போருக்கு தயாராகிட்டேன்!

நன்றி குங்குமம் தோழி

மேற்குவங்க மாநிலம் கலைக்குந்தா விமானப்படை பயிற்சி மையத்தில் இருந்து ஒரு போர் விமானம் புறப்பட்டு செல்கிறது. குறிப்பிட்ட பகுதிக்கு சென்றதும் அந்த விமானத்தில் இருக்கும் விமானி குண்டுகளை அள்ளி வீசுகிறார். புழுதியை கிளப்பி கொண்டு சென்ற அந்த குண்டுகள் எல்லாம் பெரிய சத்தத்துடன் வெடித்து சிதறுகிறது.

ஒரு பக்கம் குண்டுகள் முழங்கிக் கொண்டு இருக்க, அவர் பயணிக்கும் விமானத்தின் முன் ராக்கெட் ஒன்று சீறி பாய்கிறது. அதை விமானத்தில் இருந்தபடியே அசால்ட்டாக குறிவைத்து குண்டுகளால் தாக்குகிறார் அந்த விமானி. நெருப்பை கக்கிக் கொண்டு சீறிப் பாய்ந்த அந்த ராக்கெட் குண்டு ஒன்றுக்கு இரையாகி சற்று நேரத்திலேயே அதன் ஆயுள் முடிவுக்கு வருகிறது.

இதேபோல் சக்தி வாய்ந்த குண்டுகளையும் விமானத்தில் இருந்தபடியே தாக்குதல் நடத்துகிறார், அந்த விமானி. விமானி என்றதும் நம்முடைய சிந்தனையில் ஒரு ஆண் உருவம் தான் வரும்.

ஆனால் இந்த சாதனை நிகழ்த்தியவர் ஒரு பெண் விமானி. மோகனா சிங்கின் சொந்த மாநிலம் ராஜஸ்தான். ஜுன் ஜுன் மாவட்டத்தை சேர்ந்த அந்த இளம் மங்கையின் வயது 24. மோகனா சிங் விமானி என்பதை விட இந்தியாவில் போர் விமானத்தை இயக்கிய முதல் பெண் விமானி என்ற பெயரையும் தட்டிச் சென்றுள்ளார்.

மோகனாவின் பள்ளிக் கல்வி தில்லியில் உள்ள விமானப்படை பள்ளியில் துவங்கியது. பள்ளிப்படிப்பை முடித்தவர் பஞ்சாப்பின் அமிர்தசரசில் உள்ள கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொடர்பியல் துறையில் பிடெக் பயின்றார். விமானம் மேல் அதீத காதல் கொண்டவர் மோகனா.

அதன் தாக்கம் தான் அவரை போர் விமானியாக வேண்டும் என்ற உந்துதலுக்கு அழைத்து சென்றது. அந்த சமயத்தில் விமானப்படையில் பெண்களை விமானியாக சேர்க்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு எடுத்தது. இதையடுத்து கடந்த 2016ம் ஆண்டு  மோகனா சிங்குடன் இணைந்து அவனி சதுர்வேதி, பாவனா காந்த் ஆகிய 3 பேரும் விமானப்படையில் பணியில் சேர்க்கப்பட்டனர்.

500 மணிநேரம் விமானத்தை இயக்கி சாதனை படைத்திருந்த மோகனா சிங் அதி நவீன போர் விமானத்தை தனியே இயக்கியும் சாதனை படைத்துள்ளார். இதனால் மோகனா சிங்கை இந்தியாவின் முதல் பெண் போர் விமானியாக பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்தில் அறிவித்துள்ளது. இனி போர் முனையில் மோகனா சிங்கின் ஆற்றலையும் எதிரிகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

பா.கோமதி

Related Stories: