கூடலூர் அருகே வீடுகள் மீது கல் வீசும் மர்ம நபர்கள்

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட எட்டாவது மைல். இந்த பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீதும். அதனை ஒட்டியுள்ள தனியார் தேயிலை தோட்ட குடியிருப்புகள் மீதும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பகல் நேரத்தில் கற்களை வீசும் மர்ம நபர்களால் வீடுகளில் உள்ளவர்கள் அச்சமடைந்துள்ளனர். தேவர் சோலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இப்பகுதியில் பிரதான சாலை ஓரத்தில் மீனாட்சி என்பவரது வீடு உள்ளது.

இவரது வீட்டை ஒட்டிய மேல் பகுதியில் தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள 2 வீடுகளில் மனோகரன் மற்றும் லட்சுமி ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த வீடுகளின் மீது கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பகல் நேரங்களில் மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசி வருவதாக வீடுகளில் உள்ளவர்கள் புகார் தெரிவித்து உள்ளனர். மர்ம நபர்கள் வீசும் கற்களால் வீடுகளின் கூரை ஓடுகள் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகள் ஒரு சில இடங்களில் சேதம் அடைந்து உள்ளன.

கற்களை வீசும் மர்ம நபர்களை பிடிப்பதற்காக தனியார் தோட்ட நிர்வாகம் சார்பில் ஆட்களை நியமித்து அவ்வப்போது தேடினாலும் சம்பந்தப்பட்ட நபர்கள்  சிக்காமல் தேயிலை செடிகளுக்குள் மறைந்து தப்பி ஓடிவிடுகிறார்கள். ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக நடைபெறும் கல்வீச்சு சம்பவத்தால் வீட்டில் உள்ளவர்கள் வேலைகளுக்குச் செல்ல முடியாமல் அச்சத்தில் உள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தேவர்சோலை காவல் நிலைய காவல் துறையினரும் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது நேரில் வந்து பார்வையிட்டு ரகசிய விசாரணை நடத்தியும் வருகின்றனர். ஆனால் சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்கள் இதுவரை சிக்காமல் தப்பி வருகின்றனர். வீடுகளின் மீது கற்களை வீசிய மர்ம நபர்கள் இதுவரை சிக்காமல் இருப்பது இப்பகுதி மக்களிடையே  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் போலீசார் தொடர் கண்கானிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: