மக்கள்தொகை வளர்ச்சி சரிவு: முதியவர்கள் நாடாகிறது சீனா: 141 கோடி பேர் வசிப்பதாக கணக்கெடுப்பு

பீஜிங்: சீனாவில் மக்கள்தொகை வளர்ச்சி தொடர்ந்து சரிந்த வண்ணம் உள்ளது. இதனால் முதியவர்கள் மிகுந்த நாடாக சீனா மாறி வருகிறது. சீனாவில் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த கணக்கெடுப்பை வைத்தே அரசின் கொள்கைகள் தீர்மானிக்கப்படுகின்றன. இதனால் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு, 70 லட்சம் தன்னார்வலர்களை கொண்டு வீடுவீடாக சென்று கடந்த ஆண்டு டிசம்பரில் நடத்தி முடிக்கப்பட்டது.இதன் முடிவுகளை தேசிய புள்ளிவிவர ஆணையம் நேற்று வெளியிட்டது. அதில், கடந்த பத்தாண்டுகளில் மக்கள் தொகை 5.4 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்து 141 கோடியாக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இளைஞர்கள் எண்ணிக்கை சரிந்து முதியவர்கள் எண்ணிக்கை அதிரித்து வருவது குறித்து சீனா கவலை கொண்டிருக்கிறது.

இதற்காக கடந்த 2016ல் சீனாவில் கடைபிடிக்கப்பட்டு வந்த ‘குடும்பத்திற்கு ஒரு குழந்தை’ என்ற விதிமுறை கூட தளர்த்தப்பட்டது. சம்பளங்களும் உயர்த்தப்பட்டன. ஆனாலும், 2017ம் ஆண்டு முதல் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்தவண்ணமே உள்ளது. 2020ல் மக்கள் தொகை 142 கோடியாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், அதுகூட எட்டப்படவில்லை. கடந்த 10 ஆண்டில் சராசரி ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி 0.53 சதவீதம் மட்டுமே. இது கடந்த 68 ஆண்டில் பதிவான மிகக்குறைந்த வளர்ச்சி விகிதமாகும்.

* 15 முதல் 59 வயதுக்கு உட்பட்ட பணிபுரியும் நபர்களின் எண்ணிக்கை 2020ல் 63.4 சதவீதமாக சரிந்துள்ளது. இது பத்தாண்டுக்கு முன் 70 சதவீதமாக இருந்தது.

* 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எண்ணிக்கை 2020 கணக்கெடுப்பில் 18.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது 2010ல் 13.3 சதவீதமாக இருந்தது.

*  நகரமயமாக்கல் தொடர்ந்து அதிகரிக்கிறது. நகரங்களில் வசிப்போர் விகிதம் 2010ல் 49.7 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 63.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Related Stories: