கொரோனா மரணம் குறித்து சர்வதேச ஊடகங்கள் விளாசல்; பிரசாரத்தில் டிரம்பை போல் செயல்பட்ட மோடி: பாஜக அமைச்சர்கள், தலைவர்களை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

புதுடெல்லி: 5 மாநில பேரவை தேர்தலில் டிரம்பை போலவே மோடி செயல்பட்டார் என்று சர்வதேச ஊடகங்கள் கடுமையாக விமர்சித்த நிலையில், மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்களை நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர். கொரோனாவால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள கட்டுப்பாடற்ற பாதிப்பு மற்றும் இறப்புகள் குறித்து உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. பல நாடுகள் உதவிகளை செய்தாலும் கூட, சர்வதேச ஊடகங்கள் ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளன. அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையானது, டெல்லியில் உள்ள ஒரு சுடுகாட்டில் தகனங்கள் எரிக்கப்படும் புகைப் படத்தை வெளியிட்டு, இந்தியாவில் கொரோனா தொற்று பெரிய அழிவை ஏற்படுத்தி வரும்நிலையில், இறப்பு எண்ணிக்கை குறித்து விபரங்கள் உண்மையானதாக இல்லை என்று தெரிவித்துள்ளது.

பிரிட்டிஷில் இருந்து வெளியாகும் ‘தி கார்டியன்’ பத்திரிகையானது, தனது தலையங்கம் பக்கத்தில் பிரதமர் மோடியை நேரடியாக தாக்கி எழுதியுள்ளது. அதில், ‘அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பைப் போலவே, இந்திய பிரதமர் மோடியும் தொற்றுநோய் வேகமாக பரவிவரும் காலகட்டத்தில் தன்னுடைய தேர்தல் பேரணிகளில் கலந்து கொள்வதை நிறுத்தவில்லை. குறிப்பாக இந்தியாவில் ஐந்து மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெற்றன. அந்த தேர்தல்களில் பிரசாரம் மேற்கொண்ட மோடி, முகக் கவசம் அணியாமல் தொடர்ந்து பேரணிகளை நடத்தினார்’ என்று தெரிவித்துள்ளது. அதேபோல், ஆஸ்திரேலிய பத்திரிகையான ‘தி ஆஸ்திரேலியன்’ இதழில், ‘மோடி அரசாங்கத்தால் இந்தியா அழிவு நிலையை எட்டியுள்ளது’ என்று எழுதியது.

அதேபோல் இந்தியாவில் உள்ள கொரோனா மரணங்கள் குறித்து ‘கல்ப் நியூஸ்’, ‘டைம் மேகசைன்’, ‘வாஷிங்டன் போஸ்ட்’ போன்றவையும் மத்திய அரசை கண்டித்து எழுதின. சர்வதேச ஊடகங்களில் தொடர்ந்து வெளியான இந்த செய்திகள், இந்திய ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டன. ஒரு தரப்பினர் மோடி அரசுக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் கண்டனங்களையும் தெரிவித்து கருத்துகளை தெரிவித்தனர். குறிப்பாக சமூக ஊடகங்களில் சர்வதேச ஊடக செய்திகள் குறித்து பெரும் விவாதமே நடந்தது. இதற்கிடையில், மே 11ம் தேதியன்று டெல்லியில் இருந்து செயல்படும் ‘தி டெய்லி கார்டியன்’ என்ற வலைபக்கத்தில் வெளியான கட்டுரை டுவிட்டரில் பகிரப்பட்டது.

இந்த கட்டுரையில் மோடி அரசை விமர்சிக்காமல், அவர் மிகவும் கடினமாக உழைக்கிறார் என்று பாராட்டி எழுதப்பட்டிருந்தது. மேலும், நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறை, மருந்துகள் பற்றாக்குறை போன்ற பிரச்னைகள் அவரது (மோடி) தலையில் வைக்கப்பட்டுள்ளது என்று எழுதியிருந்தது. இந்த கட்டுரையின் பக்கத்தை மேற்கோளிட்டு, ஆளும் பாஜக தலைவர்கள், அமைச்சர்கள் என, 9 பேர் தங்களது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து பாராட்டி உள்ளனர். இந்த கட்டுரையை பகிர்ந்தவர்கள் பட்டியலில் மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், கிரண் ரிஜிஜு, டாக்டர் ஜிதேந்திர சிங், பிரல்ஹாத் ஜோஷி, ரகுபர் தாஸ், பாஜக ஐடி செல் தலைவர் அமித் மால்வியா உள்ளிட்டோர் அடங்குவர்.

அமித் மாலவியா வெளியிட்ட பதிவில், ‘மரணங்கள் பெரிய செய்தியாகின்றன; ஆனால் மீட்கப்பட்டவர்கள் குறித்து பேசப்படுவதில்லை. 85 சதவீத மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படாமல் குணப்படுத்தப்பட்டுள்ளனர்’ என்று பதிவிட்டிருந்தார். பாஜக அமைச்சர்கள், தலைவர்களின் இந்த பதிவுகளை தொடர்ந்து, சமூக ஊடகங்களில் மத்திய அரசுக்கும், பாஜக தலைவர்களுக்கும் எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

Related Stories: