கேத்தே பெளமனின் அல்கோரிதம்

நன்றி குங்குமம் தோழி

மிகச் சமீபத்தில் இணைய உலகை கலக்கிய முக்கியமான பெயர் கேத்தே பெளமன். அமெரிக்காவின் புகழ்பெற்ற எம்.ஐ.டி பட்டதாரியும், 29 வயது இளம் கம்ப்யூட்டர் வல்லுனருமான பெளமனின் மகத்தான அறிவியல் சாதனையில் அல்கோரிதம் முக்கியப் பங்காற்றியமை மக்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்த பிரபஞ்சத்தில் நாம் நினைத்துப் பார்க்கவே முடியாத தொலைவில் உள்ள எம்87 கேலக்ஸி மையத்தில் இருக்கும் பிரமாண்ட கருந்துளையை புகைப்படத்தில் பதிவு செய்த சாதனையின் சொந்தக்காரர் இந்த பௌமன். இது அறிவியல் விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சி என்றாலும் பெளமனுக்கு இந்த நிகழ்வில் முக்கிய பங்கு இருக்கிறது. ஏனென்றால் பௌமன் உருவாக்கிய அல்கோரிதம்தான் கருந்துளையை படமெடுக்க கைகொடுத்திருக்கிறது.

மிகச் சாதாரணமாக ஒரு கேமராவை வைத்து படமெடுப்பதுபோல் அல்ல இந்த நிகழ்வு. வானியல் ஆய்வு நிகழ்வுகள் அல்லது பொருட்களை படமெடுக்க சக்திவாய்ந்த தொலை நோக்கி கருவிகள் தேவை. கருந்துளையை படமெடுக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கி வைத்திருக்கும் தொலைநோக்கி போதுமானது கிடையாது. காரணம் எம்87 கேலெக்ஸி கருந்துளை நம் சூரிய மண்டலம் அளவுக்கு பெரிதாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது 6.5 பில்லியன் சூரியனின் நிறை கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இத்தகைய அதிபிரமாண்ட கருந்துளையை படமெடுக்க வேண்டுமெனில், நமது பூமியின் அளவிற்கு மிகப் பெரும் தொலைநோக்கி தேவை. அப்படி ஒரு தொலைநோக்கியை உருவாக்குவது என்பது சாத்தியமே இல்லை. இதனை சாத்தியமாக்க விஞ்ஞானிகள் செய்த கூட்டு முயற்சிதான் இந்த நிகழ்வு.  

அதாவது பூமியின் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்ட எட்டு ரேடியோ டெலஸ்கோப்புகளை ஒருங்கிணைத்து படமெடுத்த கருந்துளையை ஒன்றிணைத்துப் பார்க்கும் ஈ.எச்.டி தொலைநோக்கி ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கினர்.

இதில் ஒவ்வொரு தொலைநோக்கியும் கருந்துளையின் ஒவ்வொரு பகுதியை படமெடுக்க முயன்று அது தொடர்பான தரவுகளை திரட்டித் தரும். இந்தத் தகவல்கள் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்தால் ஒட்டு மொத்தமாக ஒரு உருவம் கிடைக்கும். அதுவே கருந்துளையின் படமென விஞ்ஞானிகளால் கருதப்பட்டது. இதிலும் எண்ணற்ற சிக்கல்கள், பல இடர்பாடுகள் நேரிட்டன.

எல்லா தொலைநோக்கிகளும் ஒரே நேரத்தில் செயல்பட வேண்டும். அதற்கு எல்லா இடங்களிலும் வானிலை ஒன்றுபோல் சாதகமான நிலையில் இருத்தல் வேண்டும். இப்படி ஒரு நாளைத் தேர்வு செய்து, அணு கடிகாரத்தின் மூலமாக துல்லியமான நேரத்தைக் கணித்து எடுக்கப்பட்ட தரவுகளை பதிவு செய்தனர். பதிவு செய்த இத் தரவுகளில் இருந்துதான் கருந்துளையின் தோற்றத்தை உருவாக்கி உள்ளனர். இது படிப்பதற்கும் கேட்பதற்கும் சுலபமாக இருந்தாலும், இதன் பின் இருந்த கூட்டு முயற்சியும், அறிவியல் ஒருங்கிணைப்பும் நம்மை பிரமிக்கவும், வியக்கவும் வைக்கக் கூடியது. திரட்டப்பட்ட தரவுகள் அனைத்தும் விமானம் மூலம் ஓரிடத்திற்கு கொண்டு வரப்பட்டன. இதில் அண்டார்டிகாவில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் வந்து சேரவே ஆறு மாத காலங்கள் எடுத்திருக்கிறது. இந்த இடத்தில் தான் கேத்தே பெளமனின் பங்களிப்பு இருந்துள்ளது.

அதாவது டன் கணக்கிலான தரவுகளில் இருந்து எந்த விவரங்களை எடுக்க வேண்டும், அதை எப்படி அணுக வேண்டும், தேவையில்லாத தரவுகளை எப்படி விலக்கிவைக்க வேண்டும் என்பதற்கான அல்கோரிதமைதான் பெளமன் உருவாக்கிக் கொடுத்தார். இந்த அல்கோரிதம் வழியாகத்தான் கருந்துளையை படமெடுக்கும் மிகப் பெரும் அதிசயம் சாத்தியமாகி இருக்கிறது. அதாவது பல்வேறு இடங்களிலிருந்து பெறப்படும் டேட்டாக்கள் அடங்கிய பல ஹார்ட் டிரைவ்கள் அனைத்தும் மசாசூசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜிக்கு சொந்தமான Haystack என்ற விண்வெளி ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு அங்கே

ஒருங்கிணைக்கும் பணி நடந்துள்ளது. அங்கே, அரை டன்னுக்கும் அதிகமான ஹார்ட் டிரைவ்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன. இப்படி 5 பீட்டாபைட் அளவுக்கு மேல் இருந்த டேட்டாக்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்தால் மட்டுமே கருந்துளையின் புகைப்படத்தை உருவாக்க முடியும் என்றபோது, அந்த வேலையை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதற்கு கை கொடுத்திருக்கிறார், கேத்தே பௌமன் (Katie Bouman).

மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இதற்கான பணியில் பெளமன் ஈடுபடத் தொடங்கி இருக்கிறார். அந்த படம்தான் கடந்தவாரம் இணையத்தில் வெளியாகி பேசு பொருளானது. அத்துடன் கருந்துளையினை படம் எடுக்கும் நிகழ்வு பற்றி பெளமன் பேசும் வீடியோவும் வெளியானது. இதில் பௌமன் இது என் தனிப்பட்ட சாதனை கிடையாது. 200க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியின் பலன் என தெரிவித்தார். தொடர்ந்து டிவிட்டரில் ஆய்வாளர்களும், பொது மக்களும் பெளமனின் சாதனையை பாராட்டி டிவீட்களை பகிரத் துவங்கினர்.

பௌமனும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த நிகழ்வு குறித்த உணர்வினை மிகவும் ஆக்கப்பூர்வமாகப் பதிவு செய்திருந்தார். இணையத்தில் பௌமனின் நேர்காணலும் வெளியானது. அதில் கருந்துளையை படமெடுப்பதற்கான அல்கோரிதம் செயல்படும் விதம் குறித்து, பெளமன் தன் கண்களில் ஆர்வம் மின்ன, துள்ளலும் நகைச்சுவையுமாக உற்சாகமாக பேசிய காணொளி இணைய வெளியில் அதிகம் பார்த்து பகிரப்பட்டது.

பௌமன் பயின்ற மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரி, அவரின் புகைப்படத்தோடு இந்நிகழ்வை ட்வீட் செய்து ‘வரலாற்றில் இடம்பெற வேண்டிய பெயர் உங்களுடையது’ என வாழ்த்தை பதித்த நொடியில் ட்வீட்கள் கொட்டத் துவங்கின. தொடர்ந்து கருந்துளையைப் புகைப்படமெடுக்கும் பணிக்காக டேட்டாக்கள் சேமிக்கப்பட்ட ஹார்ட் டிஸ்க்குகளுடன் கேத்தி இருக்கும் புகைப்படத்தையும் பிபிசி வெளியிட்டது. நொடியில் பௌமனின் புகழ் இணைய உலகில் பரவி நெட்டிசன்களால் வைரலானது.

பாராட்டு மழைக்கு நடுவில், கருந்துளையின் புகைப்படத்தை பௌமன் வெளியிட்டு, ‘நான் உருவாக்கிய என்னால் நம்பவே முடியாத கருந்துளையின் புகைப்படத்தை இப்போது நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்’ எனத் தான், முதன் முதலில லேப்டாப்பில் பார்த்தபோது எடுக்கப்பட்ட போட்டோவை தன் முகப்புப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

மேலும் ‘சாத்தியமற்றதாக நம்பப்பட்ட ஒரு விஷயத்தை இன்று நிகழ்த்திக் காட்டியிருக்கிறோம். அதற்கான கருவி, டேட்டா சேகரிப்பு, படமாக்கும் முறை, ஆராய்ச்சித் தொழில்நுட்பம் என இவையெல்லாம் பல ஆண்டுகள் உழைப்பில் உருவாக்கப்பட்டவை. இந்தக் குழுவில் உங்கள் அனைவருடன் இணைந்து நானும் பணியாற்றியதில் மிகவும் பெருமைப்படுகிறேன்’ என்று தன் குழுவின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் கேத்தி பௌமன்.

விண்வெளி ஆராய்ச்சியில் பிரமிக்கத் தக்க வகையில் பெண்களின் சாதனை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.. வாழ்த்துக்கள் பௌமன்.!!

மகேஸ்வரி நாகராஜன்

Related Stories: