போதை பொருள் விற்ற 2 வாலிபர்கள் கைது: ரூ.1.5 லட்சம் ஹெராயின் பறிமுதல்

ஆவடி: அம்பத்தூரில், போதை பொருள் விற்ற 2 வடமாநில வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, ரூ.1.5 லட்சம் ஹெராயினை பறிமுதல் செய்தனர். அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஐசிஎப் காலனி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் போதை பொருள் விற்பனை செய்வதாக அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையில் போலீசார் நேற்று மாலை சம்பவ இடத்துக்கு மாறுவேடத்தில் சென்று ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, 2 வாலிபர்கள், சந்தேகப்படும்படி சுற்றி கொண்டிருந்தனர். இதையடுத்து போலீசார், அவர்களை அழைத்தனர்.

ஆனால் அவர்கள், போலீசாரை கண்டதும், அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். உடனே போலீசார், வாலிபர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் வலுத்தது. இதையடுத்து, அவர்களை சோதனை செய்தபோது, பேன்ட் பாக்கெட்டுகளில் பிளாஸ்டிக் கவரில் ‘ஹெராயின்’ என்ற போதை பொருள் இருந்தை கண்டுபிடித்தனர். இதையடுத்து போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், 2 வாலிபர்களையும், காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.

அதில், மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த ஜஹாங்கீர் (32), மசாதுல் (31) என தெரிந்தது. அவர்கள் அம்பத்தூர், கள்ளிக்குப்பம், செந்தில் நகரில் தங்கி, அங்குள்ள ஒரு புதிய வீடு கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளனர். இருவரும் மேற்கு வங்காளத்தில் இருந்து ஹெராயின் போதைப்பொருளை பஸ் மூலமாக கடத்தி வந்து, கட்டுமான பணியில் ஈடுபடுவது போல் விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும், கைது செய்தனர். மேலும், அவர்களுக்கு வேறு யாருடன் தொடர்பு உள்ளது என தீவிரமாக விசாரிக்கின்றனனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றிய ஹெராயின் மதிப்பு ரூ.1.5 லட்சம் என கூறப்படுகிறது.

Related Stories: