அமெரிக்க தொற்றுநோய் நிபுணர் ஆதங்கம் இந்தியா அவசரப்பட்டு விட்டது: அரசு சரியாக கணிக்கவில்லை

வாஷிங்டன்: ‘கொரோனாவின் இரண்டாம் அலையை கணிக்க இந்தியா தவறிவிட்டது’ என்று அமெரிக்க தொற்று நோய் நிபுணரும், அதிபர் பைடனின் மருத்துவ ஆலோசகருமான அந்தோணி பவுசி கூறியுள்ளார். கொரோனாவின் முதல் அலையில் பல்வேறு நாடுகள் தவித்தபோதும் அதிர்ஷ்டவசமாக இந்தியா தப்பியிருந்தது. இதனால் உலக நாடுகளுக்கு உதவி செய்யுமளவு இந்தியா பாதுகாப்பாக இருந்தது. தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு மருந்துப்பொருட்களையும் நன்கொடையாக வழங்கியது. ஆனால், 2ம் அலையால் இந்த நிலைமை தலைகீழாகியுள்ளது. இரண்டாம் அலையின் தாக்கத்தில் பெரும்பாலான நாடுகள் தப்பித்திருக்கும் சூழலில், இந்தியா பரிதாபகரமாக மாட்டிக் கொண்டுள்ளது. இந்த நிலைக்கு ‘கொரோனா குறித்து சரியாக கணிக்காததே காரணம்’ என்று அமெரிக்காவின் பிரபல தொற்றுநோய் நிபுணரான அந்தோணி பவுசி கூறியுள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க செனட்டில் அவர் கூறியதாவது, ‘இந்தியாவின் தற்போதைய நிலைமை சில பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது. கொரோனாவின் இரண்டாம் அலை குறித்து இந்தியா சரியாக கணிக்கவில்லை அல்லது கணிப்புகள் தவறாகியுள்ளன. கொரோனா முடியும் முன்னரே வெற்றி கொண்டுவிட்டதாக இந்தியா முடிவு செய்தது. தளர்வு நடவடிக்கைகளை அறிவிப்பதிலும் அவசரப்பட்டுள்ளது. இது உலகநாடுகளுக்கு ஒரு பாடம். எனவே, கொரோனா தொற்று முடிந்துவிட்டதாக குறைத்து மதிப்பிடாதீர்கள்.

இதேபோல் பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கான தயார்நிலையிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும் என இந்தியாவின் நிலைமை கற்றுக் கொடுத்துள்ளது. எதிர்கால தொற்று பரவலை சமாளிக்க உள்ளூர் அளவிலான சுகாதார கட்டமைப்புகளை நாம் வலுப்படுத்த வேண்டும். உலகளவிலான ஒரு பெருந்தொற்றில், நமக்கு உலகளாவிலான பொறுப்பும் உள்ளது. எனவே, நமது நாட்டை பாதுகாக்கும் அதேவேளையில் உலக நாடுகளுக்கு நாம் உதவி செய்ய வேண்டியதும் கட்டாயம். குறிப்பாக தடுப்பூசிகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது’ இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: