கல்லணை கால்வாயில் அமைக்கப்படும் கான்கிரீட் தளத்தால் நிலத்தடி நீர் மட்டம் பாதிப்பு: பணியை தடுத்த நிறுத்த முதல்வருக்கு கோரிக்கை

தஞ்சை: கல்லணை கால்வாயில் கான்கீர்ட் தளம் அமைப்பதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் உள்ளதாக கூறி, அந்த பணிகளை நிறுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு விவசாயிகள் சார்பில், மனு அனுப்பியுள்ளனர். தஞ்சாவூர் இயற்கை வழி வேளாண் உழவர் நடுவம் தலைவர் தங்கராசு உள்ளிட்டோர், கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கல்லணை கால்வாய் 148.43 கிலோ மீட்டர் பிரதான கால்வாயும், 636 கிலோ மீட்டர் கிளை கால்வாயும், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு பகுதியில் 403 ஏரிகள் மூலம், சுமார் 2.27 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

இந்நிலையில், 2,639.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கல்லணை கால்வாய் புணரமைப்பு பணி, முன்னாள் முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடியால், கடந்த பிப்.2ம் தேதி துவக்கி வைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் துவங்கும் முன், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்களின் கருத்துகளை கேட்காமல் அவசரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆண்டுக்கு 6 மாதங்களில் நீர்வரத்தை கொண்டுள்ள இக்கால்வாய் நீர்வரத்து அல்லாத மீதமுள்ள மாதங்களில், அப்பகுதியிலுள்ள கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகள் மூலம் நடக்கும் விவசாய மற்றும் குடிநீர் தேவைக்கான நிலத்திடி நீரை மீள் நிரப்பு செய்கிறது.

ஆனால் தற்போது கால்வாயில் கான்கீர்ட் தளம் அமைவதால் நிலத்தடியில் நடக்கும் மீள்நிரப்பு செயல் பாதிப்படைகிறது. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அத்துடன், சுமார் 7 சதுர கிலோ மீட்டர் நீர் பரப்பளவு கொண்ட கால்வாய் தரைதள மணல் பகுதியை சிமெண்ட் கான்கிரீட் கொண்டு மூடுவதால், அத்தளத்திலுள்ள நுண்ணுயிர்கள் அழிந்து, தண்ணீரில் ஏற்படும் ரசாயனம் மாற்றங்கள் இல்லாமல் போகி பயிர்கள் பாதிப்படையும். மேலும், இருபுறமும் கரைகளிலுள்ள மரங்கள் வெட்டப்பட்டு தனது செழுமையை இழுக்கிறது. கல்லணை கால்வாய் கட்டளை பகுதியிலுள்ள கிராமங்களில் அமைந்துள்ள ஊற்றுகள் மூலம், கிணறுகள் மற்றும் பம்புசெட்களில் நீர் முற்றிலும் வற்றி போகும்.

பட்டுக்கோட்டை, பேராவூரணி, மணல்மேல்குடி பகுதிகளில் நிலத்தடியில் கடல்நீர் உட்புகும் அபாயம் உள்ளது. குறிப்பாக தஞ்சாவூர் நகரின் நிலத்திடி நீர் ஆதாரத்தை உருவாக்குவதில் சிக்கல் ஏற்பட்டு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. கால்வாயில் கான்கீரிட் தளத்தின் அளவு உயர்த்தப்படுவதால், முழு கொள்ளவான 4,200 கன அடி குறையும் வாய்ப்பால், வெள்ள நீரை தாங்கும் திறன் இல்லாமல் உடைப்பு ஏற்படும். இந்நிலையில் கால்வாயில் கான்கீரிட் தளம் அமைத்த நிலையில், பல்வேறு பாதிப்புகளால், இலங்கையில் உடவாலவா ஆறு, ஈரானில் -சேவ் நதி, சீனா-வில் ஷியாங் நதி, ஸ்பெயினில் -எப்ரோ நதி என பல நாடுகளில், மீண்டும் கான்கீரிட் தளத்தை அகற்றி பழைய நிலைக்கு பல ஆண்டாக போராடி கொண்டு வந்துள்ளனர்.

அப்படி ஒரு நிலையை உருவாக்கி விடாமல், தற்போது 20 சதவீத பணிகள் முடிந்து விட்டதால், மீதமுள்ள பகுதிகளில், தரைதளத்தில் சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைக்காமல், கரைகளில் பக்கவாட்டிலும், பாலங்கள், படித்துறைகளில் கான்கிரீட் கட்டுமானத்தால் பலப்படுத்தில், பாசனத்திற்கு முறையாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories: