சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: கடந்த 4 வாரத்தில் மட்டும் சிலிண்டருக்கு ரூ.125 விலை அதிகரிப்பு: இல்லத்தரசிகள் குமுறல்

சென்னை: சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு மாற்றி வருகிறது. இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றுகின்றனர். காஸ் சிலிண்டர் விலை மாதத்திற்கு ஒரு முறை என மாற்றப்பட்டு வருகிறது. ஆனால், சமீபகாலமாக மாதத்திற்கு 2 முறை சிலிண்டர் விலையை உயர்த்தி வருவது மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக கடந்த மாதம் மட்டும் 3 முறை சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பது. கடந்த மாதம் 4-ம் தேதி ரூ.25 அதிகரித்து ரூ.735ஆக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி 15ல் மேலும் ரூ.50 அதிகரித்து 785ஆக இருந்தது. பிப்ரவரி இறுதியில் ரூ.25 அதிகரிக்கப்பட்டு ரூ.810 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மேலும் ரூ.25அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போதைய விலை ரூ.835ஆக உள்ளது. பெட்ரோல், டீசலை தொடர்ந்து காஸ் சிலிண்டரின் விலையும் அதிகரிக்கப்பட்டிருப்பது மக்கள் தலையில் விழுந்த அடுத்த அடியாக பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதுபோதாததற்கு தற்போது வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையையும் ஏற்றி விட்டனர். இதன்காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை பெருமளவு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: