செல்லுலாய்ட் பெண்கள்

நன்றி குங்குமம் தோழி

காப்பிய நாயகி கண்ணகிக்கு உருவம் கொடுத்தவர் விஜயகுமாரி

அறிஞர் அண்ணாவின் ஆட்சியில் கடற்கரைச் சாலையோரம் நெடுக வைக்கப்பட்ட தமிழறிஞர் பெருமக்களின் சிலைகளின் வரிசையில், ஒரு காப்பியத்தின் கதாபாத்திரத்துக்கும் சிலை வைக்கப்பட்டதென்றால் அது கண்ணகி சிலைக்கு மட்டும்தான். அந்தச் சிலை உருவாக்கத்தின் பின்னணியில் அதற்கு மாடலாக விஜயகுமாரியின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டது என்பது ஒரு சிறப்பு.

அது குறித்த பெருமையும் விஜயகுமாரிக்கு உண்டு. நிச்சயம் பெருமைக்குரிய ஒன்றுதான் அது. ஆனால், அடுத்தடுத்து நிகழ்ந்த ஆட்சி மாற்றங்களின் விளைவாக பிற்பாடு அந்தச் சிலை பட்ட பாட்டை நாடே அறியும்.

விஜயகுமாரியின் ஒப்பற்ற உழைப்பின் பலன்

‘அன்னக்கிளி’ திரைப்படத்தின் உச்சக்கட்ட காட்சியில் சினிமாவுக்குள் சினிமாவாக ‘கண்ணகி’ திரைப்படத்தின் காட்சி இடம் பெறும். அதுவும் உச்சக்கட்ட காட்சிதான். அன்னக்கிளியாக சுஜாதா கையில் அரிக்கேன் விளக்குடன் டூரிங் டாக்கீஸுக்குள் கோபம் கொப்பளிக்க நுழைவார். அதேவேளை திரையில் கண்ணகியாக கண்ணாம்பா கையில் ஒற்றைச் சிலம்புடன் கண்களில் கோபம் மின்ன பாண்டியன் அரண்மனைக்குள் நுழைவார்.

அன்னக்கிளியின் கையிலிருக்கும் விளக்கு கீழே விழுந்து டூரிங் டாக்கீஸ் தீப்பற்றிக் கொள்ள, கண்ணகியின் கோபம் மற்றும் சாபத்தின் விளைவாக பாண்டியன் அரண்மனை மட்டு மல்லாமல் மதுரை மாநகரமே கொழுந்து விட்டு எரியும். இரு படங்களுக்குமான ஒப்பீடாகக் குறியீட்டு முறையில் அக்காட்சி ‘அன்னக்கிளி’ படத்தில் இடம் பெற்றது.

பின்னர் அந்தக் ‘கண்ணகி’ படத்தைத் தேடித் தேடி டி.வி.டி.யில் முழுமையாகப் பார்த்தபோது, இளங்கோவன் வசனத்தில் பி.யு.சின்னப்பா, கண்ணாம்பா நடிப்பில் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட படம் அது என்பதை உணர முடிந்தது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இந்தப் படத்துக்குப் பிறகுதான் 60களில் வெளியான ’பூம்புகார்’ திரைப்படம் பார்க்க வாய்த்தது.

‘கண்ணகி’ படம் அளித்த நிறைவை பூம்புகார் அளிக்கவில்லை என்றாலும் கண்ணகியாக நடித்த விஜயகுமாரியோ, கோவலனாக எஸ்.எஸ்.ஆர், கவுந்தியடிகளாக கே.பி.சுந்தராம்பாள் என யாருமே நடிப்பில் குறை வைக்கவில்லை. இப்போதும் கூட ’பூம்புகார்’ படத்தைப் பார்க்கும்போது மாதவி வீடு சென்ற கணவனின்  வருகைக்காக அமைதியே வடிவாகப் பொறுமை காத்து நிற்கும்போதும் சரி, பாண்டியன் அரண்மனையில் உக்கிரத்துடன் வசனம் பேசும்போதும் விஜயகுமாரி நடிப்பின் உழைப்பு பிரமிக்க வைப்பதாக இருக்கிறது.

கணவன் அநியாயமாகக் கொல்லப்பட்டான் என்பதை அறிந்த ஒரு பெண் பிச்சியாக, பித்துப் பிடித்த மனநிலையில் உன்மத்தத்துடன் எவ்வாறு நடந்து கொள்வாளோ அதையே மிக இயல்பாக கண்ணகியாக அழகாகச் செய்திருப்பார் விஜயகுமாரி. அத்துடன் தன்னையே வருத்திக் கொண்டும் அவர் நடித்திருப்பார். நிச்சயமாக தொண்டை நரம்புகள் அதிர அதிர அவர் பேசிய வசனங்கள் அவர் உடல் நலனையும் பாதித்திருக்க வாய்ப்பிருக்கிறது.

அவரது திரையுலக வாழ்வில் நிச்சயம் மறக்க முடியாத பாத்திரம் கண்ணகி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ‘பூம்புகார்’ படத்தில் கண்ணகியாக நடித்தது, கண்ணகி சிலையின் உருவத்துக்கு ஆதாரமாக இருந்தது பற்றி எல்லாம் விஜயகுமாரிக்குப் பெருமிதம் உண்டு. அது நியாயமும் கூட. இயல்பான நடிப்புக்குப் பல படங்கள் என்னும்போது மிகை நடிப்புக்கும் பேர் சொல்லும் விதமாய் அமைந்த படம் இது.

அத்துடன் கலைஞர் கருணாநிதியின் வசனங்களைப் பேசிப்பெரும் புகழ் பெற்ற சிவாஜிகணேசன், கண்ணாம்பா இவர்களின் வரிசையில் விஜயகுமாரிக்கும் நிரந்தரமான ஒரு இடம் உண்டு.

அழகான காதல் உறவு தொடர்கதையாகி....

‘குலதெய்வம்’ படத்தில் முதன் முதலாக நடிக்கும்போதே எஸ்.எஸ்.ராஜேந்திரன் -  விஜயகுமாரி இருவருக்குள்ளும் ஆழமான காதலும் புரிதலும் ஏற்பட்டது. முன்னதாகவே அவருக்கு பங்கஜம் என்ற அம்மையாருடன் திருமணமாகி குழந்தைகளும் இருந்தபோதும், அப்போதிருந்தே இருவரும் மனம் ஒருமித்து, முதல் மனைவி பங்கஜத்தின் ஒப்புதலுடன் இணைந்து வாழத் தொடங்கினார்கள்.

இவர்கள் அன்புக்கு அடையாளமாக ரவிகுமார் என்ற மகனும் உண்டு. தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள வீட்டில் மூன்று குடும்பங்களாக அனைவரும் ஒற்றுமையுடனே வசித்தார்கள். பங்கஜமும் அவரது குழந்தைகளும் ஒரு வீட்டிலும், எஸ்.எஸ்.ஆரின் சகோதரியும் அவரது கணவர் D.V.நாராயணசாமியும் (இந்த நாராயணசாமியும் ஒரு நாடக, திரைப்பட நடிகர்தான். ‘பராசக்தி’ திரைப்படத்தில் கதாநாயகி பண்டரிபாய்க்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவருடைய அண்ணனாக நடித்திருப்பார்.)

ஒரு வீட்டிலும், விஜயகுமாரி மற்றோர் வீட்டிலும் ஒரே காம்பவுண்டுக்குள்ளேயே வசித்தார்கள். எஸ்.எஸ்.ஆர். - விஜயகுமாரி இருவரும் இணைந்து நடித்த பல படங்கள் 1960களின் வெற்றிப் படங்களாயின. 25 படங்களுக்கும் மேல் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள்.  

கலைக்கே முதன்மை - அரசியலில் நாட்டமில்லை

திரைப்படக் கலைஞர்களில் முதன்முதலாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றவர் என்ற பெருமைக்குரியவர் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்.

எஸ்.எஸ். ஆருக்குப் பின்னரே எம்.ஜி.ஆர். சட்டமன்ற உறுப்பினரானார். திராவிட இயக்கம் சார்ந்து அவர் இயங்கியதால் இதிகாச, புராணப் படங்களில் நடிப்பதில்லை என்ற கொள்கையில் உறுதியாக இருந்ததால் எஸ்.எஸ்.ஆர். லட்சிய நடிகர் என்றும் அறியப்பட்டார்.

அவரது அரசியல், சினிமா செல்வாக்கு, அதனால் ஏற்பட்ட புகழ், அனைத்துக்கும் மேலாக ஒரே இயக்கம் சார்ந்தவர்கள் என்பதால் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி அனைவருடனும் நல்ல நட்பும் எஸ்.எஸ்.ஆர். - விஜயகுமாரி இருவருக்கும் இருந்தது. எஸ்.எஸ்.ஆர் தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தாலும் விஜயகுமாரியை ஒருபோதும் அரசியலில் ஈடுபடுத்த விரும்பவில்லை, அவரைக் கட்டாயப்படுத்தவும் இல்லை.

இது பற்றிப் பேசும்போது ‘எனக்கு கலைத்துறையில் ஈடுபட வேண்டும், நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததே தவிர, அரசியலில் எப்போதுமே ஈடுபாடு இருந்ததில்லை’ என்றே விஜயகுமாரி குறிப்பிட்டார். எஸ்.எஸ்.ஆர். அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டிய காலத்திலும் திரைப்படம், நாடகம் எதையும் விட்டு விடவில்லை. தன் புகழ் பெற்ற நாடகங்களான மணிமகுடம், முத்து மண்டபத்துக்கு திரைப்பட வடிவமும் கொடுத்து நடித்தவர்.

முற்றுப் பெற்றது திருமணம் என்ற தொடர்கதை

60களில் உச்சத்தில் இருந்த இந்த ஜோடியின் உறவு ‘பூம்புகார்’ படத்துக்குப் பின் பிரிவில் முடிந்தது பெரும் துயரம். அதன் பின் விஜயகுமாரியின் வாழ்க்கை ஒற்றைத் தடத்தில் பயணித்தது. தான் பெரிதும் விரும்பிய கலைத்துறை வாழ்க்கையை விஜயகுமாரி விடாமல் தொடர்ந்தார். சொல்லப் போனால், எஸ்.எஸ்.ஆர். திரைப்படங்களில் நடிப்பது நின்றபோதும் விஜயகுமாரியின் நடிப்பு வாழ்க்கை 2000ங்களிலும் தொடர்ந்தது.

திருமண வாழ்க்கை என்ற தொடர்கதை ஒரு கட்டத்தில் முற்றுப் பெற்றாலும், கலையுலக வாழ்க்கை மட்டும் நீண்ட நெடிய பயணமாகத் தொடர்ந்தது. முதல் மனைவி பங்கஜத்தின் மறைவுக்குப் பின் மீண்டும் எஸ்.எஸ்.ஆர். தாமரைச்செல்வி என்பவரை மணந்து கொண்டார். ஆனாலும், இப்போது பேசும்போது கூட விஜயகுமாரி, ‘எங்க வீட்டுக்காரர்’ என்றே எஸ்.எஸ்.ஆரை அழைக்கிறார்.

உடன்பிறவா சகோதரனாக உதவிக்கரம் நீட்டிய எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர். உடன் உள்ள நட்பு அண்ணன் - தங்கையின் உறவு போன்றது என்பதை எம்.ஜி.ஆர். - விஜயகுமாரி இருவருமே பலமுறை குறிப்பிட்டிருக்கிறார்கள்.

‘எஸ்.எஸ்.ஆர். என் உடன் பிறவா தம்பி, அவரின் மனைவியுடன் நான் ஜோடியாக நடிக்க முடியாது’ என்று எம்.ஜி.ஆரும் குறிப்பிட்டிருக்கிறார். அதனால், ‘நாடோடி மன்னன்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு பறி போனது.

எம்.ஜி.ஆரின் விவசாயி, கணவன் தேர்த்திருவிழா போன்ற படங்களில் விஜயகுமாரி பங்கேற்றிருந்தாலும் தங்கையாக இன்ன பிற உறவு முறைகளில்தான் இருவரும் நடித்திருக்கிறார்கள். இவர்கள் இருவரின் நடிப்பில் குறிப்பாக ‘காஞ்சித் தலைவன்’ படத்தைச் சொல்லலாம். இது இருவரும் இணைந்து நடித்த முதல் படமும் கூட. சின்னப்ப தேவரின் படங்களில் பெரும்பாலும் இருவரும் அண்ணன்-தங்கையாக நடித்திருக்கிறார்கள்.

எஸ்.எஸ்.ஆரை பிரிந்த பின் தனித்து வாழ நேர்ந்த சூழலில் புதிதாக வீடு வாங்குவதற்கு உதவி செய்தவர் எம்.ஜி.ஆர். பல படங்களில் வாய்ப்பு கிடைப்பதற்கும் உதவியாக இருந்திருக்கிறார். சிவாஜி கணேசனுடன் பல படங்களில் விஜயகுமாரி மகளாக, தங்கையாக, தமக்கையாக, முறைப் பெண்ணாக, இணையாக நடித்திருக்கிறார். பார் மகளே பார், பச்சை விளக்கு, குங்குமம், சாந்தி போன்ற படங்கள் இதில் குறிப்பிடத்தக்கவை.

இப்படங்களில் விஜயகுமாரியின் நடிப்பு மிகச் சிறப்பாகவும் அமைந்திருக்கும். இத்தனைக்கும் இப்படங்களில் மிகப் புகழ் பெற்ற அனுபவம் வாய்ந்த பலரும் நடித்திருந்தபோதும், அவர்களுக்குச் சற்றும் குறையாதவண்ணம் விஜயகுமாரி தன் பங்களிப்பைச் செய்திருப்பார். அதன் மூலம் தான் ஒரு பண்பட்ட நடிகை என்பதையும் அவர் பலமுறை நிரூபித்திருக்கிறார்.

இயக்குநர் ஸ்ரீதரின் படங்களில் போலீஸ்காரன் மகள், கொடி மலர், கல்யாணப் பரிசு படங்களில் தன் நடிப்பால் ரசிகர்களைக் கலங்க வைத்தவர். விஜயகுமாரியின் நடிப்பில் மாஸ்டர் பீஸ் என்று சாரதா, நானும் ஒரு பெண், குங்குமம், கொடிமலர், சாந்தி போன்ற படங்களைக் குறிப்பிடலாம். தியேட்டரில் படம் பார்த்த பெண்களைக் கண்ணீர் பெருக்கி அழ வைத்த பாத்திரங்கள் இவை அனைத்தும்.

பேசாப் பொருளைப் பேசிய சாரதா

சாரதா கல்லூரி மாணவி என்றாலும் மிகவும் வசதி படைத்த, சொந்தமாகக் கல்லூரி நடத்தும் செல்வச் சீமானின் மகள். ஆனால், அவள் காதலிப்பதோ கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும் திருஞான சம்பந்தத்தை (எஸ்.எஸ்.ராஜேந்திரன்). அந்தஸ்தை, பொருளாதாரத்தைப் பெரிதாக மதிக்கும் தந்தையை எதிர்த்து தன் காதலனைக் கரம் பற்றும் சாரதா சுயமரியாதை மிக்க பெண்ணாக தந்தையின் சொத்தில் சல்லிக்காசு கூட வேண்டாம் என்று உதறி கணவனுடன் செல்லும் பிடிவாதக்காரப் பெண். ஆனால், உயிராய் நேசிக்கும் காதலர்கள் இடையே விதி குறுக்கிடுகிறது.

புதிதாகப் பணிக்குச் சேர்ந்த கல்லூரியின் விழாவுக்காக உற்சாகத்துடன் பணியாற்றும் சம்பந்தம் மாடியிலிருந்து கீழே விழுந்ததில் உயிர் பிழைத்தாலும், ஆண்மையை இழந்து தாம்பத்ய உறவுக்கு லாயக்கற்றவனாகிறான். இதை மிகுந்த வலியுடன் எதிர்கொள்ளும் சாரதாவின் வாழ்க்கையில் ஒவ்வொரு கணமும் வலி மிகுந்தது. அக்காலகட்டத்தில் பேசாப் பொருளைத் துணிந்து பேசியது ‘சாரதா’ திரைப்படம். சாரதாவாகவே மாறி உணர்வுப்பூர்வமாக விஜயகுமாரி நடித்திருப்பார்.

இந்தச் சிக்கலான பிரச்சனையைத் துணிந்து தன் படம் மூலம் பேசிய இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், பாவப்பட்ட சாரதாவை மீண்டும் ஒருவருடன் திருமண பந்தத்தில் ஈடுபட வைத்திருக்கலாம். ஆனால், ஒரு பாவமும் அறியாத அப்பாவிப் பெண் சாரதாவை இறுதியில் சாகடித்து விடுவதுதான்

புரியாத புதிர்.

பெண்ணுக்கு மறுமணம் செய்விப்பதை ஊக்குவிக்கும் இயக்கங்கள் 1930களிலேயே தோன்றி விட்டபோதும், 60களில் கூட ஒரு திரைப்படத்தில் அதைச் செய்வதற்கு ஏன் தயங்க வேண்டும் என்பது பெரிய கேள்வி. அந்த சாரதாவின் வலியையும் வேதனையையும் அப்படியே முகத்தில் தேக்கிப் பிரதிபலித்திருப்பார் விஜயகுமாரி. எவ்வளவு திறன் வாய்ந்த நடிகை அவர் என்று ஆச்சரியம் கொள்ளவும் வைத்திருப்பார்.   

விருதுகள் பல குவித்த கருப்புப் பெண்

அதே போல வியக்க வைத்த மற்றொரு பாத்திரம் ‘நானும் ஒரு பெண்’ படத்தில் அவர் ஏற்ற கருப்பு நிறப் பெண் கல்யாணி. கல்வியறிவோ, பளீர் என்ற வெள்ளைத் தோலோ இல்லாத ஒரு கருப்புப் பெண். அதிலும் வசதி வாய்ப்புகள் ஏதுமற்ற, சிறிய மளிகைக் கடை ஒன்றை வைத்துப் பிழைக்கும் ஏழ்மையான நிலையில் இருக்கும் ஒருவனின் (நாகேஷ்) மூத்த தங்கை.

அவளுக்கு அடுத்ததாக நல்ல வெள்ளை நிறமும் அழகும் கொண்ட கல்லூரியில் படிக்கும் துணிச்சல் மிக்க தங்கை (புஷ்பலதா). பலாப்பழத்தை மொய்க்கும் ஈயாக இயல்பாகவே சமூகம் வெள்ளைத்தோல் கொண்ட பெண்ணைத்தான் தேடி வரும். அதுதான் இப்படத்திலும் நடக்கிறது. ஆனால், திருமணத்தன்று, மணமகளை மாற்றி விட, ஒருவழியாக பல்வேறு பிரச்சனைகளுக்கு நடுவே கருப்புப் பெண்ணுக்குக் கல்யாணமும் ஆகி விடுகிறது.

ஆனால், இந்த நிறக் குறைபாடு படம் நெடுக கல்யாணியைப் பாடாய்ப்படுத்தி வைக்கிறது. அவள் மருமகளாகப் போயிருப்பதோ ஒரு வசதி படைத்த ஜமீன்தார் வீட்டுக்கு. பிரச்சனைகளுக்குக் கேட்கவா வேண்டும்? ஜமீன்தார் (எஸ்.வி.ரங்காராவ்) இப்பெண்ணை மருமகளாக ஏற்க மறுப்பதுடன் விஷமாக வெறுக்கிறார். அறியாமையினால் கல்யாணி செய்யும் ஒவ்வொரு செயலும் அவளுக்கு எதிராகவே வந்து முடிகிறது.

அதனால் கணவனின் (எஸ்.எஸ்.ஆர்) வெறுப்பையும் சம்பாதித்துக் கொள்கிறாள். அந்த வீட்டுக்குள் அவளுக்கிருக்கும் ஒரே ஆறுதல் அன்பை அள்ளித் தரும் மைத்துனன் (ஏ.வி.எம்.ராஜன்) மட்டுமே. வேலைகளை எல்லாம் முடித்த பின் யாருக்கும் தெரியாமல் மைத்துனனிடம் இரவு நேரத்தில் எழுதப் படிக்கக் கற்கிறாள் கல்யாணி.

கணவனும் ஊரில் இல்லாத நேரத்தில், மைத்துனன் அறைக்கு அவள் தினமும் இரவு நேரத்தில் செல்வது அவளுக்கு வேறு பிரச்சனைகளை அளிக்கிறது. அது வீட்டை விட்டே விரட்டி அடிக்கிறது. யப்பா… ஒரு பெண்ணுக்குத்தான் எத்தனை எத்தனை துன்பங்கள்? அத்தனையும் ஒரு சேர ஒருத்தியை அலைக்கழித்தால், நிச்சயமாக அவள் தற்கொலை முடிவைத்தான் தேர்வு செய்வாள்.

ஆனால், இந்தப் படத்தின் முடிவு மிக மிக பாஸிட்டிவாக, அவள் இத்தனை காலமும் அனுபவித்த துன்பங்களுக்கு விடிவாக அமைகிறது. ரகசியமாக அவள் கற்ற கல்வி, மாமனார் ஜமீன்தாரின் உயிரையும் அவரது திரண்ட சொத்துக்களையும் காப்பாற்ற உதவுகிறது. கருப்பு நிறம் இழிவானதல்ல என்பதுடன் பெண் கல்வியின் உயர்வையும் அதன் அவசியத்தையும் வலிமையாகச் சொல்லி முடிகிறது படம்.

இப்படத்தில் கருப்பு நிறப் பெண்ணாக மிக அற்புதமாக நடித்திருப்பார் விஜயகுமாரி. அவர் மட்டுமல்ல, ரங்காராவும் அற்புதமான நடிப்பை வழங்கி இப்படத்துக்கு சிறந்த நடிகருக்கான தேசிய  விருதையும் பெற்றார். படம் மிகச் சிறந்த மாநில மொழிப் படத்துக்கான குடியரசுத் தலைவர் விருதினையும் பெற்றது.

கருப்பு ஒப்பனையில் நடிக்க ஊக்கப்படுத்திய சிவாஜி

 

இப்படத்துக்காக ஸ்பெஷலாக கருப்பு நிற ஒப்பனை செய்து கொண்டு நடித்தார் விஜயகுமாரி. அவரது கருப்பு நிறத்தைப் பார்த்த பலரும் அக்கறை என்ற பெயரில் அவரை மனம் தளர வைத்தார்கள். இப்படி கருப்பு மேக்கப் போட்டுக் கொண்டு நடித்தால் பட வாய்ப்புகள் இல்லாமல் எதிர்காலமே இருண்டு போகும் என்பது வரை பயமுறுத்தி இருக்கிறார்கள்.

ஆனால், ‘தான் பெண்ணாக இருந்தால் இந்தப் பாத்திரத்தைத் தயங்காமல் ஏற்று நடிப்பேன்’ என்று பாராட்டி விஜயகுமாரியைத் தொடர்ந்து இப்படத்தில்  நடிக்க ஊக்குவித்தவர் சிவாஜி கணேசன் மட்டுமே. ஆப்பிரிக்காவிலும் உலக நாடுகளிலும் கூட நிற வெறி வேற்றுமை ஒழிந்தாலும், நம் நாட்டைப் பொறுத்தவரை  பெண்கள் மீது மிகப் பெரிய ஆயுதத்தைப் பிரயோகித்து வருகிறது இந்த நிற வேற்றுமை.

திருமணச் சந்தையில் கருப்பு நிறப் பெண்களுக்கு இன்றளவும் பெரும் சவாலாகவே இருக்கிறது.  இப்படம் அதன் பிறகு மீனாகுமாரி நடிக்க ‘மேய்ன் பீ லட்கி ஹூம் (Main Bhi Ladki Hoom) என்று இந்தியிலும், நடிகையர் திலகம் சாவித்திரியின் நடிப்பில் ‘நாடி ஆட ஜென்மே’ (Naadi Aada Jenme) எனத் தெலுங்கிலும் உருப் பெற்றது.

மூன்று படங்களுமே 1963, 64, 65 ஆம் ஆண்டுகளில் அடுத்தடுத்து வெளியாயின. மூன்று மொழிப் படங்களிலும் ஜமீன்தாராக நடித்தவர் ரங்காராவ். இதற்கான தேசிய விருதையும் பெற்றவர் அவர். ஆனால், உண்மையில் இதன் மூலக்கதை வங்காளி மொழியில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட

‘போது’ (Bhodhu) என்ற நாடகமே.

அதுவே இத்தனை மொழிகளில் திரைப்படமாக வடிவெடுத்தது. ஆனால், ஒன்றைச் சொல்லியாக வேண்டும். தமிழில் படம் பெற்ற வெற்றியை இந்தியும் தெலுங்கும் பெறவில்லை. ஸ்ரீதரின் ‘கொடிமலர்’ படம் கூட வங்காள மொழியில் எழுதப்பட்ட ‘சியாமளா’ என்ற கதையைத் தழுவி எடுக்கப்பட்டதுதான். வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிப் பெண்ணாக அப்படத்தில் நடித்தவர் விஜயகுமாரி.

படம் நெடுகப் பிழியப் பிழிய அழுததுதான் பெரும் சோகம். ‘சாந்தி’ படத்திலும் பார்வையற்ற பெண்ணாக நடித்தார். அதேபோல சிவாஜியின் சொந்தப் படமான ‘குங்குமம்’ படத்தின் மூலக்கதையும் கூட வங்காள மொழிக் கதையே... இவர்களை அடுத்து ஜெமினி கணேசன், முத்துராமன், பாலாஜி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என்று அனைவருடனும் நாயகியாக நடித்தவர்.

அடுத்த தலைமுறையில் ரஜினி, பிரபு, கார்த்திக், முரளி என பலருக்கும் அம்மாவாக நடித்தவர். அதற்கடுத்த தலைமுறை நடிகர்களுக்குப் பாட்டியாகவும் மாறியவர். காலத்தால் அழியாத பாடல்கள் விஜயகுமாரி சமகாலக் கதாநாயகிகளுடன் இணைந்து இரட்டைக் கதாநாயகிகளுள் ஒருவராக நடிக்கவும் தயங்கவில்லை. இரு கதாநாயகிகள் இணைந்து பாடும் பாடல்களும் அப்போது பிரபலமாக இருந்தன.

விஜயகுமாரி - புஷ்பலதா இருவரும் பல படங்களில் சகோதரிகளாக, தோழிகளாக நடித்திருக்கிறார்கள். அசப்பில் பார்க்கும்போது இருவரும் அசல் சகோதரிகளாகவே தோன்றுவார்கள். இவர்களுக்கு அமைந்த பாடல்களும் அற்புதமானவை. பச்சைவிளக்கின் ‘தூது சொல்ல ஒரு தோழி இல்லை என துயர் கொண்டாயோ தலைவி’, மணியோசையின் ‘கட்டித்தங்க ராஜாவுக்குக் காலை நேரம் கல்யாணம்’, ‘பாயுது பாயுது சின்னம்மா’ போன்ற பாடல்களைக் குறிப்பிடலாம்.

அவற்றில் பல பாடல்கள் மிகப் பெரும் வெற்றியையும் பெற்றவை. தனித்துப் பாடும் ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’, துள்ளாத மனமும் துள்ளும்...’ இப்படி பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். விஜயகுமாரிக்கு அமைந்த டூயட் பாடல்களும் கூட அற்புதமானவை.

எண்ணிலடங்காத பாடல்கள் பல உண்டு என்றாலும், ‘பொன்னென்பேன் சிறு பூவென்பேன்’, ‘ஞாயிறு என்பது பெண்ணாக’, வாராதிருப்பானோ வண்ண மலர்க் கண்ணனவன்’, ‘அல்லித் தண்டுக் காலெடுத்து..’ ‘மதுரா நகரில் தமிழ்ச் சங்கம்’, ‘இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன்’, ‘ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்..’, ‘என்னை விட்டு ஓடிப் போக முடியுமா?’ பட்டியலிட்டால் பக்கங்கள் காணாது.

 

பல தலைமுறைகள் கடந்து எப்போதும் இப்போதும் நினைவில் நிற்பவராக தன் நடிப்பின் வழி மக்கள் மனதில் பதிந்து போயிருக்கும் அற்புதமான பெண்மணி விஜயகுமாரி. ஒரு நடிப்புக் கலைஞருக்கு மக்களின் அங்கீகாரம் தவிர வேறு என்ன வேண்டும்?

Related Stories: