பாட்டு ஒன்று பாடட்டுமா?

நன்றி குங்குமம் தோழி

மராத்தி கஜல் பாடல்களை இசைக்கு ஏற்ப பாடியபடி ஒரு குழு மும்பை புறநகர் ரயிலில் பயணம் செய்கிறது. கையில் பிச்சை பாத்திரம் ஏந்தி இவர்கள் ரயிலில் பாட்டு பாடி வருகின்றனர். எவ்வளவு அழகான குரல்வளம் கொண்ட பார்வையற்ற இந்த குழுவினர் ரயில் பயணிகள் போடும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் காசுக்காக தங்களது திறமையை வெளிப்படுத்தியபடி செல்கின்றனர்.

அதை அந்த ரயில் பெட்டியில் பயணம் செய்து வந்த இரு கண்கள் கவனித்து வந்துள்ளது. அவர் ஹேமலதா திவாரி. மும்பையை சேர்ந்த இவருக்கு ரயில் பாடகர்களை மேடையேற்றி பாட வைத்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. ரயிலில் இது போல் பல பார்வையற்ற குழுக்கள் பாட்டு பாடி வருவது இயல்பு. அவர்கள் அனைவரையும் இவர் தொடர்ந்து சந்தித்து வந்தார்.

தினமும் அவர்கள் தொண்டை வலிக்க பாடினாலும், அவர்களின் ஒரு நாளைய சம்பாத்தியம் 100 ரூபாய் மட்டுமே. இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து மேடைப்பாடகர்களாக மாற்ற ‘ஸ்வாரதார்’ என்ற அமைப்பை துவங்கினார் ஹேமலதா. தெருக்களில், ரயில்களில். கடற்கரைகளில் பாடியபடி பிச்சை எடுத்த கண் பார்வையற்றவர்கள் அனைவரையும் அமைப்பில் இணைத்தார்.

ஆரம்பத்தில் அதில் சேர யாரும் முன்வரவில்லை. நமக்கு கிடைக்கும் வருமானத்தை கெடுக்க பார்க்கிறார் என ஹேமலதா மீது குற்றம்சாட்டினார்கள். எப்படியோ தெருப்பாடகர்கள் இருவரை பிடித்து அவர்களுக்கு என இசைக்கருவிகள் மற்றும் பாலிவுட் சினிமா மற்றும் மதம் சார்ந்த பாடல்களை பாட பயிற்சி அளித்தார். இப்போது திரும்பும் மேடைகளில் எல்லாம் இவர்களின் குரல் ஒலிக்கிறது. 100 ரூபாய் தின வருமானம் இப்போது மாத வருமானம் 35 ஆயிரம் ரூபாயாக மாறியது.

 

ஹேமலதா இசை பிரியை. அவர் இசை பயிற்சி பெறுவதற்காக ரயிலில் செல்லும் போது தான் பார்வையற்ற பாடகர்களை சந்தித்தார். அவர்களின் திறமையை வெளிக்கொணர பயிற்சி மையம் அமைத்தார். இப்போது இந்த இசைக்குழுவில் 500 பேர் உள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழா முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி அனைத்திலும் இவர்கள் பாட ஆரம்பித்துள்ளார்கள்.

பிச்சைக்காரர்களாக இருந்த இந்த தெருப்பாடகர்கள் இப்போது மேடைபாடகர்களாக திருமணம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் மூலம் கைநிறைய சம்பாதிக்கிறார்கள். இந்த அமைப்பை தொடங்கிய ஹேமலதா தில்லிக்கு இடம்பெயர்ந்து விட்டார். ஆனால் அவரது தொண்டு இன்று தெருப்பாடகர்களை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.    

தொகுப்பு: கோமதி பாஸ்கரன்

Related Stories: