விமர்சனங்களை எதிர்கொள்ளுங்கள்!

நன்றி குங்குமம் தோழி

தடகளப் போட்டி வீராங்கனை கோமதி மாரிமுத்து

“தன் உள்ளுணர்வோடு ஒருமித்திருக்கும் பெண் ஓடும் நதியைப் போன்றவள். எங்கே செல்ல வேண்டும் என்று நினைக்கிறாளோ அங்கே எந்த வெளிப்பூச்சும் இல்லாமல் சென்றடைந்து, அங்கும் தன்னை தானாகவே நிலைநிறுத்திக் கொள்வாள்...”

- மாயா ஏஞ்செலோ

ஓடிய களைப்பை விட, பாராட்டுகளாலும், பலரது விமர்சனங்களாலும், அரசியல்

கட்சியினரின் அதிரடி பரிசுகளாலும் களைப்பாக இருந்தார், ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து.

திருச்சியில் இருந்து மதுரை செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் 15 கி.மீ தொலைவில் உள்ளது முடிகண்டம் என்கிற கிராமம். போக்குவரத்து வசதி இல்லாமல், குடிசை வீடுகள், விறகடுப்பில் சமைக்கும் பெரும்பாலான குடும்பங்களை இந்த கிராமத்தில் காணலாம். அதில் மாரிமுத்து, ராசாத்தி தம்பதியினரும் அடக்கம்.

இவர்களுக்கு நான்கு குழந்தைகள். அதில் கடைக்குட்டியின் பெயர் கோமதி. இவர் தனக்கானதொரு இலக்கை நிர்ணயித்து, அதற்கான சூழலை உருவாக்கிக் கொண்டு, வெற்றியும் கண்டிருக்கிறார். ஆசியதடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று இந்தியாவிற்கான முதல் பரிசை பதிவு செய்த கோமதிக்கு, ஒலிம்பிக்கில் தங்கம் வாங்குவதே லட்சியம்.

“நான் இன்று வெளியுலகத்திற்குத் தெரிவதற்கு பலர் இருந்தாலும் அப்பாதான் முதன்மையானவர். என்னுடைய டீச்சர் விமலா, பள்ளியில் படிக்கும் போது விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க ஊக்குவித்தார்கள். ஓடுவதற்கான ஆர்வம் மட்டுமே கொண்டு பல போட்டிகளில் கலந்து கொண்டேன். அதில், எனது சக போட்டியாளரான ஒரு பெண் எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்றாங்க.  

அப்போதுதான் தெரிந்தது ஓடுவது மட்டும் முக்கியமில்லை பயிற்சி அவசியம் என்பது. எனவே, ராஜாமணி சாரிடம் பயிற்சி எடுத்தேன். அதிகாலையில் 4.30 மணிக்கு என் பயிற்சி ஆரம்பிக்கும். அந்த காலைவேளையில் முதல் பஸ்சில் அப்பா கொண்டு போய் விடும் போது, இடையில்  நாய், பாம்பு எல்லாம் குறுக்க வரும். பயத்தில் இறங்காமல் இருப்பேன். அப்பா தான் தைரியம் கொடுப்பாங்க. அந்த தைரியம் தான் இன்று வரை இந்த அளவு கொண்டு வந்திருக்கிறது” என்கிறார் கோமதி.

ஆசியப் போட்டி அனுபவம்

“எனக்கு இந்தப் போட்டியில் ஜெயிக்கும் வரை ஸ்பான்சர்கள் யாரும் கிடையாது. இந்தப் போட்டிக்காக நான் என் சொந்த செலவில்தான் விமான டிக்கெட்டுகளை புக் செய்து சென்றேன். அங்கே தங்குமிடம், விளையாட்டுக்குத் தேவையான உபகரணங்கள், முக்கியமாக ஓட்டப் பந்தய வீராங்கனையான எனக்குத் தேவையான தரமான ஷூ, சத்தான சாப்பாடு எல்லாவற்றுக்கும் என்னை மட்டுமே நம்பியிருந்தேன்.

வெற்றியைத் தேடித் தந்த இந்தப் போட்டியில் கூட கிழிந்த ஷூ போட்டுக் கொண்டுதான் ஓடி ஜெயித்திருக்கிறேன். போட்டியில் என்னுடன் பங்கேற்ற அத்தனை விளையாட்டு வீரர்களுக்கும் இது தெரியும். பிற விளையாட்டு வீரர்களுக்கு இருந்த பகட்டான உடை வசதி எல்லாம் என்னிடமில்லை.

அதற்காகவெல்லாம் நான் வருத்தப்படவில்லை. என்னுடைய குறிக்கோளில் மட்டுமே ஆழ்ந்த கவனத்துடன் இருந்தேன். அந்த கவனமும், இலக்கை அடைய வேண்டுமென்கிற மன உறுதியும் தான் எனக்கு இந்த வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கின்றன.

நம் மாநிலத்தில் என்னைப் போல பலர் விளையாட்டில் ஆர்வத்துடன் பங்கேற்று மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் சாதித்த பின்னும் கூட விளையாட்டு வேண்டாம் என்று ஒதுங்கும் நிலை இன்றும் நீடிக்கிறது. காரணம் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளதேவையான பொருட்செலவை அவர்களால் தாக்குப்பிடிக்க முடிவதில்லை.

சரியான ஸ்பான்சர்ஸ், வெற்றியாளர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பது இங்கு அரிது. போட்டிகளில் பங்கேற்கத் தேவையான ஊட்டச்சத்துடன் கூடிய உணவு, போக்குவரத்துச் செலவு, தங்குமிடச் செலவு, கோச்சுகளுக்கான செலவு, விளையாட்டு உபகரணங்களுக்கான செலவு என்று ஏதுமே கிடைக்காமல் வீரர்கள் எத்தனை நாட்களுக்குத் தாக்குப்பிடிக்க முடியும்? அத்தனை கஷ்டங்கள் எனக்கும் இருந்தன. இதனோடு காயம் காரணமாக நடுவில் 2 வருடங்கள் என்னால் பயிற்சியில் ஈடுபட முடியாமல், மொத்தமாக போட்டிகளில் இருந்து விலகி இருக்க வேண்டிய சூழலும் வந்தது.

கஷ்டமான அந்தக் காலத்தையும் கடந்து வந்தேன். ஆனால், எத்தனை பேரால் இப்படி தடைகளைக் கடந்து செல்ல முடியும். விளையாட்டில் ஆர்வமுடைய, சாதிக்கக் கூடிய அளவிற்கு திறமைகள் கொண்ட பலர் இங்கு இருக்கிறார்கள். ஆனால், மேற்சொன்ன கஷ்டங்களை தாக்குப் பிடிக்க முடியாமல் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகி ஒரு கட்டத்தில் முற்றிலுமாக விளையாட்டே வேண்டாமென்று ஒதுங்கி விடுகிறார்கள்.”

விளையாட்டுத்  துறை பற்றிய விழிப்புணர்வு

“விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வது பற்றி  9ஆம் வகுப்பு படிக்கும் போதுதான் எனக்குத் தெரிந்தது. நகரப் பகுதிகளில் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. கிராமப் பகுதிகளில் விளையாட்டுத் துறையில் ஈடுபாடு காட்டும் குழந்தைகளுக்கு அவர்களின் குடும்பங்கள் மட்டுமே உதவமுடியும்.

நான் ஒரு விளையாட்டு வீராங்கனை என அறிமுகம் செய்யும்போது, சில பெண்கள் இது ஒரு வேலையா, இதற்கு என்ன படிக்க வேண்டும் என கேட்கிறார்கள். விளையாட்டு என்பது ஒரு துறை, அதில் நாம் சாதிக்கலாம் என்ற விழிப்புணர்வை கிராமத்துக் குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். விளையாட்டுத் துறையில் உள்ள வாய்ப்புகள் என்னை போன்ற கிராமத்துப் போட்டியாளர்களுக்கு கிடைக்க வேண்டும்.  கஷ்டப்படாமல் எளிதில் ஏதும் கிடைக்காது. அப்படி கஷ்டப்பட்டதற்கான ஒரு பலனாக  இது இருந்தாலும், இன்னும் கஷ்டப்பட்டால்தான் அடுத்த லெவலுக்கு போக முடியும். வெற்றியை சுவைக்கு கொஞ்சம் கஷ்டப்படணும்.’’

ரோல் மாடல்

‘‘தமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனை சாந்தி. 2006 ஆம் ஆண்டு நான் பங்கேற்ற 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். அவரிடம் நடத்தப்பட்ட பாலின பரிசோதனையில் ஆண் தன்மை அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது பதக்கம் பறிக்கப்பட்டதோடு, தடகளப் போட்டியில் பங்கேற்கவும் தடைவிதிக்கப்பட்டது. அதில் மனமுடைந்த சாந்தி, மேற்கொண்டு இந்த விஷயத்தில் தனது போராட்டத்தை எப்படி மேற்கொள்வது என்றறியாமல் செங்கல் சூலையில் ரூ.200 ஊதியத்துக்கு தினக்கூலியாக வேலைக்குச் சென்றார்.

தற்போது அவர் தன்னிடமிருந்து தட்டிப் பறிக்கப்பட்ட பதக்கக் கனவை திறமையுள்ள பிற இளம் விளையாட்டு வீரர்கள் பெறும்படியாக அவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். அவர் தான் என்னுடைய ரோல்மாடல். அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருந்ததால் தான் இப்படி ஒரு நிலை. ஒரு வேளை அவர் வட மாநிலங்களில் பிறந்திருந்து இப்படி ஒரு நிலைக்கு ஆளாகி இருந்தால் நிச்சயம் அந்த மாநிலத்தார் அவரை விட்டுக் கொடுத்திருக்க மாட்டார்கள்” என்ற தனது வருத்தத்தை பதிவு செய்தார்.

அடுத்த இலக்கு

‘‘ஒலிம்பிக்கில் உலக சாம்பியன்ஷிப். அதற்காக முழுநேரமும் பயிற்சியில் ஈடுபடவேண்டும். இதுவரை, ஆசிய தடகளப் போட்டியில், 800 மீட்டர் பந்தயத்தில் 1995ஆம் ஆண்டு வெற்றிபெற்ற சைனி வில்சன் 1:59 நிமிடங்களில் கடந்தது சாதனையாக உள்ளது. அந்த சாதனையை முறியடிக்க வேண்டும்.’’

விமர்சனங்கள்

“நான் கஷ்டப்பட்ட மாதிரி மற்றவர்களும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காகவும், நாம் சாதிப்பதற்கு வறுமை ஒரு தடையில்லை என்பதை மற்றவர்கள் உணர வேண்டும் என்பதற்காக எனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டேன்.

அதை சிலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். இதை நேர்மறையாக எடுத்துக் கொள்வதும், எதிர் மறையாக எடுத்துக் கொள்வதும் ஒவ்வொருவரின் புரிதலைப் பொறுத்து. இந்த விமர்சனங்கள் பற்றி பெரிதாக நான் அலட்டிக் கொள்ளவில்லை. நான் எனது இலக்கை ேநாக்கி பயணம் செய்யணும். விமர்சனங்களை நினைத்துக் கொண்டிருந்தால் என்னால் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாது” என்றார்.

கோமதி மாரிமுத்து தங்கம் வென்ற பின், அவருக்கான பாராட்டுகள் குவிந்த அதே வேளையில் சில விமர்சனங்களுக்கும் ஆளானார். வறுமை, சாதி, ஏன் அவர் அணிந்திருந்த ஷூ வரை விமர்சனம் நீண்டது. இந்தியாவில் பல்வேறு வகையான விளையாட்டுக் காலணிகள் கிடைத்தாலும், தேசிய, சர்வதேச அளவில் போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு ஏற்ப வசதியில், தரத்தில் காலணிகள் இங்கு கிடைப்பதில்லை.

கோமதி அணிந்து ஓடிய காலணிகள் வெவ்வேறு நிறங்களில் இருந்தாலும் அவை ஆர்டர் செய்யப்பட்ட ஜோடி காலணிகளே. சொல்லப்போனால் உசேன்போல்ட் கூட இதே போன்றதொரு காலணிகளை அணிந்துதான்  ஓடியிருக்கிறார்.

கோமதியின் காலணி கிழிந்து இருந்ததா? இல்லையா? என்று ஆராய்வதற்கு முன்னால், ஒன்றை நாம் புரிந்துகொள்வது அவசியம். முதலில் கோமதிக்கு காலணியில் பிரச்சினை இல்லை என்றால் அதுபற்றி அவர் பேசி இருக்கவே மாட்டார். சர்வதேச அளவில் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ளும் ஒருவர், தனது அடிப்படை தேவைகளில் ஒன்றான, காலணிகளில் ஏதோ ஒரு குறையை உணர்ந்திருக்கிறார்.

இதை நேரடியாகவோ, மறைமுகமாகவோ மற்றவர்களுக்கு உணர்த்த நினைத்திருக்கிறார் என்றே நாம் புரிந்துகொள்ள வேண்டும். இல்லை என்றால் இதுபற்றிய பேச்சே வெளிவந்திருக்காது என்பதே நிதர்சனம்.

கோமதி போன்ற பல விளையாட்டு வீரர்களின் பார்வையில் இருந்து  அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. அவர்களுக்கு இருக்கும் ஒவ்வொரு குறையையும் ஆராயத் தொடங்கினால் இங்கு ஏராளமானோர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியிருக்கும். ஆட்சியாளர்கள், அதிகாரிகள் முதல் இந்த சமூகம் வரை அனைவருக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது.

அன்னம் அரசு

ஏ.டி.தமிழ்வாணன்

Related Stories: