ஊரடங்கு விதியை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க 30 குழுக்கள்: மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டங்களில் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த மாநகராட்சி, காவல்துறை மற்றும் வருவாய் துறையினருடன் இணைந்து அமைக்கப்பட்ட மண்டல ஊரடங்கு அமலாக்க குழுவினருக்கு முதன்மை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால்  நேற்று ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில், ஊரடங்கு அமலாக்க குழுவினர் தங்கள் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் ரோந்து பணியில் ஈடுபட்டு அரசின் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது சட்டபடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து அரசின் வழிமுறைகளை பின்பற்றாத கடைகளை மூடி சீல் வைக்க வேண்டும். முகக்கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத நபர்களிடமிருந்து அபராதம் வசூலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி கடந்த 9 ம் தேதி முதல் இதுநாள்வரை அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றாத நபர்களிடமிருந்து ரூ.1,34,46,390 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  இதில் மண்டல ஊரடங்கு அமலாக்க குழுவின் மூலம் மட்டும் கடந்த 6ம் தேதி முதல் இதுநாள் வரை ரூ.21,21,800 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிப்பது அரசின் நோக்கமல்ல.  அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்த மக்கள் அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எனவே, மண்டலத்திற்கு ஒரு ஊரடங்கு அமலாக்க குழு என 15   மண்டலங்களுக்கு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது கட்டுப்பாடுகளை மீறும் நபர்களை மேலும் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க கூடுதலாக மண்டலத்திற்கு ஒரு குழு என மேலும் 15 ஊரடங்கு (மொத்தம் 30) அமலாக்கக் குழுக்கள் இன்று முதல் செயல்படுத்தப்படவுள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: