முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அமல்படுத்திய நெருக்கடி நிலை முற்றிலும் தவறானது!: ராகுல்காந்தி

டெல்லி: முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அமல்படுத்திய நெருக்கடி நிலை முற்றிலும் தவறானது என்று அவரது பேரனும், காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னாள் பொருளாதார ஆலோசகரும், அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான கௌசிக் பாசு-வுடன் ராகுல்காந்தி காணொலி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது நெருக்கடி நிலை குறித்து உங்கள் பார்வை என்ன என்று பேராசிரியர் கௌசிக், ராகுல்காந்தியிடம் கேட்டார். அதற்கு இந்திராகாந்தி அமல்படுத்திய நெருக்கடி நிலை முற்றிலும் தவறானது என்று ராகுல்காந்தி பதிலளித்தார்.

இதுகுறித்து கௌசிக் பாசு உரையாடியதாவது, இந்தியாவின் ஜனநாயக தன்மையை நான் பெரிதும் மதிக்கிறேன். ஆனால் அதில் ஒரு சிறிய கறை. நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று தெரியவில்லை. எமர்ஜென்சி காலம் ஏறத்தாழ 2 ஆண்டுகளில் முடிந்துவிட்டது. ஆனால் அதில் உங்கள் பார்வை என்ன என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த ராகுல், அது தவறானது... முற்றிலும் தவறானது...எனது பாட்டியும் தவறென்று கூறியுள்ளார் என்று தெரிவித்தார்.

அதே சமயம் நெருக்கடி நிலை கொண்டுவரப்பட்ட போது இருந்த சூழலும் தற்போதைய நிலையும் ஒன்றல்ல என்று ராகுல் காந்தி தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் ஜனநாயக அமைப்புகளை கைப்பற்ற முயற்சித்ததில்லை என்றும் தங்களுக்கு அந்த திறனும் கிடையாது என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டார். இதனிடையே அரசு அமைப்புகளில் ஆர்.எஸ்.எஸ். தனது ஆட்களை நியமிப்பதை ராகுல்காந்தி சுட்டிக்காட்டினார். தேர்தலில் பாஜகவை தோற்கடித்தாலும் அரசு அமைப்பில் இருந்து அவர்களை எங்களால் வெளியேற்ற முடியாது என்றார்.

Related Stories: