தர்பூசணி பழங்கள் சேலத்திற்கு விற்பனைக்கு அனுப்பி வைப்பு: விலை குறைவால் வியாபாரிகள் கவலை

சீர்காழி: சீர்காழி அருகே சூரக்காடு, தென்னலக்குடி, காரைமேடு, திருவாலி, புதுத்துறை ஆகிய பகுதிகளில் சுமார் 450 ஏக்கரில் தர்பூசணி பழங்கள் பயிரிடப்பட்டுள்ளன. கோடை காலத்தில் மட்டுமே தர்பூசணி இந்த பகுதிகளில் பயிரிடப்பட்டு வருகிறது. தர்பூசணி பயிரிடப்பட்டு 90 நாட்களில் அறுவடைக்கு தயாராகி வருகிறது. ஒரு ஏக்கரில் பயிரிட்டால் சுமார் 15 ஆயிரம் டன் தர்பூசணி கிடைக்கும். ஒரு ஏக்கர் தர்ப்பூசணி பயிரிட ரூ.90 முதல் ஒரு லட்சம் வரை செலவாகும். தற்போது இந்த பகுதியில் பயிரிடப்பட்ட தர்பூசணிகள் அறுவடை செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தர்பூசணி விவசாயி முல்லை நாதன் கூறுகையில், தற்போது இந்தப் பகுதிகளில் தர்பூசணி அறுவடை பணி நடந்து வருகிறது. கொரோனா தொற்று பரவி வருவதால் வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் வந்து தர்பூசணி பழங்களை வாங்க முன்வருவதில்லை. ஒரு சில வியாபாரிகள் மட்டும் வந்து தர்பூசணி பழங்களை வாங்கி செல்கின்றனர். கடந்த காலங்களில் ஒரு கிலோ தர்பூசணி ரூ.12 வரை விலை போனது. ஆனால் தற்போது கொரோனா தொற்று காரணமாக ஒரு கிலோ ரூ.6 க்கு மட்டும் விலை போகிறது.

ஒரு ஏக்கரில் தர்பூசணி பயிரிட்டு நல்ல விலை போனால் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை கிடைக்கும். ஆனால் தற்போது போதிய வியாபாரிகள் வராததால் ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை கிடைக்கிறது இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் கொரோனா தொற்று விலகி வியாபாரிகள் அதிகளவில் வந்து தர்பூசணி பழங்களை வாங்கி சென்றால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்றார்.

Related Stories: