இத்தாலி ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் போராடி தோல்வி

ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் 2ம் சுற்றில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், அர்ஜென்டினாவை சேர்ந்த நாடியா போடோரோஸ்காவிடம் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தோல்வியடைந்தார். இத்தாலி ஓபன் டென்னிசின் நடப்பு சாம்பியன் சிமோனா ஹாலேப், காயம் காரணமாக போட்டியின் பாதியில் இருந்து விலகிக் கொண்டுள்ளார். இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டிகள், தலைநகர் ரோமில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 2ம் சுற்றுப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்சும், அர்ஜென்டினாவை சேர்ந்த நாடியா போடோரோஸ்காவும் மோதினர்.

கடந்த பிப்ரவரியில் ஆஸி.ஓபனில் அரையிறுதியில் தோல்வியடைந்த பின்னர், 3 மாதங்களாக சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் செரீனா பங்கேற்கவில்லை.  தற்போது இத்தாலி ஓபனில் களமிறங்கிய அவர், கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனில் அரையிறுதி வரை முன்னேறி, ஆச்சரியப்படுத்திய இளம் வீராங்கனை நாடியாவின் அதிரடி சர்வீஸ்களை எதிர்கொள்ள முடியாமல் திணறினார். அவரது கேம்களை செரீனாவால் பிரேக் செய்ய முடியவில்லை. இதனால் முதல் செட் டை பிரேக்கர் வரை நீடித்தது. டை பிரேக்கரை 8-6 என வசப்படுத்திய நாடியா, அதன் மூலம் முதல் செட்டை 7-6 என கைப்பற்றினார்.

2வது செட்டை அதிரடியாக துவக்கிய நாடியா, செரீனாவை முற்றிலும் தவிக்க விட்டார். மைதானத்தின் 2 பக்கங்களிலும் பந்தை அடுத்தடுத்து திருப்பி, செரீனாவை இங்கும், அங்கும் ஓடவிட்டார். இதன் மூலம் 5-2 என்ற கணக்கில் 2ம் செட்டில் நாடியா முன்னிலை பெற்றார். ஒரு கேமை கைப்பற்றினால் வெற்றி என்ற நிலையில் நாடியா சற்று பதட்டமடைந்தார். அனுபவம் வாய்ந்த செரீனா, நாடியாவின் அந்த பதற்றத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டு, விறுவிறுவென முன்னேறினார். நிதானமான அணுகுமுறையை கைவிட்டு, அதிரடியாக ஆடிய செரீனா, அந்த செட்டை 5-5 என சமநிலைக்கு கொண்டு வந்தார்.

ஆனால் மீண்டும் எழுச்சி பெற்ற நாடியா, பிளேஸ்மென்ட்டுகளில் கவனம் செலுத்தி, அடுத்த 2 கேம்களை அதிரடியாக கைப்பற்றினார். இதன் மூலம் இரண்டரை மணி நேரம் நடந்த இப்போட்டியில் அவர் 7-6, 7-5 என நேர் செட்களில் வெற்றி பெற்று, 3ம் சுற்றுக்கு தகுதி பெற்றார். தோல்வி குறித்து செரீனா கூறுகையில், ‘‘3 மாத இடைவெளிக்கு பின்னர், கடின மைதானத்தில் ஆடுவது கஷ்டம்தான். இன்னும் கொஞ்சம் பயிற்சி தேவைப்படுகிறது. பிரெஞ்ச் ஓபனில் பார்க்கலாம்’’ என்று தெரிவித்தார். நேற்று நடந்த 2ம் சுற்று போட்டிகளில் தரவரிசையில் 2ம் இடத்தில் உள்ள ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவிடம் நேர் செட்களில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

3ம் இடத்தில் உள்ள ருமேனியாவின் சிமோனா ஹாலேப், ஜெர்மனியின் கெர்பருக்கு எதிராக 6-1 என முதல் செட்டை கைப்பற்றினார். ஆனால் 2ம் செட்டில் 3-3 என்ற புள்ளி கணக்கில் இருந்த போது, கணுக்கால் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். இதனால் கெர்பர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரர்கள் ரஃபேல் நடால், மாட்டியோ பெரட்டினி, சிட்சிபாஸ் மற்றும் ஸ்வரெவ் ஆகியோர் 2ம் சுற்றில் எளிதாக வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

Related Stories: