பற்றாக்குறை நிலவும் நிலையில் வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் 18 கோடி தடுப்பூசி: உற்பத்தி நிறுவனங்கள் அறிவிப்பு

புதுடெல்லி: பற்றாக்குறை நிலவும் நிலையில் வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தி 10 கோடி டோஸ்களாகவும், கோவாக்சின் உற்பத்தி 8 கோடி டோஸ்களாகவும் அதிகரிக்கும் என்று உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மோசமாக பாதித்து வரும்நிலையில், பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. குறிப்பாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டும், தடுப்பூசி இருப்பு போதுமான அளவுக்கு இல்லை என்பதால் பல மாநிலங்களில் இத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி தட்டுப்பாட்டைப் போக்கும் விதத்தில் உற்பத்தியைப் பெருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்கும் புனேவில் உள்ள சீரம் நிறுவனத்திடமும், கோவாக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்யும் ஐதராபாத் பாரத் படோடெக் நிறுவனத்திடமும், வரும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களுக்கான தடுப்பூசி உற்பத்தி திட்டம் பற்றி மத்திய சுகாதார அமைச்சகமும், இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகமும் ஆலோசனைகள் நடத்தின. அதன் தொடர்ச்சியாக வரும் மாதங்களில் எவ்வளவு தடுப்பூசி உற்பத்தி செய்யப்படும் என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டது.

இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் வி.கிருஷ்ண மோகன் கூறுகையில், ‘தடுப்பூசி உற்பத்தி ஜூலையில் 3.32 கோடியாகவும், ஆகஸ்டில் 7.82 கோடியாகவும், செப்டம்பரில் 7.82 கோடியாகவும் இருக்கும்’ என்றார். இதேபோல் சீரம் நிறுவனத்தின் ஒழுங்குமுறை விவகாரங்களின் இயக்குனர் பிரகாஷ் குமார் சிங் கூறுகையில், ‘ஆகஸ்டில் கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தி 10 கோடியாக உற்பத்தி செய்யப்படும். இதுவே செப்டம்பர் மாதமும் தொடரும்’ என்றார்.

Related Stories: