ரோமா

நன்றி குங்குமம் தோழி

பெண் மைய சினிமா

நன்றியுணர்வில் இருந்து உண்மையான கலைப்படைப்பு பிறக்கிறது.

-நீட்ஷே

கடந்த வருடம் நெட்பிலிக்ஸில் வெளியாகி நூற்றுக்கணக்கான விருதுகளைக் குவித்த மெக்ஸிகன் படம் ‘ரோமா’. 2018-ம் வருடத்தின் தலைசிறந்த படமாக கொண்டாடப்படுகிற ‘ரோமா’வை சினிமா ஆர்வலர்களும், இயக்குனர்களும் புகழ்ந்து தள்ளுகின்றனர். அன்றாட வாழ்வின் அழகையும், அவஸ்தைகளையும் நுட்பமாக பதிவு செய்கிற இப்படம், நாம் கவனிக்காமல் விடுகின்ற பெண்களின் அக உலகையும் அவர்களின் அர்ப்பணிப்பையும் ஆழமாக சித்தரிக்கிறது. படத்தின் கதை எழுபதுகளில் நிகழ்கிறது.மெக்ஸிகோவில் உள்ள ஒரு மாவட்டம் ரோமா. அங்குள்ள ஓர் உயர் நடுத்தரக் குடும்பத்தில் நான்கு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறாள் ஷோபியா. அவளின் கணவர் ஒரு மருத்துவர். அதே வீட்டில் ஷோபியாவின் அம்மாவும் பணிப்பெண்கள் கிளியோவும் அடெல்லாவும் உடன் வசிக்கிறார்கள்.

வீட்டை சுத்தம் செய்வது, சமைப்பது, துணி துவைப்பது, குழந்தைகளுக்கு உடை மாற்றிவிடுவது, அவர்களைப் பள்ளியில் விடுவது, பள்ளி முடிந்து வீட்டுக்கு அழைத்து வருவது, இரவில் குழந்தைகளுக்கு உணவளித்து, கதை சொல்லி தூங்க வைப்பது... என ஒரு தாயைப் போல நான்கு குழந்தைகளையும் பத்திரமாக கவனித்துக்கொள்கிறாள் கிளியோ. குழந்தைகளும் கிளியோவுடன் நெருக்கமாக உறவாடுகிறார்கள். கணவருக்கும் ஷோபியாவுக்கும் இடையில் பெரிய முரண்பாடு நிலவுகிறது. அடிக்கடி சண்டை போட்டுக்கொள்கிறார்கள். கனடாவில் நடக்கின்ற ஒரு கலந்துரையாடலில் கலந்துகொள்வதாகச் சொல்லி வீட்டை விட்டு வெளியே கிளம்பிவிடுகிறார் ஷோபியாவின் கணவர். இனிமேல் கணவர் வீட்டுக்கு வரமாட்டார் என்பதை மறைத்து ஒரு நடைபிணத்தைப் போல வாழ்கிறாள் ஷோபியா. அப்பாவைக் கேட்கும் குழந்தைகளைச் சமாளிப்பதே அவளுக்குப் பெரும்பாடாகிவிடுகிறது.

வீட்டு வேலைகளை முடித்துவிட்டு கிளியோவும் அடெல்லாவும் தங்களின் காதலர்களுடன் சினிமாவுக்குச் செல்கிறார்கள். படம் முடிந்து கிளியோ தன் காதலனுடன் வெளியே சுற்றித் திரிகிறாள். இருவரும் தங்குவதற்காக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருக்கிறாள் கிளியோ. காதலனுடனான நெருக்கத்தால் கிளியோ கர்ப்பமடைகிறாள்.ஒரு நாள் தியேட்டரில் சினிமா பார்த்துக்கொண்டிருக்கும்போது தான் கர்ப்பமடைந்த விஷயத்தைக் காதலனிடம் சொல்கிறாள். அவன் கிளியோவைத் தனியாக தவிக்கவிட்டுவிட்டு வேற ஊருக்குப் போய்விடுகிறான். காதலன் ஏமாற்றியதை தாங்கிக்கொண்டு குழந்தைகளிடம் எப்போதும் போல அன்பாக நடந்துகொள்கிறாள். இந்நிலையில் 1970-ம் வருடம் பிறக்கிறது.

புது வருட கொண்டாட்டத்துக்காக ஷோபியா தன் குடும்பம் மற்றும் பணிப் பெண்களுடன் நண்பரின் எஸ்டேட்டுக்குச் செல்கிறாள். கொண்டாட்டத்தின் போது அங்குள்ள காடு தீப்பிடித்துவிடுகிறது. எல் லோரும் சேர்ந்து தீயை அணைக்கிறார்கள். புது வருடமே ஒருவித சோகத்தில் ஆரம்பிக்கிறது.வீட்டுக்குத் திரும்பியதும் குழந்தைகள் மற்றும் பாட்டியுடன் சினிமாவுக்குச் செல்கிறாள் கிளியோ. அங்கே ஷோபியாவின் கணவர் ஓர் இளம் பெண்ணுடன் ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறார். அவர் ஏன் வீட்டுக்கு வருவதில்லை என்ற காரணம் எல்லோருக்கும் புலப்பட ஆரம்பிக்கிறது. அடுத்த நாள் அடெல்லாவின் நண்பன் மூலம் கிளியோ தன் காதலன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து அங்கே செல்கிறாள். அவன் கிளியோவை அடித்து அவமானப்படுத்தி துரத்திவிடுகிறான்.

ரோமாவிற்குத் திரும்பும்போது கிளியோவின் பனிக்குடம் உடைந்துவிடுகிறது. அவளின் குழந்தை இறந்து பிறக்கிறது. உயர் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஷோபியாவும் பணிப்பெண்ணான கிளியோவும் ஆண்களால் ஏமாற்றப்பட்ட பெண் என்ற புள்ளியில் இணைகிறார்கள். இருவருமே கடந்த கால வடுவை மறந்து புதிய வாழ்க்கையைத் தொடங்க ஆரம்பிக்கிறார்கள்.இதற்காக ஷோபியா பழைய காரை விற்றுவிட்டு புது காரை வாங்குகிறாள். கடைசியாக பழைய காரில் ஒரு கடற்கரைக்குக் குடும்பத்துடன் பயணம் போகிறாள். கிளியோவும் அவர்களுடன் செல்கிறாள். தானும் அப்பாவும் பிரிந்துவிட்டதாகவும், குடும்பத்தைக் காப்பாற்ற வேலைக்குப் போகப் போவதாகவும் குழந்தைகளிடம் சொல் கிறாள் ஷோபியா. அம்மா சொல்வதை ஓரளவுக்குப் புரிந்துகொண்ட குழந்தைகள் கடலில் விளையாடப் போகிறார்கள். இரண்டு குழந்தைகள் கடலின் உள்ளே சென்று சிக்கிக் கொள்கிறார்கள். வெளியே வர முடியாமல் திணறுகிறார்கள்.

இந்நிலையில் நீச்சல் தெரியாத கிளியோ கடலுக்குள் இறங்கி குழந்தைகளைக் காப்பாற்றுகிறாள். சுயநலமற்ற கிளியோவின் அன்பைப் பார்த்து ஷோபியாவும் குழந்தைகளும் நெகிழ்ந்து போகிறார்கள். அனைவரும் புத்துணர்வுடன் வீட்டுக்குத் திரும்புகிறார்கள். மறுபடியும் பழையபடி கிளியோ வீட்டு வேலைகளைச் செய்ய ஆரம்பிக்கிறாள். படம் முடிகிறது.நம் உணர்வுகளை மென்மையாக ஆழமாக தொடுகிறது இப்படம். இரு பெண்களின் வாழ்வினூடாக எழுபதுகளின் ஆரம்பத்தில் மெக்ஸிகோவின் அன்றாட வாழ்வை மிக அருகில் இருந்து பார்த்ததைப் போன்ற உணர்வு உண்மையில் பேரனுபவம். நாம் கவனிக்காமல் விடுகிற வாழ்வின் பக்கங்களை மிக எளிமையாக காட்சிபடுத்தியிருக்கிறார் இயக்குனர் அல்ஃபோன்ஸோ குரான். படத்தின் ஒளிப்பதிவு, திரைக்கதை, எடிட்டிங்கும் இவரே. ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ‘கிராவிட்டி’ படத்தின் இயக்குனர் அல்ஃபோன்ஸோ என்பது குறிப்பிடத்தக்கது.

மனம் நெகிழ்ந்து போக நூறு இடங்கள் படத்தில் இருக்கின்றன. குடும்பம் என்ற அமைப்பு தலைநிமிர்ந்து நிற்பதற்குப் பின்னணியாக உள்ள பெண்களின் துயரங்களையும் தியாகங்களையும் கோடிட்டுக் காட்டுகிற இப்படம், ஆண்களின் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படுகிற பெண்களின் நிலையையும் அழுத்தமாகச் சித்தரிக்கிறது. இந்தப் படத்தை தன் வாழ்வில் அதிகமாக நேசித்த லிபோ என்ற பெண்ணுக்கு அர்ப்பணித்திருக்கிறார் அல்ஃபோன்ஸோ குரான். ஒருவகையில் அவரின் சுயசரிதை தான் இப்படம். அல்ஃபோ்த்த பணிப்பெண்ணின் பெயர் தான் லிபோ. சிறு வயதில் கடலில் மூழ்கிய அல்ஃபோன்ஸோவைக் காப்பாற்றியவர் லிபோ தான். படத்தில் லிபோ தான் கிளியோவாக உருமாறியிருக்கிறார். இன்றும் லிபோ உயிரோடு இருக்கிறார். அத்துடன் அல்ஃபோன்ஸோவின் குடும்பத்துடன் நெருக்கமாகவும் உள்ளார். அவ்வப்போது அவரின்  படங்களில் தலைகாட்டுகிறார் என்பது ஹைலைட்.

-த.சக்திவேல்

Related Stories: