உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு: இந்திய வகை கொரோனா மிகுந்த கவலை அளிக்கிறது

ஜெனீவா: இந்திய வகை உருமாற்ற கொரோனா வைரஸ் தான் இருப்பதிலேயே மிகுந்த கவலை தரக்கூடிய வகை என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா முதல் அலையை விட 2வது அலையில் பல்வேறு உருமாற்ற வகை வைரஸ்கள் உருவாகின. இங்கிலாந்து, பிரேசில் வகை உருமாற்ற வைரஸ்கள் மிகத் தீவிரமானவை என ஆரம்பத்தில் கூறப்பட்டன. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இரட்டை உருமாற்ற வகை கொரோனா வைரஸ் சமீபத்தில் கண்டறியப்பட்டது. இது மிக வேகமாக பரவக்கூடிய வீரியமிக்க வைரஸ் என நிபுணர்கள் எச்சரித்தனர். இந்தியாவில் 2வது அலை மிக மோசமானதற்கு இந்திய வகை வைரஸ் என கூறப்பட்டாலும், அதை உறுதிப்படுத்த வலுவான ஆதாரங்கள் இல்லை. இந்நிலையில், உலகிலேயே இந்திய வகை உருமாற்ற வைரஸ்தான் மிகுந்த கவலை தரக்கூடியது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய வகை உருமாற்ற வைரசுக்கு பி1.617 வகை என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வகை வைரஸ்கள் மிகத் தீவிரமாக பரவக்கூடியது என கூறியுள்ள உலக சுகாதார நிறுவனம், தடுப்பூசி மூலம் பெற்ற நோய் எதிர்ப்பு சக்தியையும் மீறி தாக்கக் கூடியது என உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்கள் இல்லை என கூறி உள்ளது. தற்போதுள்ள தடுப்பூசிகள் அனைத்து வகை கொரோனா வைரஸ்களையும் தடுக்கும் வல்லமை கொண்டிருப்பதாக அது கூறி உள்ளது.

Related Stories: