கெட்ட நேரம் என்றிருந்தால் நல்ல நேரமும் இருக்கும்!

நன்றி குங்குமம் தோழி

- சின்னத்திரை நடிகை பிரியங்கா

பள்ளிக் குழந்தையைப் போல் துறுதுறுவென்று படப்பிடிப்பு தளத்தில், தான் இருக்கும் இடத்தை நிறைவாக வைத்துக் கொண்டிருந்தார் பிரியங்கா. இல்லை, இல்லை… தினந்தோறும் இரவு 9.00 மணிக்கு, சன் டி.வி-யில் உங்களோடு உரையாடும் “ரோஜா” தான் அந்த பிரியங்கா. இத்தொடரில் தான் நடிக்கும் அனுபவம், நடிப்பு துறையை தேர்வு செய்வதற்கான காரணம், சமூக செயல்பாடுகள் என தனது பிஸி ஷெட்டியூலை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

“குழந்தை நட்சத்திரமாகத் தெலுங்கு திரையில் அறிமுகமானேன். என்னுடைய குடும்பம் ஐந்து உறுப்பினர்களைக் கொண்டது. அம்மா, அப்பா, என்னோடு சேர்த்து இரண்டு தங்கைகள். சின்ன வயதிலிருந்தே டி.வி பார்த்து டான்ஸ் ஆடுவேன். அதிலும் வெஸ்டர்ன் கிறுக்குப்பிடி. என்னுள் எப்போதும் நடனம் ஒரு வைபரேஷனாக செயல்பட்டுக் கொண்டே இருக்கும். இத்தனைக்கும் பிரத்யேகமாக டான்ஸ் பயிற்சி எல்லாம் போனது கிடையாது. அந்த சமயத்தில் தான் ரியாலிட்டி நிகழ்ச்சிக்கான ஆடிஷன் நடைபெற்றது.

நான் எப்போதும் டான்ஸ் ஆடிக்கொண்டு இருப்பதால், அம்மா என்னை அந்த நிகழ்ச்சிக்கான ஆடிஷனுக்கு அழைத்து போனாங்க. ஆடிஷனில் நான் தேர்வானேன். அதன் பிறகு பல நடன நிகழ்ச்சியில் கலந்திருக்கிறேன். அந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியில் தான் என்னுடைய பெர்ஃபார்மன்ஸ் பார்த்து மேனேஜர் ஒருவர், ‘உங்களுக்கு நடிக்க ஆர்வம் இருக்கா’ ன்னு கேட்டார். முதலில் நடனம் சரி நடிப்பு எப்படின்னு யோசிச்சேன்.

சரி செய்து தான் பார்க்கலாம்ன்னு அவரிடம் ஓ.கே சொன்னேன். உடனே அவர் நிகழ்ச்சி ஒன்றினை தொகுத்து வழங்கணும்ன்னு சொல்ல, அது பற்றி என்னவென்றுக் கூடத் தெரியாது என்றாலும் சரின்னு செய்ய ஆரம்பித்தேன். இப்படித்தான் சின்னத்திரையில் என் முகம் தோன்ற ஆரம்பிச்சது. அதைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினேன். அதை பார்த்து தெலுங்கு தொடர்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது’’ என்கிறார் பிரியங்கா.

‘அன்டாரி பண்டுவாயா’ என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் வெள்ளித் திரையில் கால் பதித்த பிரியங்கா, தொடர்ந்து பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருப்பதோடு, தமிழில் சமீபத்தில் வெளியான காஞ்சனா 3 படத்தில் நடித்திருப்பதன் மூலம் தமிழ்த் திரையுலகிலும் கால் பதித்துள்ளார். “நான் ஒரு டான்ஸ் பைத்தியம். எப்போதும் ஏதாவது ஒரு பாட்டுக்கு நடனம் ஆடிக் கொண்டு இருப்பேன்.

பொதுவா நடனம் மேல் பைத்தியமாக இருப்பவர்களுக்கு, ஏதாவது ஒரு டான்ஸ் மாஸ்டர் கூட வேலை பார்க்க வேண்டும் என்கிற மனநிலையும் இருக்கும். எனக்கும் அப்படித்தான். லாரன்ஸ் மாஸ்டர் படத்தில் நடிக்க ஆசை. அது காஞ்சனா 3 படம் மூலம் நிறைவேறியுள்ளது. சின்ன கதாபாத்திரம் தான் ஆனால் அவர் நடிக்கும் படத்தில் அவருக்கும் ஜோடியா நடிக்கணும்”ன்னு இப்போதே மாஸ்டருக்கு ஒரு அப்ளிக்கேஷனும்

போடுகிறார் பிரியங்கா.

பல இல்லத்தரசிகளின் மனங்களை கொள்ளைக் கொண்டிருக்கும் ரோஜா தொடர் பற்றி கூறும் பிரியங்கா, “தமிழில் முதல் டி.வி தொடர். அதுவும் பெரிய டி.வி. நெட்வொர்க்கான சன்.டிவியில், ஒரு தொடரின் டைட்டில் ரோலில் நடிப்பது கூடுதல் பெருமை. ‘ரோஜா- என்று ஒரு தொடர் ஆரம்பிக்கப் போகிறோம், அதில் நீங்கள் தான் டைட்டில் ரோல்’ என்று எனக்குக் கால் வந்தது. தெலுங்கிலும் டைட்டில் ரோலில் தொடர்கள் நடித்து வந்ததால், அப்ப நான் அதை பெரிசா எடுத்துக்கல. இரண்டு மாதம் கழித்து மீண்டும் அழைப்பு வந்தது. அம்மாவிடம் சொல்ல.

அவர் போய் தான் பார்ப்போமே என்றார். சென்னை எனக்கு புதுசு. இங்கு யாரையும் எனக்கு தெரியாது. இருந்தாலும் நானும் அம்மாவும் சென்னைக்கு பயணமானோம். ஆடிஷன் வைப்பாங்கன்னு பார்த்தால், எடுத்ததும் புரமோ ஷூட்ன்னு சொல்லிட்டாங்க. அதுவே எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ரோஜா ஆரம்பிக்கும் போது, நானும் அம்மாவும் மட்டும்தான் இங்கு வந்தோம். இப்போ இத்தொடர் மூலம் பல உறவுகள் கிடைத்திருக்கிறது” என்றார்.

ரோஜா எப்படிப்பட்டவள்... “எல்லாவிதமான எமோஷ்னல்களும் கொண்டவள் ரோஜா. ரொமான்ஸ், காமெடி, பரிதாபம், கோவம்… என நடிப்பது கொஞ்சம் சவாலாக உள்ளது. தமிழில் முதல் தொடரிலேயே இப்படி ஒரு கதாபாத்திரம், அதுவும் மக்கள் மத்தியில் இடம் பிடித்திருப்பது நான் ரொம்ப லக்கின்னு தான் சொல்லணும்.

நான் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பா இருக்கும். இந்த  தொடரில் வடிவுக்கரசி அம்மா, காயத்ரி அக்கா எல்லாம் அவங்க பொண்ணு மாதிரி என்னை பார்த்துக்கிறாங்க. இப்படி பார்க்கனும், இந்த மாதிரி முக பாவனைகள் கொடுக்கணும்னு அப்பப்ப டிப்ஸ் தருவாங்க.

தமிழுக்கு நான் புதுசு என்பதால் ஆரம்பத்தில் ‘ஏய் என்னா’ன்னு என்னை ரேக் செய்வாங்க. அவங்க விளையாடுறாங்கன்னு தெரியாம அழுதிடுவேன். அதை பார்த்திட்டு இவ்வளவு சென்சிட்டிவா இருக்கக் கூடாதுன்னு அட்வைஸ் செய்திருக்காங்க. இப்ப இவங்க இரண்டு பேரும் என்னோட க்ளோஸ் ஃபிரண்ட்ஸ். அவங்க கிட்ட இருந்து நிறைய விஷயம் கத்துக்கிட்டேன்.

கேமரா முன் இல்லாமல் இருந்தாலும் மற்றவர்களிடம் எப்படி பேசணும், ஸ்டேஜ்ல என்ன பேசணும், வாழ்க்கையில் ஒவ்வொரு சூழலுக்கு தகுந்த மாதிரி எப்படி வாழணும்ன்னு பல விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்.

ஆரம்பத்தில் நடிப்பு குறித்த டெக்னிக்கல் விஷயம் எதுவும் தெரியாது. நான் நடனம் மற்றும் ஆக்டிங் பயிற்சிகளுக்கு போனதில்ல. இருந்தாலும் இப்ப நம்பிக்கையா பண்றேன். மற்றவர்கள் நடிக்கும் போது அதை நேரடியாகவும், திரையிலும் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொண்டு இப்போ ஓரளவு நடிக்கிறேன்” என்கிறார்.

தமிழ் மொழி ரொம்ப பிடிக்கும் என்று கூறும் பிரியங்கா, “நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் ஐதராபாத்தான். தமிழ் சுத்தமா தெரியாது. இப்ப தமிழில் மற்றவர்கள் பேசுவதை புரிந்து கொள்கிறேன். பேச தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. இந்த ஒரு மொழியை பல விதமாக பேசுவதை பார்க்கும் போது வியப்பாவும் இருக்கு” என்கிறார் மழலை தமிழில்.

தற்போது ரோஜா தொடரில் மட்டும் பிசியாக நடித்து வரும் பிரியங்காவிற்கு திரைப்படங்களில் நாயகியாக நடிப்பதோடு மட்டும் இல்லாமல் சீனியர் நடிகர்களோடும் நடிக்க வேண்டுமாம். மேலும், எந்த விதமான ஈகோ மற்றும் பொறாமை இல்லாமல் நடிப்பு கலைக்கு  உண்மையாகவும் முக்கியத்துவம் கொடுத்தால் வாழ்க்கை முழுவதும் நடிக்கலாம் என்கிறார்.

“ஒரு காலத்தில் நான் டிக் டாக் அடிமை. எப்போது எல்லாருடைய கையிலும் செல்போன் தவழ ஆரம்பித்ததோ அன்றிலிருந்து குடும்பத்தினரோடு பலர் நேரங்களை செலவழிப்பதில்லை. நானும் அதற்கு விதிவிலக்கல்ல. சமூக வலைத்தளங்கள் அவசியம் தான். ஆனா,் நாம் அதற்கு அடிமையாக இருக்கிறோம். அதில் கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம்.

வீட்டுக்கு போனா தனியா ரூம் போய் டிக் டாக் என அடிமையாகிறோம். இதே போல் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களுக்கான கட்டுப்பாடும் அவசியம். தவறாக பயன்படுத்தும் போது தான் பொள்ளாச்சி போன்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இது போன்ற குற்றங்களுக்கு உடனடி தண்டனை நிறைவேற்றும் போது எல்லோரும் பயப்படுவார்கள்.

எனக்கு கர்மா மேல் நம்பிக்கையுண்டு. கெட்ட நேரம் வந்தால் கண்டிப்பா நல்ல நேரமும் வரும். சின்ன வயதில் ரொம்ப கஷ்டப்பட்டேன். ஸ்கூல் பீஸ் கட்ட முடியாது. மதியம் சாப்பிட்டால் இரவு சாப்பிட முடியாது. கஷ்டமான நாட்கள் வரும் போது, கண்டிப்பா சந்தோஷமான நாட்கள் வரும்ன்னு என்னை நானே ஊக்கப்படுத்திக் கொள்வேன். என்னால் முடிந்த அளவு நெருங்கியவர்களுக்கு கல்வி போன்ற சில விஷயங்களுக்கு உதவி வருகிறேன்” என்ற பிரியங்காவிற்கு ஆன்மிகம் மேல் தனி ஈடுபாடுண்டாம்.

அன்னம் அரசு

ஏ.டி.தமிழ்வாணன்

Related Stories: