புழல் அருகே துணிகரம்; சவாரி செல்வதுபோல் ஆட்டோ கடத்தல்: 3 வாலிபர் அதிரடி கைது

புழல்: சென்னை கெல்லீஸ் பகுதியை சேர்ந்தவர் வினோத் (30). சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். கடந்த ஜனவரி 7ம் தேதி அதிகாலையில் சென்னை மூலக்கடையில் இருந்தபோது 2 நபர்கள் தாம்பரம் செல்ல வேண்டும் எனக் கேட்டு ஆட்டோவில் பயணம் செய்தனர். புழல் சைக்கிள் ஷாப் மேம்பாலம் அருகே சென்றபோது ஆட்டோவில் வந்த 2 மர்ம ஆசாமிகளும் சிறுநீர் கழிக்க வேண்டும் என கூறி ஆட்டோவை நிறுத்தச் சொல்லி, கத்தியை காட்டி மிரட்டி ஆட்டோ டிரைவர் வினோத் வைத்திருந்த செல்போன், ரூ. 5000 ரொக்கப்பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தாக்கிபின்னர், ஆட்டோவை எடுத்து கொண்டு தப்பி னர். இதுகுறித்து புழல் காவல் நிலையத்தில் வினோத் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை செய்ததில், கடத்தப்பட்ட ஆட்டோ சென்னை பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த ராம்குமார் (28) என்பவரிடம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து  புழல் காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை செய்ததில், சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த ஜாபர் (30), பரங்கிமலையைச் சேர்ந்த டேவிட் ராஜ்(28) ஆகியோர்தான் ஆட்டோ, செல்போன் மற்றும் ரூ.5000 ஆகியவற்றை  பறிமுதல் செய்தவர்கள் என தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மூவரையும் போலீசார், மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

Related Stories: