வன்புணர்ச்சியால் கர்ப்பமானாலும் ‘நோ’ கருக்கலைப்பு!

நன்றி குங்குமம் தோழி

அமெரிக்கா, அலபாமா மாகாணத்தில் கடந்த மே மாதம் கருக்கலைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கருக்கலைப்பை சட்டவிரோதமாக்கி, குற்றச்செயலாகவும் அறிவித்துள்ளது.

கருத்தரித்திருக்கும் தாய் அல்லது சேய் உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் மட்டுமே கருக்கலைப்பு செய்ய அனுமதியுள்ளதாகவும், வேறு எந்த நிலையிலும் கருக்கலைப்பு செய்ய கூடாது என்றும் இந்த சட்டம் கூறுகிறது. இந்த தடையை மீறி கருக்கலைப்பு செய்ய முயலும் மருத்துவர்களுக்கு 10 ஆண்டுகளும், அதனை செய்த மருத்துவர்களுக்கு 99 வருடங்கள் வரை  சிறை தண்டனை வழங்கப்படும் எனஅலபாமாவில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் எதிரொலியால், பாலியல் துன்புறுத்தலால் கர்ப்பமடையும் பெண்கள், தகாத உறவுகளால் உருவாகும் கருவினை கலைக்க முடியாமல், தாய், குழந்தை இருவரின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகும் நிலைக்கு அலபாமா பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த சட்டத்தின்படி, அங்கு 11 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் காரணமாக கர்ப்பம் தரித்தால், ஏற்கனவே உடலாலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டிருக்கும் அந்த சிறுமி, இப்போது பிரசவ வலியையும் தாங்கிக்கொள்ள வேண்டும். பள்ளிக்கு செல்ல வேண்டிய வயதில் குழந்தைக்கு தாயாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பெண் விடுதலை, பெண் உரிமை, பெண் சுகாதாரம் என அவர்களின் அடிப்படை தேவைகளுக்கு எதிராகத்தான் இந்த சட்டம் உள்ளது.

அதே அமெரிக்காவில் மற்றொரு பகுதியான அர்ஜெண்டினாவில் கருக்கலைப்புக்கு எதிராக கடுமையான சட்டம் ஆறு மாதத்திற்கு முன் அமலுக்கு வந்தது. அங்கு 11 வயது சிறுமி, 65 வயதான ஒருவனால், பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கர்ப்பம் தரித்தாள். 19 வாரத்தில் அந்த சிறுமி கருக்கலைப்பு செய்ய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தாள். அரசாங்கமோ முடிவைத் தெரிவிக்காமல் மேலும் 5 வாரங்கள் காலம் தாழ்த்தியது.

23வது வாரம் கருக்கலைப்பு செய்தால், சிறுமியின் உயிருக்கு ஆபத்தாகலாம் என அரசாங்கம் மறுத்துவிட்டது. எவ்வளவு போராடியும், கருக்கலைப்பு செய்யக் கூடாது என அரசாங்கம் பகிரங்கமாக மறுத்துவிட்டது. மேலும், கருக்கலைப்பு செய்யாமல் இருக்க, சிறுமியை தொடர் கண்காணிப்பிலும் வைத்தது. சிறுமியோ மன அழுத்தம் காரணமாக இரண்டு முறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டாள்.

24வது வாரத்தில், அறுவை சிகிச்சை மூலம் சிறுமிக்கு குழந்தை பிறந்தது. தேர்தல் நேரத்தில் அரசியல் காரணங்களுக்காக நிகழ்ந்துள்ளதாக மக்கள் அரசாங்கத்தை குறை கூறினர். சிறுமிக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமையைவிட, அரசாங்கத்தின் வற்புறுத்தல் தான் கொடுமையானது என பலர் சாடியுள்ளனர். இதே சித்திரவதையை, அலபாமா சிறுமிகள் மற்றும் பெண்கள்  அனுபவிக்க வேண்டுமா என மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

பாலியல் கொடுமையில் பாதிக்கப்படும் பெண்கள், எந்த குற்றமும் செய்யாதவர்கள். அவர்களை, ‘‘உன்னை பாலியல் கொடுமை செய்தவனோடு குழந்தை பெற்றுக்கொள்” என கூறுவது, இந்த சமூகம் அந்த பெண்ணின் மீது திணிக்கும் வன்முறையே ஆகும். அனாதை இல்லங்களில் இருக்கும் லட்சக்கணக்கான குழந்தைகளில் ஒன்றாக இந்த குழந்தைகளும் இணையும் அபாயத்தைத்தான் இந்த சட்டம் உருவாக்கியுள்ளது.

அலபாமாவின் சட்டத்தில், வன்கொடுமை செய்த குற்றவாளியுடன் சேர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் அந்த குழந்தையை வளர்க்கும் நிலைமைக்கு தள்ளப்படுவார். வன்கொடுமை செய்தவனுக்கு, குழந்தை வளர்ப்பில் பங்கு இல்லை என அலபாமாவில் எந்த சட்டமும் கூறவில்லை. இதனால் குழந்தைக்கான முக்கிய முடிவுகளை, தந்தை என்ற முறையில், அந்த குற்றவாளிக்கு, முடிவெடுக்கும் உரிமை அளிக்கப்படும். இது பெண் உரிமைகளை முழுமையாக தாக்கி, அவர்களை அடிமைகளாக்கும் சட்டமாகத்தான் அமையும்.

இந்த புதிய கருக்கலைப்பு தடை சட்டத்தில், மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் தண்டனை காலம், பாலியல் வன்கொடுமை செய்தவனுக்கு கொடுக்கப்படும் தண்டனையைவிட அதிகம் என்பது, மக்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசாங்கம் கருக்கலைப்பை தடை செய்தால், மக்கள் சட்டவிரோதமான தீர்வை நோக்கி நகரும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். பணம் இருப்பவர்கள், வேறு நாட்டுக்குச் சென்று கருக்கலைப்பு செய்து கொள்வர், முடியாதவர்கள் சட்ட விரோதமாக.

முறையான மருத்துவ வசதிகள் இல்லாமல், ஆபத்தான சூழ்நிலைகளில் செய்து கொள்வார்கள் என கூறுகின்றனர்.கருக்கலைப்பு ஆண், பெண் இருவருக்குமான உரிமை என்றாலும், குழந்தையை பெற்றெடுக்கப்போகும் அந்த பெண் உடலாலும் மனதாலும் பாதிக்கப்படுவது உறுதி. ஆனால், இந்த சட்டத்தை ஆதரித்தவர்கள் அனைவரும் ஆண்களே. ஒரு பெண் கூட இதனை ஆதரித்து கையெழுத்திடவில்லை.

புதிய சட்டத்தில், பாலியல் வன்முறையால் கருவுறும் பெண்களுக்கும், முறையற்ற உறவில் உருவாகும் கருவும் கலைக்க, இந்த தடைச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்குமாறு கேட்டுக்கொண்டதை இந்த உறுப்பினர்கள் நிராகரித்துள்ளனர்.

25 ஆண் உறுப்பினர்கள் பெண்கள் உடல் மீது எப்படி முடிவெடுக்க முடியும் என சட்டசபை மீது பலத்த கேள்விகள் எழுந்துள்ளது. மேலும், அலபாமா அமைச்சரவையில் பெண் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால்தான் இந்த ஆணாதிக்க சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன எனவும் குற்றம் எழுந்துள்ளது.

பெண் உடல் மீது தொடர்ந்து நடத்தப்படும் சமூக வன்முறைக்கு உலகின் பல நாடுகளிலிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பிரபலங்கள் பலர், அலபாமாவில் ‘‘வேலைக்காகவோ, வேறு எந்த நிகழ்ச்சிக்காகவோ கலந்துகொள்ள போவதில்லை’’ என தங்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.

ஒரு கருவிற்கு இருக்கும் உரிமைகூட பெண்களுக்கு இல்லையே என பலர் வருந்தி, இவ்வளவு காலம் போராடி வாங்கிய பெண் விடுதலை, ஒரு சட்டத்தை அமல்படுத்தி, அதன் மூலம் பறிக்கப்படுமோ என்ற அச்சம் அலபாமா மக்கள் மனதில் உருவாகியுள்ளது.

இந்த சட்டம் நவம்பர் மாதம்தான் அமலுக்கு வரவுள்ளது. அதற்குள் மக்கள் போராட்டத்தின் விளைவாக, உச்சநீதிமன்றத்தில்  கருக்கலைப்பு  சட்டம் மாற்றி இயற்றப்படும் என அலபாமா மக்கள் நம்பிக்ைகயுடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.                    

ஸ்வேதா கண்ணன்

Related Stories: