லாவரம் உதவி கமிஷனராக பணியாற்றி வந்த ஈஸ்வரன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (52). இவர் கடந்த 1996ம் ஆண்டு தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். பல்வேறு இடங்களில் சிறப்பாக பணியாற்றிய ஈஸ்வரன் சென்னை மாநகர காவல் துறையில் மதுரவாயல், எண்ணூர் காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி உள்ளார். பின்னர் உதவி கமிஷனராக பதவி உயர்வு பெற்ற ஈஸ்வரன், பல்லாவரம் சரக உதவி கமிஷனராக பணியாற்றி வந்தார். இவர், கொளத்தூர் செல்லியம்மன் கோயில் 2வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி நிர்மலா தேவி (45), மகள் செல்சியா (20), மகன் ஸ்ரீமன் (17) ஆகியோருடன் வசித்து வந்தார்.

கடந்த 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது உதவி கமிஷனர் ஈஸ்வரன் பணியில் ஈடுபட்டார். மறுநாள் அவருக்கு காய்ச்சல்  ஏற்பட்டது. உடனே கொரோனா பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு நோய் தொற்று உறுதியானது. இதையடுத்து, கடந்த 5ம் தேதி கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில்  போலீசாருக்கான  கொரோனா தடுப்பு முகாமில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மதியம் 1.45 மணிக்கு உயிரிழந்தார்.

உதவி கமிஷனர் ஈஸ்வரன் மகள் செல்வியா நீட் தேர்வுக்காக சொந்த ஊரான நமக்கல்லில் உள்ள பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். இதனால், ஈஸ்வரனின் மனைவி மற்றும் 2 குழந்தைகளும் சொந்த ஊரான சேந்தமங்கலத்தில் உள்ளனர். கணவர் இறந்த தகவல் அவரது மனைவி நிர்மலா தேவிக்கு தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் மற்றும் குழந்தைகள் இருவரும் சென்னைக்கு நேற்று நள்ளிரவு வந்தனர்.

அவரது உடல் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனைப்படி இன்று காலை 9 மணிக்கு கொளத்தூரில் உள்ள மயானத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பல்லாவரம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் அவரது உருவ படத்திற்கு உயர் அதிகாரிகள் மற்றும் சக போலீசார் மலர் அஞ்சலி செலுத்தினர்.

கிராம நிர்வாக அலுவலர் உயிரிழப்பு

திருவொற்றியூர் கே.வி.கே.குப்பத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (36), கிராம நிர்வாக அலுவலர்.  இவருக்கு கீர்த்தனா என்ற மனைவி மற்றும் 3 வயதில் ஒரு மகன் உள்ளனர். கடந்த  சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஜெயக்குமார், திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று  காலை அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக  உயிரிழந்தார்.

Related Stories: