ஒலிம்பிக்கில் பங்கேற்கும் துப்பாக்கி சுடும் அணி குரோஷியா பயணம்

அகமதாபாத்: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள், வீராங்கனைகளை கொண்ட அணி நேற்று குரோஷியா புறப்பட்டுச் சென்றது. டோக்கியோவில் ஜூலை மாதம் தொடங்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இளவேனில் வாலறிவன் உட்பட  15 பேர் கொண்ட இந்திய துப்பாக்கி சுடும்  வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்திய துப்பாக்கி சுடும் அணி நேற்று குரோஷியா புறப்பட்டுச்  சென்றது. அங்கு 7 நாட்கள் குவாரன்டைனில் இருப்பார்கள். பின்னர் ஒசிஜெக் நகரில் நடக்கும்  ஐரோப்பிய சாம்பியன்ஷிப்  போட்டியில் பங்கேற்பார்கள். தொடர்ந்து அதே நகரில் ஜூன் 22ம் தேதி தொடங்கும் ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கி சுடும் தொடரில் கலந்துக் கொள்கின்றனர்.  கூடவே சிறப்பு பயிற்சி முகாமிலும் அவர்கள் பங்கேற்பர். பின்னர் குரோஷியாவில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ஜப்பான் செல்வார்கள். ஒலிம்பிக் முடியும் வரை மொத்தம் 80 நாட்கள் குரோஷியா, ஜப்பானில் இந்திய அணி தங்கியிருக்கும். இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ‘இந்திய அணி வெளிநாட்டில் தங்கியிருப்பது பாதுகாப்பானதாக இருக்கும் என்பதால் இந்த பயணம்’  என்று கூறப்படுகிறது.

Related Stories: