குடும்ப வன்முறைக்கு விடுமுறை

நன்றி குங்குமம் தோழி

உலகிலேயே முதல் முறையாக குடும்ப வன்முறைக்கு 10 நாள் விடுமுறை அறிவித்து நியூசிலாந்து அரசு சட்டம் நிறைவேற்றியுள்ளது. குடும்ப வன்முறை காரணமாக குடும்பத்தை விட்டும், வீட்டை விட்டும் பிரிய நினைக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் குறைந்தது 10 நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை என்ற சட்டம், இந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் நியூசிலாந்தில் வழக்கத்தில் வந்துள்ளது.

ஏழு ஆண்டுகளாக அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் ஜான் லோகி (Jan Logie) இந்த சட்டத்தை கொண்டு வர போராடி வந்துள்ளார். இறுதியில் அவரின் குரலுக்கு 63 பேர் ஆமோதித்தும், 57 பேர் நிராகரித்தும் வாக்கு அளித்தனர். மிகச்சிறிய வித்தியாசம் என்றாலும், இந்த சட்டத்தினை நியூசிலாந்து அரசு நிறைவேற்றியுள்ளது.

இதன் மூலம் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒருவர், தன்னையும் தன் குழந்தைகளையும் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றி, தன் கடமைகளை முடித்து ஆரோக்கியமான மனநிலையுடன் வேலைக்கு திரும்புவதற்கு இந்த சட்டம் வழிவகுத்துள்ளது. பாதிக்கப்பட்டவர், தன் துணையை விட்டு பிரிவதற்கு, மன தைரியம் மட்டும் போதாது, போதிய நேரமும் பணமும் அவசியம்.

மேலும், பாதிக்கப்பட்டவர் வேலை செய்யும் நிறுவனம், அவருக்கு உறுதுணையாய் நின்று, பிரச்சனைகள் தீரும் வரை, 10 நாள் சம்பளத்துடன் விடுப்பு போக, அவர்கள் திரும்பி வந்ததும், இரண்டு மாத காலம் வரை அவர்களின் வசதிக்கு ஏற்ப வேலை நேரத்தை ஏற்படுத்தி தரவும், வீட்டிலிருந்தபடியே வேலை செய்யவும் அனுமதி வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இந்த சட்டத்தை அமலுக்கு கொண்டுவந்ததின் மூலம், உலகத்திலேயே குடும்ப வன்முறையில் பாதிக்கப்படுபவர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு தரும் முதல் நாடு என்ற அந்தஸ்தை நியூசிலாந்து  பெற்றுள்ளது. குடும்ப வன்முறை அதிகம் இருக்கும் நாடுகளில் நியூசிலாந்து முதல் இடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. நான்கு நிமிடத்திற்கு ஒரு முறை அங்கு வாழும் மக்கள், குடும்ப வன்முறை காரணமாக காவல்

துறையை அழைக்கின்றனர்.

உலக சுகாதார அமைப்பு (WHO) 2017ல் வெளியிட்ட அறிக்கையின்படி, உலகில், மூன்றில் ஒரு பெண் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுகிறாள். மேலும், உலகளவில், கொலை செய்யப்படும் பெண்களில் 38% பேர், தங்கள் கணவராலும் காதலனாலும்தான் கொல்லப்படுகின்றனர்.

2017ல் NewZealand Herald என்ற பத்திரி கையின் ஆய்வுப்படி, ஒவ்வொரு வருடமும், நியூசிலாந்தில் 5,25,000 மக்கள் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுகின்றனர். இப்படி அதிகரித்து வரும் வன்முறையை தடுக்க பல சட்டங்கள் இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க சரியான சட்டம் வழக்கத்தில் இல்லை. அதனால்தான் அரசு இந்த சட்டத்தை பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஏற்றுள்ளது.

குடும்ப வன்முறை வெறும் போலீஸால் மட்டும் தீர்க்கக்கூடிய பிரச்சனையல்ல. இதற்கு சமூகத்தில் இருக்கும் பலரின் உதவியும் தேவை. இப்படிப்பட்ட வன்முறைக்கு சமூகம் தானே முதற்கட்ட காரணம். அதனால் சமூகத்தில் வாழும் அனைவரும் இதற்கு ஆதரவாய் இருந்து, இதுபோன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க அதில் தலையிட்டு தீர்க்க வேண்டும். குடும்ப வன்முறை ஒரு குடும்பத்தின் பிரச்சனை மட்டும் அல்ல. அது ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சனையும்தான். அதனால் இதில் குற்றம் புரிந்தவரை கேள்வி கேட்கும் அதிகாரம் சமூகத்திற்கும் உள்ளது.

இந்த சட்டத்தினால், சிறு தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர் என்றும், இதனால் உண்மையில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுவோர் வேலையிலிருந்து நீங்கும் நிலைமை வரும் என்றும் எதிர் தரப்பு வாதாடினர். ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பும், வளரும் குழந்தைகளின் எதிர்காலத்திற்கும்தான் இந்த நாடு முன்னுரிமை வழங்க வேண்டும் என தீர்மானித்து அதற்கான சட்டத்தையும் இயற்றியுள்ளது.

Related Stories: