சுயேச்சைகளிடம் ஆதரவு திரட்டும் பாஜக துணை முதல்வர் பதவி கொடுக்க முடியாது: ரங்கசாமியின் முடிவால் அதிர்ச்சி

புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில், தே.ஜ.கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் 10, பா.ஜனதா-6 இடங்களை வென்றன. ஐ.மு. கூட்டணியில் தி.மு.க.- 6, காங்கிரஸ்- 2 இடங்களில் வெற்றி பெற்றன. இதுதவிர, சுயேட்சைகள் 5 இடங்களில் வெற்றிப்பெற்றனர். பெரும்பான்மைக்கு 16 பேர் போதும் என்பதால், ரங்கசாமி முதல்வராகவும், அமைச்சரவையில் பா.ஜனதாவினருக்கும் இடம் அளிக்கவும் டெல்லியில் இருந்து பேசப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில், என்.ஆர். காங்கிரசுக்கு 3 அமைச்சர்கள், பா.ஜனதாவுக்கு 3 அமைச்சர்கள் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், துணை முதவர் பதவியையும் பா.ஜனதா கேட்டது. இதற்கு ரங்கசாமி சம்மதித்தார்.. இதன்பின், துணை முதல்வர் பதவியை உருவாக்கும் பரிந்துரைகளை ரங்கசாமியிடம் அனுப்பி வைக்குமாறு தொடர்ந்து கேட்டு வந்தது. ஆனால், ரங்கசாமி திடீரென கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் பா.ஜனதாவுக்கு பதில் ஏதும் அளிக்கவில்லை. இதனால், பா.ஜனதா கோபம் கொண்டது. இந்தநிலையில், மத்திய பா.ஜனதா அரசு 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்தது. இது ரங்கசாமி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால், துணை முதல்வர் பதவி தரக்கூடாது என்று முடிவு எடுத்துள்ளார்.

இந்தநிலையில், 3 சுயேட்சை எம்எல்ஏக்களுடன் பேரம் பேசி பா.ஜனதா ஆதரவு பெற்றுள்ளது. இதனால், பா.ஜனதாவின் பலம் 12 ஆக பெருக்கி கொண்டுள்ளது. இந்த விவகாரத்தால், கூட்டணி கட்சிகளிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. பா.ஜனதாவின் இந்த செயலுக்கு தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தது. திரைமறைவில் பா.ஜனதா ஆட்சியை கொண்டுவர சதி நடப்பதாகவும், இதற்காகவே 3 நியமன எம்எல்ஏக்களை புதிதாக நியமிப்பதாகவும் என்.ஆர்.காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதனால், பா.ஜனதாவை கழற்றிவிட்டு, தி.மு.க., காங்கிரஸ், சுயேட்சைகள் ஆதரவுடன் புதிய அரசை அமைக்க வேண்டுமென சமூக வலைதளங்களில் என்.ஆர். காங்கிரசார் பகிரங்கமாக தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் ரங்கசாமியிடமிருந்து கூட்டணி மாற்றம் குறித்து எந்த தகவலும் வரவில்லை.

Related Stories: